தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ். LMM ஸ்வாமிநாதன், முரளிதரன், வேணுகோபால் என்றாலே தமிழ் சினிமாவில் தெரியாதவர்களே இருக்க முடியாது. அப்படி பல வெற்றி படங்களை தயாரித்த மாபெரும் ஒரு நிறுவனம். பெரும்பாலும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக் கூடிய படங்களை எடுத்து மிகப்பெரிய வெற்றிகளை குவித்த நிறுவனம். தயாரிப்பை வெகுவாக குறைத்த அந்நிறுவனம் அதன் நிறுவனர்களின் மறைவுக்குப் பின் திரைப்பட தயாரிப்பையே நிறுத்தி விட்டது.
இந்த நிலையில் அந்த லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனர்களின் வாரிசுகள் அதே நிறுவனத்தின் பெயரில் இன்றைய புதிய சினிமா துறையில் திரைப்படங்கள் தயாரிக்க முடிவெடுத்து, டாக்டர்.எம்.ஸ்ரீவத்சன், எம்.கோகுல் கிருஷ்ணன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘4 இடியட்ஸ்’. அறிமுக இயக்குநர் சஜோ சுந்தர் முருகேசன் இயக்கியிருக்கும் இப்படத்தில் குக் வித் கோமாளி புகழ் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ரவி மரியா நடிக்க, நாயகியாக பிரக்யா நயன் நடித்திருக்கிறார். வின்சென்ட் அசோகன், கும்கி அஷ்வின், இந்திரன் என மற்றும் பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். சுந்தர் சியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
சுபாஷ் முனிரத்னம் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் அதிகம் நிகழ்ச்சிகளில் பங்கேற்காத திருப்பூர் சுப்ரமணியம் கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்திப் பேசினார். இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், எழில், பொன் ராம், நடிகர்கள் நாசர், ரவி மரியா மற்றும் பல திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

