எங்கள் தங்கம் – விமர்சனம்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாட்ஷா டெம்ப்ளேட்டில் ஏகப்பட்ட படங்கள் வந்து விட்டன. அத்தனை ஹீரோக்களும் ஒரு முறையாவது அந்த டெம்ப்ளேட்டில் நடித்து அந்த ஆசையை தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது ஹீரோயின்கள் அந்த மாதிரி ஆக்ஷன் படங்களில் அசத்தும் நேரம். அந்த வகையில் சமந்தா நடிப்பில் வெளியாகி இருக்கும் ஆக்ஷன் அதகள திரைப்படம் தான் எங்கள் தங்கம். தெலுங்கு, தமிழ், இந்தி என பல மொழிகளில் வெளியாகி இருக்கும் இந்த படம் எப்படி இருக்கு? சமந்தாவுக்கு வெற்றியை கொடுத்ததா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, நாயகி சமந்தாவை திருமணம் செய்து கொண்டதால் அவரது கணவர் திகந்த் மஞ்சலே வீட்டில் யாரும் அவருடன் பேசுவதில்லை. இந்த சூழலில் இரண்டு ஆண்டுகள் கழித்து மனைவி சமந்தாவை அழைத்துக் கொண்டு தங்கை திருமணத்துக்காக வீட்டுக்கு வருகிறார்கள் சமந்தாவும் அவரது கணவர். வந்த இடத்தில் மாமியார் குடும்பம் தன்னையும் மருமகளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என விரும்பி தனக்கு தெரியாத, வீட்டுப் பெண்கள் செய்யும் சில விஷயங்களையும் செய்து அவர்களை கவர முயற்சிக்கிறார் சமந்தா. அந்த சூழலில் அந்த குடும்பத்துக்கு ஒரு ஆபத்து ஏற்பட, தன் அதிரடி திறமைகளை வைத்து சமாளிக்கிறார். ஒரு கட்டத்தில் தன்னுடைய பழைய வாழ்க்கையே அதற்கு பெரிய ஆபத்தாக வந்து நிற்க அதை எப்படி சமாளித்தார்? அந்த குடும்பத்தினர் அனைவரின் மனதிலும் எப்படி இடம் பிடித்தார் என்பதே மீதிக்கதை.

நாயகி சமந்தா. ஃபேமிலி மேன் போன்ற சீரீஸில் ஆக்ஷனில் பட்டையை கிளப்பிய சமந்தாவுக்கு இந்த படம் அல்வா சாப்பிடுவது போல அமைந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் சின்ன கேப்புக்கு பிறகு வரும் அவருக்கு நிச்சயம் இது ஒரு பெரிய கம்பேக் படம் தான். சாதுவான ஒரு பெண்ணாக வந்து அவர் எடுக்கும் ஆக்‌ஷன் அவதாரம் ரசிக்க வைக்கிறது. ஆக்ஷன் காட்சிகளிலும் அசால்ட்டாக ஸ்கோர் செய்கிறார். சிறந்த மருமகள் என பெயர் வாங்க அவர் செய்யும் வேலைகள் செம கலாட்டா.

வில்லனாக வரும் குல்ஷன் தேவையா. இந்த படத்துக்கு தேவையா என்பது போன்ற ஒரு கதாபாத்திரம். சத்ரியன் படத்தில் நீ பழைய பன்னீர் செல்வமா வரணும் என வில்லன் திலகன் வந்து பாடாய் படுத்துவது போல இந்த படத்தில் குல்ஷன். அவரின் உண்மையான தேவை என்ன என்பதை புரிந்து கொள்வதே கஷ்டம் தான். ஆனால் நடிப்பில் அவர் பங்கை செவ்வனே செய்திருக்கிறார். கௌதமி, சமந்தாவின் மாமியார் கதாபாத்திரத்தில் நல்ல நடிப்பு. திகந்த் மஞ்சலே சமந்தாவின் கணவராக ஒரு அழுத்தமான் நடிப்பை தந்திருக்கிறார். மற்ற நடிகர்கள் அனைவருமே அவரவர் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக சமந்தாவின் தோழி கலகலப்பூட்டுகிறார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை மாஸ் காட்சிகளை மேலும் சிறப்பாக தூக்கி நிறுத்துகிறது. ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நடக்கும் படம் என்பதை எதையும் காட்டாமலே அழகாக நமக்கு புரிய வைக்கிறது. சண்டைக் காட்சிகள் தரமாக வடிவமைக்கப்பட்டு, சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இயக்குனர் நந்தினி ரெட்டி. ஏற்கனவே சமந்தாவை வைத்து ஓ பேபி என்ற ஒரு ஃபேண்டஸி ட்ராமாவை இயக்கி நம்மை ரசிக்க வைத்தவர். இந்த முறை சமந்தாவை வைத்து ஆக்ஷன் ஜானரில் வேறு மாதிரி படத்தை தந்திருக்கிறார். அதன் பின்னணியில் ஃபேமிலி மேன் ராஜ் நிடிமொரு இருக்கிறார் என்பது கூடுதல் சுவாரஸ்யம். அஜித் நடித்த வீரம் இரண்டாம் பாதி போன்ற ஒரு சூழல் தான் செட்டப். அதில் நாயகி எப்படி எல்லாம் ஸ்கோர் புகுந்து விளையாடுகிறார் என்ற கான்செப்ட் சுவாரஸ்யம் தான். ஆனால் அதை execute செய்வது ரொம்பவே சவாலான விஷயம். ஆனாலும் நந்தினி ரெட்டி அதை நன்றாகவே கையாண்டு ஆங்காங்கே சில ஹை மொமண்ட்ஸ் கொடுத்து அதை ஈடுகட்டுகிறார். ப்ளாஷ்பேக்கில் பெரிய அழுத்தம் இல்லாததும், இரண்டாம் பாதி திரைக்கதை யூகிக்கும்படி இருப்பதும் மைனஸ். ஆனாலும் குடும்பத்தோடு பார்க்கும் ஒரு நல்ல ஒரு பொழுதுபோக்கு படமாகவே வந்திருக்கிறார். நிச்சயம் ஒரு முறை குடும்பத்துடன் சென்று பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *