1996 ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவை புரட்டி போட்ட மிக முக்கியமான காலத்தால் அழிக்க முடியாத ஒரு சமூக அரசியல் படம் இந்தியன். அந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது 28 ஆண்டுகள் கழித்து இயக்குனர் ஷங்கர் மற்றும் உலகநாயகன் கமலஹாசன் மீண்டும் இணைய, லைகா ப்ரொடக்ஷன்ஸ் மிக பிரம்மாண்டமாக 400 கோடி செலவில் உருவாக்கியுள்ளது. இந்த படத்தில் சித்தார்த், எஸ் ஜே சூர்யா, ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், பாபி சிம்ஹா, விவேக், நெடுமுடி வேணு மற்றும் பலர் நடித்துள்ள இந்த படம் பல தடைகளை தாண்டி திரைக்கு வந்துள்ளது. முதல் பாகம் போலவே இந்தப் படமும் மிகச் சிறந்த படம் என்ற பெயரை வாங்கி உள்ளதா? என்பதை பார்ப்போம். முதல் பாகத்தின் பெயரை கெடுக்காமல் நல்ல படம் என்ற பாராட்டுக்களை பெற்றுத் தந்துள்ளதா? பார்ப்போம்.
படத்தின் கதைப்படி, சித்தார்த் மற்றும் அவரது நண்பர்கள் Barking Dogs என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்கள். அதில் இன்றைய சமூகத்தில் நடக்கும் பல அவலங்களை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார்கள். எவ்வளவு முயற்சித்தாலும் இந்த ஊழல்வாதிகளையும், தவறான வழியில் செயல்படுபவர்களையும் அவர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. ஒரு கட்டத்தில் இந்தியன் தாத்தா மீண்டும் வந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கும் அவர்கள் Comeback Indian என்ற ஹேஷ்டேக்கை உருவாக்குகிறார்கள். இது உலகம் முழுக்க இருக்கின்ற தமிழர்களை சென்று அடைகிறது. அதனை கவனித்த அவரது நண்பர் காளிதாஸ் ஜெயராம் இந்தியன் தாத்தா தைபே-யில் தான் இருக்கிறார், அவர் இருக்கும் இடம் எனக்கு தெரியும், அவரை இந்தியாவுக்கு வர வைக்க அவரிடம் நான் பேசுகிறேன் என்கிறார். இந்தியன் தாத்தா இந்தியா கிளம்ப, அரசின் கண்ணில் மண்ணை தூவி எப்படி இந்தியாவிற்குள் நுழைந்தார்? இளைஞர்களின் நோக்கம் நிறைவேறியதா? இந்தியன் தாத்தா என்ன செய்தார்? அவரை தேடி அலையும் சிபிஐ அதிகாரிகளால் இந்தியன் தாத்தாவை பிடிக்க முடிந்ததா? இந்தியன் தாத்தாவால் லஞ்சம், ஊழல் ஆகியவற்றை ஒழிக்க முடிந்ததா? மாற்றம் ஏற்பட்டதா? என்பதே மீதிக்கதை.
நாயகன் கமல்ஹாசன் இந்தப் படத்திலும் தசாவதாரம் போலவே பலவித கெட்டப்புகளில் படம் முழுக்க அவரது ராஜ்ஜியம் தான். இந்தியாவுக்கு வரும் அவரது அறிமுக காட்சியே அட்டகாசம். கப்பலில் நடக்கும் அந்த எபிசோட், கிளைமாக்ஸ் எபிசோட் என ஆக்ஷனில் பின்னுகிறார் இந்தியன் தாத்தா. சட்டை இல்லாமல் இந்தியன் தாத்தா வரும் அந்த காட்சி பலரையும் ஆச்சரியப்படுத்துகிறது. அந்த ஒற்றை சக்கர சைக்கிளில் நடக்கும் சேசிங் கட்சியும் ரசிக்க வைக்கிறது. ஆனால் பலவித மேக்கப்புகளில் வரும்போது மேக்அப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாமோ என்று தோன்றுகிறது. இந்தியன் 3 படத்தின் டிரைலரும், அதில் வரும் கமலின் இளமையான தோற்றமும் அடுத்த பாகத்துக்கு நம்மை ஏங்க வைக்கிறது.
சித்தார்த் படத்தின் இரண்டாவது ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு படம் முழுக்க வருகிறார். இந்தியன் தாத்தாவின் இளம் வயது Spiritual Character என்று சொல்லும் அளவுக்கு சமூகத்தில் நடக்கும் அவலங்கள் மீது சித்தார்த் காட்டும் கோபம் நம் மனதுக்குள் தேக்கி வைத்திருந்த கோபத்தை திரையில் காட்டுவது போலவே இருக்கிறது. இரண்டாம் பாதியில் ஒரு மிக முக்கியமான காட்சியில் நம்மை கட்டிப்போட்டு விடுகிறார். அவரின் நண்பர்களாக வரும் ப்ரியா பவானி ஷங்கர், ஜெகன், ரிஷிகாந்த் ஆகியோருக்கும் நல்ல நல்ல கதாபாத்திரங்கள். சித்தார்த்தின் காதலியாக ரகுல் ப்ரீத் சிங் ஒரு சில காட்சிகள் மட்டுமே வந்து போகிறார். படத்தில் சித்தார்த்துக்கு இணையாக மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா, இந்தியன் தாத்தாவை தேடிப் போகும் சிபிஐ அதிகாரியாக ஸ்கோர் செய்கிறார். இந்தியன் முதல் பாகத்தில் கிருஷ்ணசாமியாக வந்து அசத்திய நெடுமுடி வேணு, இந்த படத்திலும் இந்தியன் தாத்தாவை பிடிக்கும் முயற்சியில் மிக முக்கியமான ஒரு கருவியாக பயன்பட்டிருக்கிறார். அவர் கதாபாத்திரம் எழுதப்பட்ட விதமும் சிறப்பு. பாபி சிம்ஹா உடன் வரும் சிபிஐ அதிகாரியாக சின்ன கலைவாணர் விவேக், சிறப்பான கதாபாத்திரம். அவரது சில காமெடி ஒன்லைன்களும் நம்மை சிரிக்க வைக்கிறது.
நடிப்பு அரக்கன் என பல படங்களில் ஹீரோவையே தூக்கி சாப்பிட்ட எஸ் ஜே சூர்யாவுக்கு இந்த படத்தில் பெரிதாக நடிக்கும் அளவுக்கு கதாபாத்திரமும் அமையவில்லை. ஒரு சில காட்சிகள் மட்டுமே வந்து போகிறார். அடுத்த பாகத்தில் அவருக்கான முக்கியத்துவம் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கலாம். மற்றபடி படத்தில் சமுத்திரக்கனி, டெல்லி கணேஷ், தம்பி ராமையா, மாரிமுத்து, குல்சன் குரோவர், பிரம்மானந்தம், பியூஷ் மிஷ்ரா என படம் முழுக்கஏகப்பட்ட நட்சத்திரங்கள். இயக்குனர் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாகவே செய்து விட்டு போகிறார்கள்.
படத்தில் பணத்தைக் கொட்டி இழைத்திருக்கும் பல பிரமாண்டமான செட்கள் உண்மையில் செட்களா இல்லை நிஜ இடங்களா என்று நம்மை மெய் மறக்க செய்கின்றன, கலை இயக்குனர் முத்துராஜ் உழைப்பு அபரிமிதமானது. அதேபோல் ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது. ஆக்ஷன் காட்சிகளையும் பிரம்மாண்டமான காட்சிகளையும் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார். படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்துக்கு மிகவும் கடினமான ஒரு வேலை என்றே சொல்லலாம். ஏனெனில் எந்த காட்சிகளை இந்த பாகத்தில் வைப்பது எந்த காட்சிகளை அடுத்த பாகத்தில் வைப்பது என்ற மிக முக்கியமான முடிவை இயக்குனருடன் கலந்து ஆலோசித்து அவர் செய்திருக்கும் எடிட்டிங் மிக அசாத்தியமானது. ஆனாலும் இந்த படத்தில் ஒரு சில காட்சிகளை கத்தரித்திருக்கலாம், படத்தின் நீளத்தை குறைத்து இருக்கலாம் என்பதே நம்முடைய கருத்து.
தமிழ் சினிமாவில் பல படங்களை தன் தோளில் சுமந்து காப்பாற்றும் அனிருத் இந்த படத்திலும் மிகப்பெரிய பங்கு வகித்திருக்கிறார். அவரது பாடல் மற்றும் இசை படத்துக்கு மிக முக்கியமான பலம் என்றே சொல்லலாம். ஆனாலும் சிலர் இந்தியன் முதல் பாகத்துடன் ஒப்பிட்டு இந்த பாடல்களும் இசையும் அந்த அளவுக்கு இல்லையே என்று சொல்லலாம். ஆனாலும் இந்த பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்து இருக்கின்றன. அனிருத் தன் பணியை செவ்வனே செய்திருக்கின்றார்.
இயக்குனர் ஷங்கர் கேரியரில் இந்தியன் 2 மிக முக்கியமான படம் என்றே சொல்லலாம். ஏனெனில் பல தடைகள், பல சோதனைகளை கடந்து இந்த படத்தை மிக வெற்றிகரமாக முடித்து திரைக்கு கொண்டு வந்ததே அவரின் முதல் சாதனை என்று சொல்லலாம். ஷங்கர் மேக்கிங்கில் தான் ஒரு ஆகச்சிறந்த இயக்குனர் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருக்கிறார். ஆனால் படத்தின் கதை மற்றும் திரைக்கதையில் பழைய ஷங்கர் நம்மை விட்டு காணாமல் போய்விட்டாரோ என்ற எண்ணம் கடந்த சில படங்களில் தோன்றியது. அந்த எண்ணம் இந்தப் படத்தில் இன்னும் கொஞ்சம் வலுவாகி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். பல காட்சிகள் அவரது முந்தைய படங்களின் காட்சிகளை நினைவூட்டுவதும், அடுத்து என்ன காட்சி என முன் கூட்டியே தெரியும் அளவுக்கு மிகவும் சாதாரணமாக திரைக்கதை அமைந்ததும் படத்தின் மிகப்பெரிய பலவீனம். படத்தில் முக்கியமாக ஒரு சில காட்சிகள் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. குறிப்பாக இந்தியன் தாத்தா இந்தியா திரும்பி வரும் ஏர்போர்ட் காட்சியும் இரண்டாம் பாதியில் சித்தார்த் வீட்டில் நடக்கும் ஒரு சில காட்சிகளும், கிளைமாக்ஸூக்கு முன் இந்தியன் தாத்தா, சித்தார்த் இடையே நடக்கும் உரையாடல் காட்சி ஆகியவை ஓரளவுக்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கின்றன. படத்தின் இறுதியில் வரும் இந்தியன் 3 ட்ரெய்லர் பார்க்கும்போது அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து இருப்பது நிச்சயம். ஆனால் அந்த பாகத்தின் சில காட்சிகளை இந்த படத்திலேயே இணைத்து இருந்தால் இந்த படமும் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும் என்பது அனைவரது கருத்தாகவும் உள்ளது. முதல் பாகத்தை மனதில் வைக்காமல் தனி ஒரு படமாக நினைத்து தியேட்டருக்கு சென்றால் கண்டிப்பாக இந்த படத்தை ஒரு முறை பார்த்து ரசிக்கலாம்.