பியார் பிரேம காதல் படத்தின் வெற்றிக்குப் பின் இயக்குனர் இளன் இயக்கியிருக்கும் படம் ஸ்டார். லிஃப்ட், டாடா வெற்றிகளுக்கு பிறகு ஹாட்ரிக் வெற்றியை நோக்கிய கவினின் பயணத்தில் இந்த படம் வெற்றிப்படமாக இருக்குமா? அல்லது அவரது கேரியரில் ஒரு மைல்கல் படமாக இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு திரையுலகில் நிலவுகிறது. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும், படத்தின் ட்ரைலரும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா இந்த ஸ்டார்? நடிகர் கவின் ஸ்டார் கவின் ஆனாரா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, சின்ன வயதில் இருந்தே தன் மகன் கவினை நடிகனாக்கி பார்க்க ஆசைப்படுகிறார் அவரது தந்தை லால். சின்ன சின்ன வாய்ப்பகளை கூட தேடிப் பிடித்து கவினை முயற்சி செய்ய வைக்கிறார். அவரது அம்மாவுக்கோ மகன் சினிமா சினிமா என இருந்து வாழ்க்கையை தொலைத்து விடுவானோ என்ற பயம். ஒரு கட்டத்தில் மும்பையில் உள்ள ஒரு ஆக்டிங் ட்ரைனர் ஒரு மாஸ்டர் கிளாஸ் நடத்த, அதில் சேர மும்பை போகிறார் கவின். போன இடத்தில் பயிற்சியில் சேரும் வாய்ப்பு கிடைக்காமல் போக, அத்துடன் அவர் பணம் எல்லாம் தொலைந்து போகிறது. அங்கேயே கிடைத்த வேலைகளை எல்லாம் செய்து, அந்த மாஸ்டரிடம் எப்படியோ முயற்சி செய்து அவரிடம் பயிற்சியையும் பெறுகிறார் கவின். சென்னை திரும்பிய கவினுக்கு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பும் அமைகிறது. அந்த நேரத்தில் நடக்கும் ஒரு திடீர் சம்பவத்தால் கவின் கனவு சிதைந்து போகிறது. எல்லாவற்றையும் உதறித் தள்ளி கனவை அடைகிறாரா கவின்? ஸ்டார் ஆனாரா? என்பதே மீதிக்கதை.
ஒரு நல்ல கதை தனக்கு தேவையானவற்றை தானே தேடிக் கொள்ளும் என்பார்கள். அப்படி தான் கவின் இந்த படத்துக்குள் வர, வேண்டிய பட்ஜெட் கிடைக்க, நல்ல நல்ல நடிகர்கள், யுவன் ஷங்கர் ராஜா என எல்லாமே இந்த கதை தேர்ந்தெடுத்துக் கொண்டது தான். கவின் ஒரு நடிகராக அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளார். ரொமான்ஸ், காமெடி, ஆக்ஷன், எமோஷன் என எல்லாவற்றிலும் ஸ்கோர் செய்கிறார். அதிலும் மிக நீண்ட காட்சியிலும் தன்னால் ஸ்கோர் செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். கிளைமாக்ஸில் சிங்கிள் ஷாட் காட்சியே அதற்கு உதாரணம். பல்வேறு தோற்றங்களில் வரும் கவின் ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஏற்ற நடிப்பை வழங்கியுள்ளார். ஒரு ஸ்டாராக மிளிர்கிறார்.
கவின் அப்பாவாக லால், மகனின் உற்ற நண்பனாக, கனவுக்கு விதை போட்டு அதை வளர்த்தெடுக்கும் ஒரு கதாபாத்திரம். சமீப காலங்களில் பார்க்காத ஒரு அப்பாவாக, இப்படி ஒரு அப்பா கிடைக்க மாட்டாரா என ஏங்க வைக்கிறார். அம்மாவாக வரும் கீதா கைலாசம் சாதாரண நம் வீட்டு அம்மாக்களை கண் முன் நிறுத்துகிறார். அப்படி ஒரு யதார்த்த நடிப்பு.
நாயகிகளாக அதிதி மற்றும் பிரீத்தி. இருவருமே தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பிரீத்தி கல்லூரி கால காதலியாக இளமை ததும்பும் மீராவாக நடித்திருக்கிறார். பாடல் காட்சிகளிலும் கவின் பிரீத்தி காம்போ ரசிக்க வைக்கிறது. அதிதி உண்மையான காதல் எப்படி இருக்கும், வாழ்க்கையின் யதார்த்தமான பெண்ணை நம் கண் முன் நிறுத்துகிறார். உண்மையில் இப்படி பெண் நம் வாழ்க்கையில் அமைய மாட்டாரா என இளைஞர்களை ஏங்க வைக்கும் கதாபாத்திரம். கவின் நண்பராக வரும் தீப்ஸ் , பியார் பிரேம காதல் படத்துக்கு பிறகு ஒரு நல்ல கதாபாத்துரம். கவின் மாமாவாக வரும் மாறன், அதிதியின் அப்பாவாக வரும் பாண்டியன், நடிகராக வரும் சுகுமார் என ஒவ்வொரு கதாபாத்திரமும் நம் வாழ்வில் அன்றாடம் பார்க்கும் கதாபாத்திரங்களின் சிறு துளிகள்.
எழில் அரசுவின் ஒளிப்பதிவில் பல்வேறு காலங்களை காட்டிய விதம் அருமை. சென்னை, மும்பை என நகரங்களின் பிரமாண்டம், நடுத்தர வர்க்க மக்களின் வீடுகளின் யதார்த்தம் என சிறப்பான ஒளிப்பதிவு. வினோத் ராஜ்குமார் ஆர்ட் டைரக்ஷனும் அதற்கு பக்கபலம். பிரதீப் ராகவ் எடிட்டிங் படத்தை அதன் ஜீவன் குறையாமல் காப்பாற்றியிருக்கிறது. கவின் ஃபோனில் தன் தந்தையிடம் பேசும் காட்சியில் அதை அப்படியே வைத்தது காட்சியின் வீரியத்தை அதிகப்படுத்தி இருக்கிறது.
யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்துக்கு உயிர்நாடி. சமீப காலங்களில் வந்த யுவன் படங்களில் ஸ்டார் படத்தின் இசை தனித்து நிற்கும். அவரது உயிரோட்டமான இசை படத்துக்குள் நம்மை ஒன்ற செய்கிறது. காலேஜ் சூப்பர் ஸ்டார்ஸ், மெலோடி பாடல்களில் எழுந்து ஆட வைக்கிறார், விண்டேஜ் லவ் பாடலில் காதல் ரசம் சொட்டுகிறது. பின்னனி இசையில் படத்தை அடுத்த தளத்துக்கு தூக்கிச் சென்று விட்டார் யுவன்.
இளன் எடுத்துக் கொண்ட கதையும், அதற்கு அவர் தேர்ந்தெடுத்த விஷயங்களும் கன கச்சிதம். Universe will always falls in love with stubborn heart என்ற அவரது வாசகம் அவருக்கே பொருத்தம். இந்த ஸ்டார் படத்தை எடுத்தே தீருவேன் என அவர் விடாமுயற்சியுடன் எடுத்த முடிவு தான் இந்த ஸ்டார் படத்துக்கு கிடைத்த வெற்றி. யுவன் உடன் சேர்ந்து அவர் எடுத்த ஒரு துணிச்சலான முடிவுக்கு ஹாட்ஸ் ஆஃப். குழப்பமோ அல்லது சமரசமோ இல்லாத அவரது விஷன் ஸ்டார் என்ற சிறந்த படத்தை தமிழ் சினிமாவுக்கு கொடுத்திருக்கிறது என்றால் மிகையாகாது. கனவை சுமந்து அதை நோக்கி ஓடும் ஒவ்வொருவரும் ஸ்டார் தான்.