தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகம் ஆகியிருக்கும் படம் தான் “டிசி” (DC). இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்க, ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் உடன் வாமிகா கபி, சஞ்சனா நடித்துள்ள இந்த படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, கேங்க்ஸ்டர் தலைவாசல் விஜய் வைத்திருக்கும் கூலிப்படையில் ஒருவரான லோகேஷ் கனகராஜ், அவரின் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆயுத கடத்தல் உட்பட பல குற்ற செயல்களில் ஈடுபடுகிறார். அவர் சிறு வயதிலேயே சிறை சென்று விட்டு வந்தவர் என்பதால் அவரது தந்தை கஸ்தூரி ராஜாவும் அவரை கண்டுகொள்வதில்லை. ஒரு ஆயுதக் கடத்தல் சம்பவத்தில் பல பிரச்சினைகள் நடக்க, அதை தொடர்ந்து காவல்துறை அவர்களை தேடுகிறது. அங்கிருந்து பல இடங்களில் மறைந்து வாழும் லோகேஷ் மற்றும் அவரின் கூட்டாளிகள், வழியில் நாயகி வாமிகா கபி, சஞ்சனா உட்பட பலரை சந்திக்கிறார்கள். அவர்கள் லோகேஷ் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன? போலீஸிடம் பிடிபடாமல் தப்பினார்களா? பல சம்பவங்களுக்கு பழிவாங்க வேண்டிய சூழல் வர அதை செய்தாரா லோகேஷ்? என்பதே மீதிக்கதை.
நாயகன் லோகேஷ் கனகராஜ். முதல் படத்தை மிகச் சரியாக ஒரு சீரியஸ் படமாக தேர்ந்தெடுத்திருப்பது சிறப்பு. அதற்கேற்ற ஆழமான, அழுத்தமான நடிப்பையும் தந்திருக்கிறார். அறிமுக காட்சியில் இருந்து இறுதிக் காட்சி வரை அவரது மெல்லிய குரலில் பேசி ஒருவிதமான டோன் செட் செய்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் எல்லாம் பின்னிப் பெடல். ரத்தம் தெறிக்க தெறிக்க சம்பவம் செய்திருக்கிறார். ஒரு சில ஒன்லைன்களிலும் ரசிக்க வைக்கிறார்.
நாயகியாக வாமிகா கபி. அவரது அழகில் படத்தையும் ரசிகர்களையும் கட்டிப் போடுகிறார். ஒரு விலைமாதுவாக, பல ஆண்டுகள் ஒரே பில்டிங்கில் கிடந்தவரின் மனநிலையையும், விடுதலை கிடைத்ததும் அவரது உணர்வுகளையும் மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். இவருக்கும் சில மாஸ் காட்சிகள் உண்டு. அந்த காட்சிகளில் தியேட்டர் அதிர்கிறது. சஞ்சனா பார் பாடகியாக சின்ன கதாபாத்திரம் என்றாலும் மனதில் பதிகிறார். கஸ்தூரி ராஜா, தலைவாசல் விஜய், கிரிஷ் தயாள், அவினாஷ் ரகுதேவன் உள்ளிட்ட மற்ற நடிகர்களின் பங்களிப்பும் தனித்துவமான அம்சம்.
திரையில் நாயகன் லோகேஷ் தான் என்றாலும் திரைக்குப் பின் அனிருத்தின் ஆட்டம் வேற லெவல் சம்பவம். மொத்த படத்தையும் அவரது பின்னணி இசையால் நம்மை அந்த உலகத்துக்குள் பயணிக்க வைத்திருக்கிறார். மியூசிக்கல் கேங்க்ஸ்டர் படம் என்பதற்கு ஏற்றவாறு ஒரு தரமான இசை சம்பவத்தை அரங்கேற்றி இருக்கிறார். முதல் காட்சி முதல் இறுதி வரை அனிருத் திரைக்கு பின்னால் நிஜ ஹீரோவாக ஜொலித்திருக்கிறார்.
முகேஷ் ஒளிப்பதிவு இன்னொரு முக்கியமான அம்சம். ஒவ்வொரு காட்சியையும் படமாக்கிய விதமும், சண்டைக் காட்சிகள், வன்முறைக் காட்சிகளை படமாக்கிய விதமும் சிறப்பு. ஒலி வடிவமைப்பு, கலை இயக்கம், படத்தொகுப்பு என தொழில்நுட்ப அம்சங்கள் எல்லாமே மிகச்சிறப்பாகவே அமைந்திருக்கிறது.
இயக்குனர் அருண் மாதேஸ்வரன். அவரது பாணியில் வன்முறை நிறைந்த ஒரு ராவான படத்தை சிறப்பான தொழில்நுட்பக் குழுவுடன் ரசிக்கும் ஒரு படமாக தந்திருக்கிறார். திரைக்கதையை சுவாரஸ்யமாகவே வடிவமைத்துள்ளார். ஆரம்ப காட்சிகளை விட வாமிகா கபி வந்த பிறகு வரும் காட்சிகளில் இருந்து படம் இன்னும் சுவாரஸ்யமாகிறது. இடைவேளைக் காட்சி தரமான ஒரு சம்பவம். லோகேஷ் பின்புலம், வாமிகா கபியின் பின்னணி அதை அவர் சொல்லும் விதம், அதற்காக அவர் எடுக்கும் ரிவெஞ்ச் என பல விஷயங்கள் திரைக்கதையில் சிறப்பாகவே இருந்தது. அருண் மாதேஸ்வரனிடம் இருக்கும் திரை அழகியல் இந்த படத்தில் மிகச் சிறப்பாகவே வெளிப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் வன்முறை பட விரும்பிகளுக்கும், புதுமையான படங்களை விரும்பும் ரசிகர்களும் முக்கியமாக இசை ரசிகர்களும் தியேட்டருக்குச் சென்று ரசிக்கக் கூடிய ஒரு தரமான சம்பவம் தான் இந்த DC.

