Spider man: Brand new day – விமர்சனம்!

மார்வெல் காமிக்ஸ் உருவாக்கிய ஒரு முக்கியமான சூப்பர் ஹீரோ தான் ஸ்பைடர் மேன். மூச்சடைக்க வைக்கும் சாகசங்கள் செய்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும் ஒரு கதாபாத்திரம். மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் ஸ்பைடர்-மேன் தொடரின் 4வது படமாகவும், MCU ஸ்பைடர்-மேன் திரைப்பட தொடரின் 38வது படமாகவும் உள்ளது! “ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே” படம் எப்படி இருக்கு? என்பதை பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, பீட்டர் பார்க்கருக்கு ஒரு புத்தம் புதிய நாள். தன்னை நினைவில் வைத்திராத ஒரு உலகில் ஒரு ஸ்பைடர்-மேனாக முழு நேர குற்றங்களை எதிர்த்துப் போராடும் பீட்டர் பார்க்கர், தன் பழைய நண்பர்கள் தன்னைத் தாண்டி வாழ்க்கையில் முன்னேறுவதைப் பார்க்கும் அழுத்தத்தால், தன்னால் கட்டுப்படுத்த முடியாத ஒரு மாற்றத்தை சந்திக்கிறார். ஆனால் அந்த மாற்றமே, நகரத்தையும் அவர் நேசிப்பவர்களையும் அச்சுறுத்தும். யாராலும் பார்க்க முடியாத ஒரு சக்திவாய்ந்த வில்லனை எதிர்கொள்கிறார். அந்த அச்சுறுத்தும் நபரின் நோக்கம் என்ன? அவரின் கடந்த காலம் என்ன? என்பதை சொல்வதே மீதிக்கதை. அத்துடன் உலகம் பீட்டர் பார்க்கரை மறந்திருக்கலாம், ஆனால் அவர் அவர்களை மறக்கவில்லை என்பதை அழுத்தமாக சொல்வதே மீதிக்கதை.

நாயகன் டாம் ஹாலந்த் (Tom Holland) திரைப்பயணத்தில் இந்த படம் ஒரு மிகச்சிறந்த நடிப்பை வெளிக் கொண்டு வந்திருக்கிறது என்று தாராளமாகக் கூறலாம். தனிமையின் வலி, கடந்த கால இழப்புகள், அதே சமயம் சூப்பர் ஹீரோவாக வாழ வேண்டிய கட்டாயம் என அனைத்தையும் தன் கண்களாலேயே கடத்தியிருக்கிறார். அவருக்கு இணையாக ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ் நடிகை சாடி சிங்க் (Sadie Sink) ஒரு மர்மமான கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். படத்தின் மிகப்பெரிய சர்ப்ரைஸ் அவர் தான். ஜான் பெர்ந்தலின் ‘பனிஷர்’ கதாபாத்திரத்திற்கும் ஸ்பைடர்மேனுக்கும் இடையே உள்ள கெமிஸ்ட்ரி திரையரங்கில் சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது. செண்டயா (Zendaya) அவர் நடிப்பால் படத்தின் எமோஷனை இன்னும் கூட்டுகிறார்.

‘நோ வே ஹோம்’ படத்தின் எமோஷனல் கிளைமாக்ஸிற்குப் பிறகு, முற்றிலும் தனித்து விடப்பட்ட பீட்டர் பார்க்கரின் வாழ்க்கையை மிகவும் எதார்த்தமாகவும் முதிர்ச்சியுடனும் பேசுகிறது இந்த ‘பிராண்ட் நியூ டே’. மல்டிவெர்ஸ் போன்ற பிரம்மாண்ட கற்பனைகளில் இருந்து விலகி, ஸ்பைடர்மேனின் ஆரம்பகால ‘ஸ்ட்ரீட்-லெவல்’ கதைக் களத்திற்கு நம்மை அழைத்துச் சென்றிருக்கிறார் இயக்குனர் டெஸ்டின் டேனியல் க்ரெட்டன். ‘ஷாங்-சி’ பட புகழ் இயக்குனர் சண்டைக் காட்சிகள் அசாத்தியமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மார்ஷியல் ஆர்ட்ஸ் கலந்த வெப்-ஸ்விங்கிங் ஆக்ஷன் காட்சிகள் சாம் ரைமியின் கிளாசிக் படங்களை நினைவூட்டுகின்றன.

2 மணி நேரம் 25 நிமிடங்கள் ஓடும் இந்த படத்தில், பல மார்வெல் கதாபாத்திரங்கள் (ஹல்க், பிளாக் விடோவ்) வருவதால் ஆங்காங்கே திரைக்கதை சற்று திணறுகிறது. எதிர்கால MCU படங்களுக்கான அடித்தளத்தை அமைப்பதிலேயே கொஞ்சம் அதிக நேரம் எடுத்திருப்பது லேசான தொய்வைத் தருகிறது. ஆனாலும், உணர்வுப் பூர்வமான தளம், அழுத்தமான நடிப்பு, மற்றும் மாஸான ஆக்ஷன் காட்சிகளுக்காக இந்த ‘பிராண்ட் நியூ டே’ மார்வெல் ரசிகர்களுக்கு ஒரு புதிய மற்றும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *