ஆருத்ரன் பிக்சர்ஸ் சார்பில், S.முருகன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில், கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள படம் “கொஞ்ச நாள் பொறு தலைவா”. விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஒளிப்பதிவாளர் ஜோன்ஸ் ஆனந்த் பேசும்போது, “தயாரிப்பாளரை இப்போது தான் இரண்டாம் முறையாகப் பார்க்கிறேன். இயக்குநர் விக்னேஷ் என் நண்பர் அவர் ஒரு படத்தில் உதவி இயக்குநராக வேலை பார்த்த போது, உங்களோடு தான் படம் செய்வேன் என்றார், அதே போல எனக்கு இப்படத்தில் வாய்ப்பு தந்துள்ளார், தயாரிப்பாளர் யாருக்கும் சம்பள பாக்கி வைக்கவில்லை, நான் பார்த்ததில் மிக நல்ல தயாரிப்பு நிறுவனம் இது. இன்னும் நீங்கள் பல படங்கள் தயாரிக்க வேண்டும், இப்படம் மிக நன்றாக வந்துள்ளது” என்றார்.
நடிகர் ஹர்ஷத் பேசும்போது, “நான் இங்கு இருக்க இயக்குநர் நெல்சன் அண்ணா தான் காரணம் அவருக்கு நன்றி. இயக்குநர் விக்னேஷ் நான் ஒரு ஷீட்டில் இருந்த போது போன் செய்தார், அவர் அணுகிய விதம், அவர் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என்னை வில்லனாக நடிக்க கேட்டார். அவருக்கு ரொம்ப நல்ல மனசு. எல்லோரும் அவர் மீதான அன்பில் பணியாற்றினார்கள்” என்றார்.
பாடாலாசிரியர் அஸ்மின் பேசும்போது, “2012 ல் விஜய் ஆண்டனியால் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தப் பட்டேன். இயக்குநர் விக்னேஷ் அவர்களை, இப்படத்தில் ஒரு பாடல் எழுதத்தான் சந்தித்தேன், அந்தப்பாடல் பிடித்துப் போய், எல்லாப்பாடல்களையும் எழுதும் வாய்ப்பைத் தந்தார். எல்லோருக்கும் இப்படப் பாடல்கள் பிடித்திருக்குமென நம்புகிறேன்” என்றார்.
நாயகன் நிஷாந்த் பேசும்போது, “இந்த வருடம் மிகுந்த ஆசிர்வாதமாக அமைந்துள்ளது. எனது மூன்று படங்கள் வெளியாகவுள்ளது. கொஞ்ச நாள் பொறு தலைவா மிக நன்றாக வந்துள்ளது. தயாரிப்பாளர் யாருக்கும் எந்தக் குறையும் வைக்காமல், மிக பொறுப்புடன் இப்படத்தைத் தயாரித்துள்ளார். இயக்குநர் விக்னேஷ் மிக அட்டகாசமாகப் படத்தை உருவாக்கியுள்ளார். தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் மிக அர்ப்பணிப்புடன் இப்படத்தை உருவாக்கியுள்ளனர். இப்படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது” என்றார்.
இசையமைப்பாளர் சமந்த் நாக் பேசும்போது, “தயாரிப்பாளரை இன்று தான் முதல் முறையாகப் பார்க்கிறேன், மிக நல்ல தயாரிப்பாளர். விக்னேஷுக்கும் எனக்கு அடிக்கடி சண்டை வரும், ஆனால் எல்லாம் படத்துக்காகத் தான். மிக அருமையாகப் படத்தை உருவாக்கியுள்ளார். பாடலாசிரியர் அஸ்மின் அவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது. என்னுடன் வேலை பார்த்த பிரவீனுக்கு நன்றி” என்றார்.
இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் பேசும்போது, “கொஞ்ச நாள் பொறு தலைவா இந்த விழா ஒரு குடும்ப விழாவைப் போல உள்ளது. எல்லோரும் நண்பர்களாக இணைந்து பணியாற்றியுள்ளனர். எல்லோரும் தயாரிப்பாளரைப் பற்றி மிக மகிழ்ச்சியாக பகிர்கிறார்கள். உழைப்பவர்களுக்குச் சரியான ஊதியம் தந்த முதல் பட தயாரிப்பாளருக்காக, இப்படம் ஓட வேண்டும். இயக்குநர் விக்னேஷ் மிக அருமையாக இயக்கியுள்ளார். பாடல்கள் மிகவும் பிடித்திருந்தது. இசையமைப்பாளருக்கு வாழ்த்துக்கள். ஈழத்து கவிஞர் அஸ்மின் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார், அவருக்குத் தமிழ் சினிமா நல்ல எதிர்காலத்தைத் தரும். நடிகர் நிஷாந்த் அருமையாக நடித்துள்ளார். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.
ஆருத்ரன் பிக்சர்ஸ் சார்பில் கலியமூர்த்தி பேசும்போது, “ஆரூத்ரன் நிறுவனம் 25 வருடங்களாக ரியல் எஸ்டேட் துறையில் மக்களுக்குச் சேவை செய்து வருகிறது, அதன் அடுத்த கட்டமாகத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தைத் தயாரித்து உள்ளோம். எப்போதும் காமெடி படத்திற்குத் தனி வரவேற்பு உண்டு. மக்களுக்குப் பிடிக்கும் வகையில் அருமையான காமெடி படம் எடுத்துள்ள விக்னேஷுக்கு என் வாழ்த்துக்கள். நான் படம் பார்த்தேன் எனக்குப் படம் மிகவும் பிடித்தது” என்றார்.
இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் பேசும்போது, “தயாரிப்பாளர் முருகன் ஒரு நாள் கூட அவர் ஷூட்டிங் வந்ததே இல்லை, முழுமையாக என்னை நம்பி, நான் கேட்ட அனைத்தையும் தந்தார். இப்படத்தில் என்னுடன் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
“வாழ்வில் எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது” என்பதை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. நாயகன் நாயகியின் லிப்லாக் ரொமான்ஸுடன் காதல், நகைச்சுவை கலந்து அனைவரும் ரசிக்கும் வகையில், முழுமையான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
பிரபல இயக்குனர்களான சக்தி சிதம்பரம், உளவுத்துறை ரமேஷ் செல்வன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய திரு. விக்னேஷ் பாண்டியன் இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார்.