‘I Am Game’ முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னர் – துல்கர் சல்மான்!

துல்கர் சல்மான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “I Am Game” திரைப்படத்தின் பிரம்மாண்டமான முன் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், வரும் செப்டம்பர் 3, 2026 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது என்பது அறிவிக்கப்பட்டது.

படம் வெளியாகவுள்ள ஒவ்வொரு மொழியிலும் தீவிரமான விளம்பரப் பணிகளை படக்குழு உற்சாகமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், “I Am Game” படத்தின் தமிழ் பதிப்பை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான முன் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டு படத்தை உற்சாகமாக விளம்பரப்படுத்தினர். இந்நிகழ்வில் படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு “I Am Game” திரைப்படம் குறித்தும், படத்தில் பணியாற்றிய அனுபவங்கள் குறித்தும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் நடிகர் கதிர் பேசுகையில், “‘I Am Game’ படம் நிறைய சர்ப்ரைஸ் அம்சங்களைக் கொண்ட ஒரு வித்தியாசமான படமாக இருக்கும். டிரெய்லரில் நீங்கள் பார்த்ததைத் தாண்டி படத்தில் இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களுக்கு ஒரு அனுபவமாக அமையும் வகையில் முன்கூட்டியே திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் ஒளிப்பதிவும் முக்கிய அம்சமாக இருக்கும்.

இந்தப் படத்தில் கிரிக்கெட் கேப்டனாக நடித்துள்ளேன். ஆனால் இதற்கு முன்பு நான் கிரிக்கெட் விளையாடிய அனுபவமே மிகக் குறைவு. பள்ளிக் காலத்தில் பேட் கிரிக்கெட் விளையாடியதோடு சரி; என்னை கேப்டனாக நடிக்க வைத்த இயக்குநரின் தைரியம் உண்மையிலேயே ஆச்சரியமானது. இந்தப் படத்திற்காக கிரிக்கெட்டையும் புதிதாகக் கற்றுக்கொண்டு நடித்தேன். இதற்குப் பிறகு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறலாம் என்ற அளவுக்கு அந்த அனுபவம் இருந்தது,”

மேலும், “இந்தப் படத்திற்குப் பின்னால் மிகப்பெரிய உழைப்பும் நம்பிக்கையும் இருக்கிறது. குறிப்பாக, புதிய கதைகள் மற்றும் வித்தியாசமான முயற்சிகளில் ரிஸ்க் எடுக்கும் துல்கர் சல்மானின் சினிமா மீதான ஆர்வம் மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது. வரும் செப்டம்பர் 3-ம் தேதி வெளியாகும் ‘I Am Game’ படத்தை ரசிகர்கள் அனைவரும் ஆதரிப்பார்கள் என நம்புகிறோம்,” என்றார்.

நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் பேசுகையில், “சிறு வயதிலிருந்தே சினிமாவை ரசித்து வளர்ந்த எனக்கு, ஒரு படம் பார்க்கும்போது ஏற்படும் உணர்வும் தாக்கமும் மிகவும் முக்கியம். அந்த வகையில், ‘I Am Game’ படத்தின் கதையை இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் முதன்முறையாக கூறியபோதே, இதில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று உடனடியாக முடிவு செய்தேன்.

இந்தப் படத்தில் எனது கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானதாகவும், எனது மனதைத் தொட்டதாகவும் இருந்தது. படப்பிடிப்பின்போது குறிப்பாக ஹைதராபாத்தில் நடைபெற்ற நீண்ட ஷெட்யூல் எனக்கு ஒரு சிறந்த பயிற்சியைப் போன்ற அனுபவமாக அமைந்தது. ஒரு காட்சிக்குத் தேவையான உணர்வை மிகக் குறுகிய நேரத்தில் வெளிப்படுத்த வேண்டியிருந்தது சவாலாக இருந்தாலும், அது நடிப்பில் எனக்கு நிறைய கற்றுத்தந்தது. துல்கர் சல்மானை சந்தித்தது அவருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம்.

படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும், படப்பிடிப்பு முடிவில் அனைவரும் ஒரு குடும்பமாக மாறிவிட்டோம். டிரெய்லரில் சில கதாபாத்திரங்களையே ரசிகர்கள் பார்த்திருப்பார்கள்; ஆனால் முழுப் படத்தைப் பார்க்கும்போது இந்தப் படக்குழுவின் ஒற்றுமையும் உழைப்பும் ரசிகர்களுக்குப் புரியும்,” அமைவருக்கும் நன்றி என்றார்.

