குட் நைட், லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற தரமான படங்களை தந்த மில்லியன் டாலர்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் அடுத்த படம் “அன்பே டயானா”. ஜமா என்ற சிறந்த படத்தை இயக்கி நடித்த பாரி இளவழகன் ஜமாவில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கதைக்களத்தில் கமர்ஷியலாக இறங்கி அடித்திருக்கும் இந்த படம் ஒரு காதல் கதையாக உருவாகியுள்ளது. படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, பல்வேறு மதம், ஜாதி, மொழி பின்னணியை கொண்ட மக்கள் கலந்து வாழும் பெரம்பூர் பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் ஒரு தெலுங்கு குடும்பத்தை சேர்ந்தவர் பாரி இளவழகன்(CSK). அவரது அம்மா ரோஜாவுக்கு ஜாதி ரொம்பவே முக்கியம். அவரது அப்பா சேத்தன், மகனுடனே நண்பன் போல பழகுபவர். பாரிக்கு ஆங்கிலோ இந்தியன் பெண்ணான ரம்யா ரங்கநாதன் (மேஜிக் டயானா) மீது பல ஆண்டுகளாக காதல். எத்தனையோ முறை வெளிப்படுத்தியும் அவர் காதலை ஏற்க மறுத்து வெறும் நண்பனாகவே வைத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் காதலை ஏற்க வரும்போது நாயகனுக்கு கலாச்சார வித்தியாசம் காரணமாக திருமண வாழ்க்கைக்கு ஒத்து வருமா? என்ற குழப்பம் வருகிறது. இதற்கிடையில் அம்மாவின் கட்டளையால் மாமன் மகளை நிச்சயமும் செய்கிறார்கள். இறுதியில் அந்த காதல் என்ன ஆனது? கலாச்சார வித்தியாசம் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.
நாயகன் பாரி இளவழகன், ஜமா படத்தில் பார்த்தவரா என நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறார். வடசென்னை இளைஞராகவே மாறி அந்த பெரம்பூர் பையனாகவே நம் கண் முன் நிற்கிறார். ஆரம்ப கால விஜய் சேதுபதியை நினைவுபடுத்துகிறார். காதல் காட்சிகளிலும், நண்பர்களுடன் இருக்கும் காட்சிகளிலும், வீட்டில் இருக்கும் காட்சிகளிலும் என ரசிக்க வைக்கிறார். நாயகியாக ரம்யா ரங்கநாதன். நல்ல டான்ஸராக அறியப்பட்டவர் இந்த படத்தில் நடிப்பிலும் அசத்துகிறார். ஆங்கிலோ இந்தியன் பெண்ணாகவே மாறி, மாடர்ன் பெண்ணாக அப்படியே உருமாறி நடை, உடை, பாவனை என மாறி வந்து நிற்கிறார். அவரது டான்ஸ் திறமைக்கு எந்த ஒரு டான்ஸ் காட்சியும் வைக்கவில்லை என்பது குறை.
நாயகனின் அம்மாவாக ரோஜா. ஒரு ஆளுமைமிக்க குடும்பத் தலைவியாக எல்லோரையும் மிரட்டி வைக்கிறார். அவரது குரலில் பேச வைத்திருப்பதும் சிறப்பு. சேத்தன் மற்றுமொரு சிறந்த கதாபாத்திரத்தில் ஜொலிக்கிறார். மகனுடன் அவர் அடிக்கும் லூட்டி செம்ம. பரிதாபங்கள் கோபி பெங்களூரிவில் பிறந்து பெரம்பூரில் செட்டிலான பெங்களூர் பாபாவாக ஒரு புது பாடி லாங்குவேஜில் நம்மை சிரிக்க வைக்கிறார். கிளைமாக்ஸில் தெறிக்க விடுகிறார். நிகிலா ஷங்கர், சுதர்ஷன், செல் முருகன், நாயகனின் அக்கா, நாயகியின் பெற்றோர் என ஒவ்வொரு கதாபாத்திரமும் படத்துக்கு வலு சேர்த்திருக்கிறது.
பரத் ஷங்கர் இசையில் பாடல்கள் நன்றாகவே உள்ளன. குறிப்பாக அந்த மெலோடி பாடல்கள் காட்சிகளோடு சேர்த்து பார்க்கும்போது இதமாக இருக்கிறது, ரசிக்கவும் வைக்கிறது. பின்னணி இசையும் படத்தின் தன்மையை அழகாக கடத்துகிறது. ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவு வடசென்னையின் ரியல் லொகேஷன்களில் புகுந்து விளையாடி இருக்கிறது. நல்ல ஒரு தரமான விஷுவல்ஸை வழங்கியிருக்கிறார். எடிட்டர் பார்த்தா எப்படியாவது ஒரு 20, 25 நிமிடங்களை குறைக்க முயற்சி செய்திருக்கலாம்.
இயக்குனர் பாரி இளவழகன். ஜமா படம் எடுத்தவரா இவர் என ஆச்சர்யப்பட வைக்கிறார். முற்றிலும் புதிய களம், ரஞ்சித் போன்றோருக்கு பின் வடசென்னையை இவ்வளவு லைவ்வாக காட்டிய இயக்குனர் என்ற பெயரை பெறுகிறார். தன்னுடைய பிளஸ் என்ன என்பதை உணர்ந்து தனக்கேற்ப கதையை தயார் செய்து, அதை மிக இயல்பாக ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார். ஒரே கதையில் பல்வேறு தம்பதியர்களின் கதைகளை சொல்லி எந்த திருமணமாக இருந்தாலும் கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ வேண்டும், எந்த பிரச்சினையும் அதற்கு தடையாக இருக்கக் கூடாது என்பதையும் சொல்லியிருக்கிறார். அதை ரொம்பவே இளமையாகவும், குடும்ப உணர்வுகளோடும் சொல்லி வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர். குடும்பத்தோடு சென்று ரசிக்கக் கூடிய நல்ல ஒரு பொழுதுபோக்கு திரைப்படம் இந்த “அன்பே டயானா”.

