தமிழ் சினிமாவில் வழக்கமான காதல், ஆக்ஷன் கதைகளிலிருந்து விலகி, ஃபேண்டஸி, ஹாரர், காமெடி எனப் பல அம்சங்களை ஒன்றாக இணைத்து வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘ட்ரோன்ஸ்’. பன் பட்டர் ஜாம் என்ற நல்ல படத்தை கொடுத்த ராகவ் மிர்தாத் இயக்கியிருக்கும் இரண்டாவது படம். முந்தைய படம் நல்ல படம் என்றாலும் பெரிய வரவேற்போ, வெற்றியோ கிடைக்கவில்லை. ஆனால் திறமையான இயக்குனர் எனட்ர பெயரை பெற்றார். தற்போது சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், டிராவிட் செல்வம், தேவதர்ஷினி, ஆர்.ஜே. தீபக் உள்ளிட்டோரை வைத்து, வித்தியாசமான கதைக்களத்தில் எடுத்துள்ள இந்த ட்ரோன்ஸ் படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட மூன்று நண்பர்களான ட்ராவிட் செல்வம், அஞ்சலி நாயர், தீபக் ஆகியோர் ‘பிளாக் ஹோல்’ என்று அழைக்கப்படும் விஞ்ஞானி குரேஷி வீட்டில் தஞ்சமடைகின்றனர். அங்கிருந்து ஒரு ட்ரோன் மூலம் மேற்கொள்ளப்படும் பயணம், அவர்களை ஒரு மர்மமான உலகத்திற்குள் அழைத்துச் செல்கிறது. அங்கு அழகான சிற்பங்களை உருவாக்கும் சித்தி இத்னானி மிகப்பெரிய அழகி. அவரை பார்க்கும் ஆண்கள் எல்லோருமே அவரது அழகில் மயங்கி விடுகிறார்கள். சித்தி இத்னானியுடன் தொடர்புடைய சூனியக்காரி தேவதர்ஷினி, அங்கு மர்மங்கள் நிறைந்த பொம்மை வீடு எனப் பல விசித்திரமான விஷயங்கள் கதையில் இடம்பெறுகின்றன. காதல், மாயாஜாலம், அமானுஷ்யம் என ஒன்றுக்கொன்று தொடர்புடைய சம்பவங்கள் நண்பர்களை இக்கட்டான சூழலுக்குள் தள்ளுகின்றன. அதிலிருந்து மூன்று நண்பர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள்? இதற்கிடையே நடக்கும் போலீஸ் இன்வெஸ்டிகேஷன் என போகும் கதை, அதன் பிறகு என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.
சின்ன பட்ஜெட்டில் நல்ல கான்செப்ட் மற்றும் கதையை எடுத்துக் கொண்டு கதைக்கு பக்கபலமாக நடிகர்களையும் தேர்வு செய்திருக்கிறார் இயக்குனர். பார்க்கும் ஆண்களை எல்லாம் அழகில் மயங்கி காதலில் விழ வைக்கும் அழகியாக சித்தி இத்னானி, கன்னக்குழியோடு பார்க்கும் ரசிகர்களையும் விழ வைக்கிறார். பிரக்ருதி என்ற கதாபாத்திரத்தில் மிக அழகாகப் பொருந்தியிருக்கிறார். அவரது தோற்றமும், உடையும், நடிப்பும் கதாபாத்திரத்திற்கு தேவையான ஈர்ப்பைக் கொடுக்கின்றன.
அஞ்சலி நாயர் நிறத்தால் தான் ஒதுக்கப்படுவதாக நினைத்து வருந்தும் கதாபாத்திரம். தன் காதல் கூட அழகால் நிராகரிக்கப்படுவதை நினைத்து வலியோடு, இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கிளைமாக்ஸில் பேசும் வசனத்தில் அப்ளாஸ் வாங்குகிறார். டிராவிட் செல்வம் கதையின் நாயகனாக அவரது பங்களிப்பை சிறப்பாக வழங்கியிருக்கிறார். ஆர்.ஜே. தீபக்கின் நகைச்சுவை ஆங்காங்கே சிரிக்க வைக்கிறது. தேவதர்ஷினி சூனியக்காரி கதாபாத்திரத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குரேஷி விஞ்ஞானியாக வரும் காட்சிகள் சில இடங்களில் நகைச்சுவைக்கு உதவுகின்றன. சினிமாவாலா சதீஷ் நடிகராகவும் அசத்தியிருக்கிறார். கிளைமாக்ஸில் அவர் பேசும் வசனம் முதலில் காமெடியாக ஆரம்பித்து பின் அதுவே ஸ்பெஷலாகவே மாறுகிறது.
ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவு படத்தின் கற்பனை உலகத்தைத் திரையில் கொண்டு வர உதவுகிறது. ஹரி எஸ்.ஆரின் இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது. குறிப்பாகப் பின்னணி இசையில் சில காட்சிகளுக்குத் தேவையான உணர்வைக் கொடுக்கிறது. கலை இயக்குனரின் பங்கும் அலாதியானது. சதீஷ் சூர்யாவின் படத்தொகுப்பு இன்னும் வேகமாகவும் இறுக்கமாகவும் அமைந்திருக்கலாம். படத்தின் நீளத்தை மட்டும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
இயக்குனர் ராகவ் மிர்தாத். எந்த ஜானரில் அடங்காத ஒரு புதிய கற்பனை உலகத்தை உருவாக்க முயற்சித்திருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். காமெடி, ஹாரர், ஃபேண்டஸி ஆகியவற்றுடன் அழகு, நிறம் போன்றவற்றைப் பற்றியும் பேசும் ஒரு சமூகப் பார்வையையும் இணைக்க முயன்றிருப்பது கவனிக்கத்தக்கது. மினியேச்சர், லூப், வார்ம் ஹோல், பிளாக் ஹோல், டைமென்ஷன் என ஒரு புறம், சூனியக்காரி என இன்னொரு புறம் என பல விஷயங்களை ஒரே படத்தில் பார்த்ததும் ஆச்சர்யம். 90’ஸ் கிட்ஸ் டிவியில் பார்த்து ரசித்த பல விஷயங்களை மீண்டும் திரையில் பார்த்த உணர்வை கொடுத்திருக்கிறார் இயக்குனர். மொத்தத்தில் தமிழ் சினிமாவில் ‘ட்ரோன்ஸ்’ ஒரு மிக மிக வித்தியாசமான முயற்சி. குழந்தைகளை அழைத்துக் கொண்டு குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம்.
SK CINEMAS Rating: 3.5 / 5

