TN 2026 – விமர்சனம்!

தலைவர் தம்பி தலைமையில் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு கண்ணன் ரவி தயாரிப்பில் தம்பி ராமையா கதை, வசனத்தில் அவரது மகன் உமாபதி இயக்கியிருக்கும் படம் தங்க நட்சத்திரம் 2026 (TN 2026). நட்டி நட்ராஜ் நாயகனாக நடித்த இந்த படம் டீசர் வெளியானதில் இருந்தே எதிர்பார்ப்பையும், சர்ச்சையையும் தூண்டி இருக்கிறது. ஒரு மிகப்பெரிய நடிகரை குறி வைத்து எடுக்கப்பட்ட படம் எனவும் விமர்சனங்கள் இருக்கிறது. அப்படி ஏதும் படத்தில் இருக்கிறதா? படம் எப்படி இருக்கு? இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, சினிமாவில் புகழில் உச்சியில் இருந்து ஒரு நடிகர் அரசியலுக்கு வர எடுக்கும் முயற்சிகளும், அதன் பின்னணியுமே கதை. வட மாநிலத்தில் இருந்து பிழைப்புக்கு தமிழ்நாட்டுக்கு வந்து நடிகராக அறிமுகம் ஆகிறார் நட்டி. பொள்ளாச்சியில் மிகப்பெரிய ஜமீன்தாராக இருக்கும் தம்பி ராமையா பெரிய எம்ஜிஆர் ரசிகர். குல்கந்து குமார் என்ற நட்டி பெரிய நடிகராக வருவார் என கணித்து அவருக்கு ஆதரவாக இருக்கிறார் தம்பி ராமையா. உன்னை ஒரு எம்ஜிஆராக மாற்றுகிறேன் என சொல்லும் தம்பி ராமையா, நட்டியை அரசியலுக்கும் இழுக்கும் வேலையை செய்கிறார். அப்படி குல்கந்து குமார் என்ற நடிகர் தனக்கு இருக்கும் புகழை அரசியலுக்கு பயன்படுத்துவதும் அதனால் வரும் விளைவுகளும் தான் படத்தின் மீதிக்கதை.

நாயகன் நட்டி. அடிப்படையிலேயே ரஜினி ரசிகரான இவர் நடிப்பு எப்போதுமே ரஜினியை போலவே துடிப்பாக இருக்கும். ஆளும் வாட்ட சாட்டமாக எப்போதும் எனர்ஜியோடு இருப்பவர். வடமாநிலத்தில் இருந்து பிழைக்க தமிழ்நாட்டுக்கு வந்தவராக, முதல் பாதி முழுக்க மிக்ஸிங் தமிழ் பேசுகிறார். இரண்டாம் பாதியில் அவருக்கே உரிய தமிழில் பிச்சி உதறுகிறார். அவர் கூடவே படம் முழுக்க பயணிக்கும் கதாபாத்திரத்தில் தம்பி ராமையா. ஆரம்ப காட்சிகளில் பெரும் ஜமீன்தாராக மிடுக்கும்டன் சுற்றும்போதும், இரண்டாம் பாதியில் ஒரு அடிமை போல நிற்கும் காட்சிகளிலும் அவருக்கே உரித்தான நடிப்பால் ரசிக்க வைக்கிறார்.

எம்.எஸ்.பாஸ்கர் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் குல்கந்து குமார் ரசிகராக, அவர் அரசியலில் உடன் நிற்கும் தொண்டனாக, முக்கிய நிர்வாகியாக கலக்கியிருக்கிறார். இளவரசு ஒரு வழக்கறிஞராக, குல்கந்து குமார் உடன் அரசியலில் நிற்கும் இன்னொரு முக்கிய புள்ளியாக நல்ல நடிப்பு. சாந்தினி சின்ன ஒரு கதாபாத்திரம் என்றாலும் தயங்காமல் நடித்து தந்திருக்கிறார். ஷ்ரித்தா நாயகியாக அவர் பங்கை செவ்வனே செய்திருக்கிறார். ரெடின் கிங்க்ஸ்லீ, ஸ்ரீஜா ரவி, சிறப்புத் தோற்றத்தில் வரும் சாண்டி மாஸ்டர், யாஷிகா ஆனந்த் உட்பட மற்ற நடிகர்கள் எல்லாருமே அவரவர் பங்கை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

பிஜி முத்தையா ஒளிப்பதிவு படத்துக்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கிறது. அந்த பீரியட் காட்சிகளையும் அதற்கேற்ற உடை, ஒப்பனை மூலம் நன்றாகவே காட்டியிருக்கிறார்கள். டர்புகா சிவா இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசை பொலிட்டிகல் சடையர் படத்துக்கு ஏற்ற வகையில் ரசிக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது.

அரசியலும் வரலாறும் தம்பி ராமையாவுக்கு கைவந்த கலை. அதை வைத்து ஒரு அரசியல் பகடி கதையை எழுதி இருக்கிறார். பல வரலாற்று விஷயங்களை இந்த கதையில் ஆங்காங்கே தூவி விட்டு படம் பார்க்கும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுகிறார். அதை சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் இன்னும் சுவாரஸ்யமாக்குகிறார் இயக்குனர் உமாபதி. அரசியலோடு தொடர்புடைய நடிகர்கள் அத்தனை பேரையும் இந்த படத்தில் படம் பார்க்கும் போது நம்மால் நினைக்காமல் இருக்கவே முடியாது. அதே சமயம் அவர்கள் மீது தாக்குதலாக இல்லாமல் நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார்கள். பல வசனங்கள் அத்தகைய விஷயங்களை நினைவு படுத்துபவை தான்.

படத்தில் வரும் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றுக்கு தியேட்டரில் ஆரவாரம். அமைதிப்படை முதற்கொண்டு எத்தனையோ விதமான அரசியல் படங்கள் வெளியாகி இருக்கின்றது. அதில் இந்த TN 2026 படமும் ஒரு தனித்துவமான இடத்தை பிடித்திருக்கிறது. கிளைமாக்ஸ் எப்படி இருக்கும்? 2026 அரசியல் முடிவை சொல்வார்களா என நினைக்கும் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் உண்டு. தியேட்டரில் கும்பலாக சென்று சிரித்து ரசித்து விட்டு வரலாம். அரசியலை காமெடி படங்களின் மூலமும் ரசிக்கும்படி தர முடியும் என தலைவர் தம்பி தலைமையில் மூலம் நிரூபித்த தயாரிப்பாளர் கண்ணன் ரவி இந்த படத்தையும் ரசிக்கும் படமாக தந்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *