ஜன நாயகன் – விமர்சனம்!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தலைவரான பின் கடைசிப் படம் என அறிக்கப்பட்டு தற்போது முதலமைச்சர் விஜயாக மாறி நிற்கும்போது வெளியாகியுள்ள படம் தான் “ஜன நாயகன்”. சென்சார் பிரச்சினை, லீக் ஆகியவற்றை கடந்து “One last dance” என்ற எமோஷனுடன் வெளியாகி இருக்கும் இந்த படம் எப்படி இருக்கு? ரசிகர்களை கவர்ந்ததா? என்பதை பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, சிறைத்துறை அதிகாரியான கௌதம் மேனன் தாய் இல்லா சிறு வயது மமிதா பைஜுவை வளர்த்து வருகிறார். தாய் மரணத்தை கண்ணால் பார்த்த அதிர்ச்சியால் பயந்த சுவாபத்தோடு வளர்கிறார் மமிதா. தாயின் ஆசைப்படி மமிதாவை ராணுவத்தில் சேர்க்க விரும்புகிறார் கௌதம். சிறையில் இருக்கும் விஜய்க்கும் கௌதம் மேனனுக்கும் இடையே நல்ல நட்பு உருவாக ஒரு தம்பியை போல இருக்கிறார் விஜய். ஒரு கட்டத்தில் கௌதம் மேனன் விபத்தில் இறந்து போக, மமிதாவை தன் சொந்த மகளாக வளர்க்கிறார் விஜய். இதற்கிடையில் வில்லன் பாபி தியோல் இந்தியாவுக்குள் மிகப்பெரிய சதித் திட்டத்தை அமல்படுத்தும் வேலைகளில் இருக்கிறார். அதில் விஜய் எப்படி உள்ளே வந்தார்? அந்த சதியை எப்படி முறியடித்து நாட்டை காப்பாற்றினார்? மமிதா பயத்தை விட்டாரா? ராணுவத்தில் சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.

நாயகன், ஜனநாயகன் தளபதி விஜய். அவர் கடைசிப்படம் என்பதே இந்த படத்துக்கு விமர்சனமே தேவையில்லை, எல்லோரும் நிச்சயம் ஜனநாயகனை பார்க்க வேண்டும் என சொல்லி விடலாம். மொத்த படத்தையுமே தன் தோளில் தாங்குகிறார். மாஸ் காட்சிகளில் அதகளம், எமோஷன் காட்சிகளில் கலங்க வைக்கிறார். டான்ஸ் பின்னி பெடல். இப்படி இனிமேல் இவரை பார்க்க முடியாதா என எண்ணும்போது நிச்சயம் மனம் கனக்கிறது. ரசிகர்கள் விஜய்க்காகவே திரும்ப திரும்ப பார்த்து கொண்டாடுவார்கள்.

மமிதா பைஜு. கதையின் மையக் கதாபாத்திரம். இவரைச் சுற்றி தான் கதையே நகர்கிறது. பயந்த சுவாபம் கொண்ட பெண்ணாகவே மாறி நம்மையும் அவர் மீது பரிதாபம் கொள்ள வைக்கிறார். அதிலிருந்து மாறும் காட்சிகளில் அசத்தல். பூஜா ஹெக்டே, கதாநாயகி தான் என்றாலும் விஜய்க்கு ஜோடி, காதல் என்றெல்லாம் இல்லாமல் கதையில் நாயகனுக்கு உதவும் ஒரு பாத்திரத்தில் நடித்திருக்கிறார். விஜய், மமிதா, பூஜா மூவரும் தளபதி கச்சேரி பாடலில் பட்டைய கிளப்பியிருக்கிறார்கள்.

பாபி தியோல் தோற்றத்திலும், நடிப்பிலும் மிரட்டிய அளவுக்கு அவரது கதாபாத்திரம் மிரட்டலாக இல்லை. அவர் பின்னணியும், அவரின் நோக்கமும் பெரிய அளவில் நம்மால் தொடர்புபடுத்தி பார்க்க முடியவில்லை. அதுவே நம்மை கதையுடன் ஒன்ற விடாமல் தடுக்கிறது. பிரகாஷ் ராஜ் வழக்கம் போல ஒரு வில்லன் கதாபாத்திரம் என்றாலும் அவர் நடிப்பும், டயலாக் டெலிவரியுமே ரசிக்க வைத்து, பல இடங்களில் சிரிக்கவும் வைக்கிறது. சுனில், கௌதம் மேனன், ரேவதி உட்பட மற்ற நடிகர்களும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் வந்து செல்கிறார்கள்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு பிரமாண்டத்தை நம் கண் முன்னே நிறுத்தியிருக்கிறது. செட்டில் படமாக்கப்பட்ட காட்சிகள், விஎஃப்எக்ஸ் காட்சிகள் என அத்தனைக்கும் அவர் ஒளிப்பதிவு பேருதவி புரிந்திருக்கிறது.

விஜய்க்கு இணையாக படத்தின் இன்னொரு ஹீரோ என சொல்ல முடியும் என்றால் அது அனிருத் தான். பாடல்கள் ஒவ்வொன்றிலும் தெறிக்க விட்டிருக்கிறார். ஒரு பேரே வரலாறு, ராவணன் மவண்டா, தளபதி கச்சேரி என எல்லாமே ஹிட் ரகம். பின்னணி இசையிலும் பட்டைய கிளப்பியிருக்கிறார்.

இயக்குனர் வினோத். நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு மீண்டும் ஒரு ரீமேக் படத்தை இயக்கியிருக்கிறார். ஆனால் முழுக்க ரீமேக்காக இல்லாமல் பாதி படத்தையே அவருக்கு ஏற்றார்போல, ஒரு கருத்து சொல்ல மாற்றி எழுதியிருக்கிறார். ரீமேக் செய்த பகவந்த் கேசரி கதை இருக்கும் படத்தின் முதல் பாதி போர் அடிக்காமல் அப்படியே நம்மை கொண்டு செல்கிறது. ஆனால் வினோத் சொல்ல வந்த அந்த கருத்து கொண்ட இரண்டாம் பாதி இந்த படத்துக்கு கொஞ்சம் அந்நியமாகவே இருந்தது. முழுக்க பகவந்த் கேசரியாகவே இருந்திருக்கலாம் என தோன்ற வைத்தது. ஆனாலும் விஜய் எதற்காக இந்த ரீமேக்கை எடுக்க நினைத்தாரோ அந்த Women empowerment, குழந்தைகளுக்கான Good touch bad touch ஆகியவற்றை சொல்லியும் இருக்கிறார்கள். மொத்தத்தில் ஜனநாயகன் படத்தை விமர்சனங்களை கடந்து விஜயின் Farewell படமாக அனைவரும் பார்க்க வேண்டும் என்பதே SK Cinemas செய்யும் பரிந்துரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *