ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி இயக்கி நடித்துள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் இசைக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வரும் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ‘ஆரா 10/10’, ‘பப்பாளி பழமே’, ‘கோயிந்தம்மா’, ‘அடி போடி’, கலைவாணியே ஆகிய பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வரும் செப்டம்பர் 25ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாள சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி பேசும்போது, “அனைவருக்கும் வணக்கம். இரண்டு வருட உலகளாவிய இசைப்பயணத்திற்கு (World Tour) பிறகு, மீண்டும் ஒரு திரைப்படத்தின் மூலம் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். எந்த ஒரு புதிய தொடக்கத்திற்கும் முன்னதாக பிரஸ் மற்றும் மீடியா நண்பர்களைச் சந்திப்பது எனக்கும், என் தயாரிப்பாளர் சுந்தர் சி அண்ணனுக்கும் ஒரு முக்கியமான சென்டிமென்ட். அந்த வகையில், குறுகிய கால அறிவிப்பில் இந்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்த அனைவருக்கும் என் நன்றிகள். ‘மீசைய முறுக்கு 1’ எனது சொந்த வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு பயோபிக். ஆனால், இந்த ‘மீசைய முறுக்கு 2’ இசை மற்றும் இசைக் கலைஞர்களின் வாழ்க்கையைப் பேசும் ஒரு பொதுவான உலகளாவிய கதை.
குறிப்பாக, தங்களின் வாழ்க்கைப் போராட்டங்களையும் வழிகளையும் பாடல்கள் மூலமாக வெளிப்படுத்தி, அந்த கலையிலேயே வாழக்கூடிய கானா கலைஞர்களைப் பற்றிய ஒரு முக்கியப் பதிவாக இத்திரைப்படம் இருக்கும்.முதல் பாகத்தில் தந்தை கதாபாத்திரத்தில் நடித்த மறைந்த விவேக் சாரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. ஆனால், மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நகரும் இந்த இரண்டாவது பாகத்திலும் ஒரு மிக முக்கியமான தந்தை கதாபாத்திரம் உள்ளது. அதற்கு நடன இயக்குனர் பாபா பாஸ்கர் மாஸ்டர் தான் சரியாக இருப்பார் என்று அவரைத் தேர்வு செய்தேன். ஆரம்பத்தில் அவருக்குக் கொஞ்சம் தயக்கம் இருந்தாலும், என் மீது கொண்ட நம்பிக்கையில் சிறப்பாக நடித்துக் கொடுத்துள்ளார். இந்த படத்திற்குப் பிறகு அவர் தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த நடிகராகப் பெரிய இடத்தைப் பிடிப்பார் என்று நான் நம்புகிறேன்.
மேலும், பஞ்சாபிலிருந்து சென்னைக்கு வரும் ‘லைலா சிங்’ என்ற டான்ஸர் கதாபாத்திரத்தில் கேத்திகா சர்மா முதன்மை நாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் ப்ரோமோஷன் டூர் நாளை முதல் கோவை, மதுரை, சென்னை ஆகிய நகரங்களில் தொடங்கவுள்ளது. வெறும் கனவுகளோடு வந்த என்னை உங்களது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களால் செதுக்கி, இவ்வளவு தூரம் கொண்டு வந்த பிரஸ் மற்றும் மீடியா நண்பர்களுக்கும், தயாரிப்பாளர்கள் சுந்தர் சி சார் மற்றும் குஷ்பு மேம் ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

