எல். சண்முகசுந்தர் எழுதி இயக்க, ராகவ் ரங்கநாதன், பிரேரணா கண்ணா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் சைக்காலஜிக்கல் கிரைம் திரில்லர் கதையாக உருவாகியுள்ள ‘பீப்’. உளவியல் மற்றும் கிரைம் இன்வெஸ்டிகேஷன் படமான இந்த படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, சாதாரணப் பின்னணியில் இருந்து வரும் ஒரு திறமையான இளைஞன் ராகவ். இந்தியாவின் தலைசிறந்த பிசினஸ் ஸ்கூல் ஒன்றில் படித்து தன் லட்சியங்களை அடைய முயல்கிறான். அதே நேரம் மிக திறமையான அவனுக்கும், அந்த கல்லூரியின் பேராசிரியருக்கும் இடையில் கொஞ்சம் உரசல் ஏற்படுகிறது. நெருங்கிய தோழி ஒருவர் மர்மமான முறையில் இறந்து போகிறார். அது கொலை தான் என போலீஸ் அதிகாரியின் விசாரணை நகர்கிறது. அதே நேரத்தில் ராகவ் அந்த வழக்கை தனிப்பட்ட முறையில் துப்பறிகிறார். இவர்களின் வெவ்வேறு பாதைகள் எங்கே ஒன்றாக சந்திக்கின்றன? அந்த மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன? அதை கண்டுபிடித்தது யார்? என்பது போன்ற சுவாரஸ்யமான திருப்பங்களுடன் சொல்வதே மீதிக்கதை.
இந்த படத்தை பொறுத்துவரை மிகப் பிரபலமான நடிகர்களை எல்லாம் வைத்து படத்தை ஓட்ட முயற்சிக்காமல் கதைக்கு ஏற்ற நடிகர்களின் தேர்வு பொருத்தமாக அமைந்துள்ளது. நாயகனாக அனைவருக்கும் பரிச்சயமான ராகவ் ரங்கநாதன் நடித்திருக்கிறார். பக்குவமான நடிப்பால் அவரது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளார். இத்தனை ஆண்டு கால உழைப்பு அவருக்கு கை கொடுத்துள்ளது என்று சொன்னால் மிகையாகாது. துடிப்பான இளைஞனாக, அவர் வயதில் பாதி வயது இருக்கும் ஒரு கதாபாத்திரத்தில் அழகாக பொருந்துகிறார்.
நாயகிகளாக யாமினி லக்ஷ்மணன் மற்றும் பிரேரணா கண்ணா. இதில் பிரேரணா நாயகனுடன் வந்து போவது போல மட்டுமே காட்சிகள். மற்றபடி நடிப்பதற்கு பெரிய அளவில் வாய்ப்பு இல்லை. அதே நேரம் யாமினி மீது தான் மொத்த கதையும் நகர்கிறது. நடிப்பதற்கு அவ்வளவு வாய்ப்புள்ள கதாபாத்திரம். அதை உணர்ந்து அழகாக ஸ்கோர் செய்கிறார். நிதிஷ் வீரா அவர் பெயரிலேயே ஒரு இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் வந்து நம்பகத்தன்மையான ஒரு கதாபாத்திரத்தில் அசத்துகிறார். பிரியதர்ஷினி மிக முக்கிய கதாபாத்திரத்தில் வந்து கதையை நகர்த்துகிறார். இயக்குனர் நடித்திருக்கும் கதாபாத்திரமும் சிறப்பு. பிற நடிகர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட பாத்திரங்களைச் சிறப்பாகச் செய்து கதைக்குத் தேவையான பலத்தைக் கூட்டுகின்றனர்.
பிரதீப் பத்ம குமார் ஒளிப்பதிவில் காட்சிகளும், கோணங்களும் மிக அழகாக, படத்துக்கு ஏற்ப அமைந்துள்ளது. பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. எடிட்டிங் கதையின் வேகத்தை ஒரே சீராகப் பராமரிக்க உதவியிருக்கின்றது.
இயக்குநர் எல். சண்முகசுந்தர் தலைப்பிலேயே கவனம் ஈர்க்கிறார். படத்தில் ஒரு காட்சியில் அந்த தலைப்பை உச்சரிக்கிறார்கள். அதை தாண்டி அந்த தலைப்பை வைத்ததற்கான காரணம் என்ன என்பது தான் புரியவில்லை. படத்தை பொறுத்த வரை ஒரு புதிய களத்தை தேர்ந்தெடுத்து சஸ்பென்ஸ் கலந்த ஒரு சைக்காலஜிக்கல் திரில்லரை வழங்க முயற்சி செய்துள்ளார். கிரைம் இன்வெஸ்டிகேஷன் என்பதை தாண்டி நாயகியின் கதாபாத்திரம் நம் மனதில் நிற்கிறது. அவர் யார்? அவர் பின்னணி என்ன? நாயகனுடன் எப்படி இவ்வளவு நெருக்கமாக நட்புடன் இருக்கிறார்? என்பது போன்ற பல கேள்விகளை நமக்கு ஏற்படுத்துகிறார். மொத்தத்தில் வழக்கமான கமர்ஷியல் படங்களை தாண்டி சிந்திக்க வைக்கும் சுவாரஸ்யமான திரில்லர் கதையாக அமைந்துள்ளத்து இந்த பீப். நிச்சயம் பார்க்கலாம்.