நடிகர் ஆண்டனி வர்கீஸ் பேசுகையில், “சென்னையில் நடைபெறும் என்னுடைய முதல் நிகழ்ச்சி இது. ‘I Am Game’ படத்தின் தமிழ் விளம்பர நிகழ்வுக்காக இங்கு வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தமிழில் என்னை ரசிகர்கள் எப்படி வரவேற்பார்கள் என்பதை அறிய ஆவலுடன் இருக்கிறேன். வரும் செப்டம்பர் 3-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்திற்கு தமிழ் ரசிகர்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். துல்கர் சல்மான் மிக அழகான தயாரிப்பாளர், மிகப்பெரிய நடிகர், மிகச்சிறந்த மனிதர் என் நெருங்கிய நண்பர். அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சி.

இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் எனது நெருங்கிய நண்பர். அவருடன் பணியாற்றிய அனுபவம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. படப்பிடிப்பின்போது எங்களுக்குள் இருந்த நட்பும் நகைச்சுவையான தருணங்களும் இந்தப் படப்பிடிப்பை மறக்க முடியாத அனுபவமாக மாற்றியது. எனது கதாபாத்திரம் குறித்து தற்போது அதிகம் சொல்ல முடியாது; படத்தைப் பார்க்கும்போது ரசிகர்களுக்கு அது ஒரு சிறப்பான அனுபவமாக இருக்கும்,” என்றார்.

நடிகர் துல்கர் சல்மான் பேசுகையில், “நான் எந்தப் படத்தின் விளம்பரத்திற்காக சென்னைக்கு வந்தாலும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை நேரடியாகச் சந்தித்து படத்தின் காட்சிகளையும் முக்கிய அம்சங்களையும் பகிர்ந்துகொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். படம் உங்களுக்குப் பிடித்திருந்தால், நீங்கள் நிச்சயம் அதற்கு ஆதரவு அளிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு.

‘I Am Game’ படத்தைப் பார்க்கும்போது, அது கிட்டத்தட்ட ஒரு தமிழ் படம் போன்ற உணர்வை ரசிகர்களுக்கு ஏற்படுத்தும். இதில் ஏராளமான தமிழ் நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும், எங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் இதுவரை உருவான மிகப்பெரிய பட்ஜெட் மற்றும் பிரம்மாண்டமான தயாரிப்பு இதுதான்.

படத்தில் நடித்துள்ள கதிரின் நடிப்பு மிகவும் இயல்பாகவும் தீவிரமாகவும் அமைந்துள்ளது. குறிப்பாக, படத்தில் அவர் நடித்திருக்கும் கதாபாத்திரத்தில் மிகவும் நம்பகத்தன்மையுடன் நடித்துள்ளார். மிஷ்கின் இந்தப் படத்தின் முக்கியமான அங்கம். அவரது அளவுக்கான உற்சாகமும் எனர்ஜியும் இன்றைய இளம் தலைமுறையினரிடமே அரிதாகத்தான் பார்க்க முடியும்.

சம்யுக்தா விஸ்வநாதனுக்கு இந்தப் படம் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமையும். ஆண்டனி வர்கீஸ் பெப்பே, இந்தப் படத்தின் முக்கியமான பலம். மலையாளத்தில் பெரிய படங்களில் ஹீரோவாக நடித்து வரும் அவர், இந்தப் படத்திலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் வகையில் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். அவரை தமிழ் ரசிகர்களும் நிச்சயம் கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

ஜேக்ஸ் பிஜாயின் இசையில் இந்தப் படம் ஒரு அசத்தலான ஹிட் ஆல்பமாக அமையும். ஏற்கனவே வெளியான பாடல்களைத் தாண்டி, படத்தில் ரசிகர்களை கவரும் மேலும் பல பாடல்கள் உள்ளன.

‘I Am Game’ முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. இதில் காமெடி, ரொமான்ஸ், மர்மம், சஸ்பென்ஸ், ஆக்ஷன், த்ரில்லிங் மற்றும் கேமிங் என ரசிகர்களை கவரும் பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. வரும் செப்டம்பர் 3-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும்,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *