7/G – திரை விமர்சனம்

ஹாரூன் இயக்கத்தில் சோனியா அகர்வால், ஸ்மிருதி வெங்கட், சித்தார்த் விபின், சுப்ரமணியம் சிவா ஆகியோர் நடித்துள்ள படம் ‘7ஜி. சித்தார்த் விபின் இசையமைக்க, இயக்குநர் ஹாரூன் தனது ட்ரீம் ஹவுஸ் பேனர் மூலம் படத்தை தயாரித்துள்ளார். ஹாரர் திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படம் தனித்துவமான அனுபவத்தை தந்ததா? சொல்ல வந்த கருத்தை சிறப்பாக சொல்லியிருக்கிறதா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, ஸ்மிருதி வெங்கட் தன் கணவர் மற்றும் மகனுடன் புது வீட்டுக்கு குடியேறுகிறார். சொந்தமாக தங்களுக்கென ஒரு வீடு வேண்டும் என்ற கனவு இந்த 7/ஜி என்ற வீட்டை வாங்கியவுடன் நிறைவேறியதாக மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். ஸ்மிருதியின் கணவரை ஒரு தலையாக காதலிக்கும் ஸ்நேகா குப்தா அவரை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் பில்லி சூனியம் வைக்கிறார். இந்த நிலையில் ஸ்மிருதியின் கணவர் வேலை நிமித்தமாக சில நாட்கள் பெங்களூர் சென்று விட தன் மகனுடன் தனியாக இருக்கிறார் ஸ்மிருதி. அப்போது ஏதோ சில அமானுஷ்யமான விஷயங்கள் அந்த வீட்டில் நடக்கிறது. அந்த அமானுஷ்ய சக்தி என்ன? ஏன் இவர்களை சுற்றி, அந்த வீட்டை சுற்றி சுற்றி வருகிறது? அதில் இருந்து மீண்டார்களா? சோனியா அகர்வால் என்ன கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்? என்பதே மீதிக்கதை.

கதையின் நாயகி சோனியா அகர்வால். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நன்றாகவே செய்திருக்கிறார். தன் மகனுக்காக தியாகம் செய்யும் காட்சி, தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவனை பழிவாங்க அவர் எடுக்கும் முயற்சி என நன்றாகவே நடித்துள்ளார். இன்னொரு நாயகியாக வரும் ஸ்மிருது வெங்கட். குடும்பத்தலைவியாக, கருணையுடன் உதவ முயற்சி செய்யும் ஒரு நல்ல பெண்ணாக சிறப்பாகவே நடித்துள்ளார்.

சித்தார்த் விபின் படத்தின் வில்லனாக ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரை பார்க்கும்போது கொஞ்சம் கூட ஒரு வித வில்லத்தனத்தை உணர முடியவில்லை. காமெடி வில்லனாக கூட ஏற்க முடியவில்லை. அதற்கு பதிலாக சீரியஸ் வில்லனாக யாரையாவது நடிக்க வைத்திருக்கலாம். ஸ்நேகா குப்தா கவர்ச்சிக்காக வந்து செல்லும் ஒரு நாயகி. மற்றபடி சிறுவர்களாக நடித்தவர்கள் நல்ல தேர்வு. கல்கி ராஜா, சுப்ரமணியம் சிவா, KSK செல்வா ஆகியோரும் வந்து செல்கிறார்கள். படத்தில் நாயகி உட்பட எந்த ஒரு கதாபாத்திரமும் அழுத்தம் இல்லாமல் ஏதோ வந்து போகிறது.

கண்ணாவின் ஒளிப்பதிவு நன்றாகவே இருக்கிறது. முழுக்க அபார்மெண்டை சுற்றியே நடக்கும் இந்த கதைக்கு ஏற்ற ஒளிப்பதிவு. சித்தார்த் விபின் இசையில் பாடல்கள் சுமார். பின்னணி இசையும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை என்பது இன்னொரு குறை.

இயக்குனர் ஹாரூண் ஒரு ஹாரர் திரில்லர் படத்தை இயக்குகிறார், 7/ஜி தலைப்பு என்பதை கேள்விப்பட்ட உடனே இது ஒரு 13பி டைப்பில் மிரட்டலான படமாக இருக்குமோ என எதிர்பார்த்தால் ஒரு சராசரி படமாகவே முடிவடைகிறது. சோனியா அகர்வால் சம்பந்தப்பட்ட ஃபிளாஷ்பேக் காட்சிகள் கொஞ்சம் படத்தை தூக்கி நிறுத்த முயற்சிக்கிறது. வில்லன் பின்னணி, வில்லனின் நோக்கம் பெரிய அளவில் இல்லாததும், அதற்கான பொருத்தமான நடிகர் இல்லாததும் படத்தை இன்னும் கொஞ்சம் கீழே இறக்குகிறது. ஹாரர் எமோஷன் என்ற பாணியில் உருவானது பெரும்பாலானோரை கவருமா என்பதை பொருத்திருந்து தான் பர்க்க வேண்டும். ஹாரர் காமெடியாக இருந்திருந்தால் கூட இன்னும் பலரை தியேட்டரை நோக்கி இழுத்திருக்கலாம். மேலும் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் கொஞ்சம் நல்ல படமாக அமைந்திருக்க வாய்ப்பு உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *