பாரீஸ் கஃபே – விமர்சனம்!

இயக்குனர் சராஜ் சீலன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், அனுமோல், விஜய் விஷ்வா, அர்ச்சனா குமார், நயனா சாய் மற்றும் பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் ‘பாரீஸ் கஃபே’.  நவீன கால உறவுகள், காதலின் வெவ்வேறு பரிமாணங்கள் மற்றும் சமூகப் பிரதிபலிப்புகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்துக்கு கே இசையமைத்திருக்கிறார். இந்த படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, வெளிநாட்டில் இருக்கும் அர்ச்சனா குமார் தனக்கு தனது கனவு கம்பெனியான Nvidia-வில் வேலை கிடைத்து விட்டது என்பதை சொல்ல பெற்றோருக்கு ஃபோன் செய்கிறார். அப்போது தான் மருத்துவராக இருக்கும் அவரது அப்பா குரு சோமசுந்தரமும், ஆர்க்கிடெக்ட் மற்றும் சமூக செயற்பாட்டாளராக இருக்கும் அவரது அம்மா அனுமோல் இருவரும் ஒரு பிரச்சினையால் பிரிந்து வாழ்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்கிறார். இதனால் மனமுடைந்து போன அவர் அங்கிருந்து தன் காதலன் விஜய் விஷ்வா உடன் இந்தியா வருகிறார். அவர்கள் பிரிய காரணம் குரு வாழ்க்கையில் ஏழாண்டுகளுக்கு முன்பு மறைந்திருந்த ஒரு உண்மை தான் என்பதை தெரிந்து கொள்கிறார். அந்த சிக்கல்களை கடந்து தன் பெற்றோரை எப்படி சேர்த்து வைக்கிறார், அந்த 7 ஆண்டுக்கு முன்பான சம்பவம் என்ன? என்பதே மீதிக்கதை.

இந்த படத்தில் நடிகர்களின் தேர்வு படத்தின் மிகப்பெரிய பலம். குரு சோமசுந்தரம் அவருக்கே உரித்தான யதார்த்த மற்றும் பக்குவமான நடிப்பால் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கிறார். அவரின் மனைவியாக வரும் அந்த முதிர்ச்சியான கதாபாத்திரத்திற்கு அத்தனை பொருத்தம். சமூக செய்ற்பாட்டாளர் கதாபாத்திரத்தை முதிர்ச்சியான நடிப்பாலும் வெளிப்படையான பாத்திரச் சித்தரிப்பாலும் கண் முன்னே நிறுத்துகிறார்.

அர்ச்சனாவுக்கு ஒரு மாடர்ன் இளம்பெண் கதாபாத்திரம், தாய் தந்தையை சேர்க்க போராடும் ஒரு பாத்திரம். விஜய் விஸ்வா, அர்ச்சனா இருவரும் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். நயனா சாய் மற்றும் சாய் விக்கி இருவரும் மிக முக்கியமான கதையின் மையக் கதாபாத்திரங்களில் நிறைவன நடிப்பையே தந்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ‘கே’ (K) அவர்களின் பின்னணி இசை கதையின் போக்குடன் ஒன்றிணைந்து பார்வையாளர்களை அந்தச் சூழலுக்கே அழைத்துச் செல்கிறது. பாடல்களும் முணுமுணுக்க வைக்கும் விதமாகவும், துள்ளலாகவும் அமைந்திருக்கிறது. ஆனால் கிரீன்மேட்டில் சில காட்சிகளை எடுத்து அந்த முழு உணர்வை குறைத்திருக்கிறார்கள். சதீஷ் ஜி-யின் ஒளிப்பதிவு காட்சியமைப்புகளுக்குத் தேவையான யதார்த்தமான அழகைக் கொடுத்துள்ளது.

இயக்குநர் சராஜ் சீலன் ஒரு அழுத்தமான, சமூக அக்கறையுள்ள ஒரு கதையை சொல்ல முயற்சி எடுத்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். உறவுச் சிக்கல்களையும், சமூகத்தில் அதிகம் பேசப்படும் சில விஷயங்களையும் பேசியிருக்கிறார். ஆனால் அதை கொஞ்சம் கலர்ஃபுல்லாக நகரும் ஃபீல் குட் படத்தில் சொல்லியிருப்பது கொஞ்சம் புதுசு. அதனாலேயே அந்த சமூக பிரச்சினையின் தாக்கம் கொஞ்சம் குறைவான உணர்வையே தருகிறது. சில இடங்களில் திரைக்கதை மெதுவாக நகர்ந்தாலும், மனித உறவுகளின் ஆழத்தைப் பற்றிய தெளிவான பார்வையை வழங்குவதில் இயக்குநர் வெற்றி பெற்றுள்ளார். மொத்தத்தில், பொழுதுபோக்கைத் தாண்டி நல்ல கருத்துக்களை சொல்ல முனைந்த இயக்குனர் நல்ல படத்தையே தந்திருக்கிறார். பெரிதாக எதிர்பார்ப்புகள் இல்லாமல் வந்து ரசித்து விட்டு போகலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *