Dawn Pictures நிறுவனத்தின் தயாரிப்பில், ஆகாஷ் பாஸ்கரன் எழுத்து இயக்கத்தில், அதர்வா முரளி நடித்துள்ள, “இதயம் முரளி” திரைப்படம் கடந்த ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம்பெரும் பாராட்டுக்களை குவித்து வெற்றி பெற்றுள்ளது. இன்பன் உதயநிதி வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தைஉலகமெங்கும் வெளியிட்டது. இப்படத்தின் பெரும் வரவேற்பைப் தொடர்ந்து படக்குழுபத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வினில் சின்னி ஜெயந்த் பேசியதாவது, “முதலில் இந்தப் படத்தின் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனுக்குநன்றி சொல்ல வேண்டும். இன்றைய தலைமுறையில் பலரும் பழைய நினைவுகளை மறந்துவிடுகிறார்கள். ஆனால் அந்த பழைய உணர்வுகளையும் நினைவுகளையும் அழகாக மீட்டெடுத்து திரையில் கொண்டு வந்த பெருமை இயக்குநர் ஆகாஷ்பாஸ்கரனுக்கே சேரும். அதர்வாவுடன் இது எனக்கு மிகவும் சிறப்பான அனுபவம். அவரது தந்தை முரளியுடன் இணைந்து நடித்தபோது இருந்த அதே உணர்வை, அதர்வாவுடன் நடித்தபோதும் நான் உணர்ந்தேன். அதனால்தான் இந்தப் படத்தில் என்னை இணைத்ததற்காக இயக்குநருக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். படத்தின் ஒவ்வொரு காட்சியையும் அவர் மிகுந்த அக்கறையுடனும்அழகிய ரசனையுடனும் உருவாக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு கலைஞரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள். குறிப்பாக கதாநாயகி சிறப்பாக நடித்துள்ளார். மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்த நடிகையும் தனது பாத்திரத்தை சிறப்பாகச் செய்திருந்தார்.இசையமைப்பாளராகமட்டுமல்ல, நடிகராகவும் திறமையை நிரூபித்த தமனுக்கும் என் பாராட்டுகள். அதேபோல் ‘டேலண்ட் அண்ட்’ நிகழ்ச்சியில் நான் பாராட்டிய சுதாகர் இன்று சிறந்த நடிகராக உயர்ந்திருப்பதுமிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதே கூட்டணி தொடர்ந்து நல்ல படங்களை உருவாக்க வேண்டும். இப்படிப்பட்ட தரமான படங்கள் தமிழ்சினிமாவுக்கு கலைரீதியாகமட்டுமல்ல, வணிக ரீதியிலும் பெரிய பலனைத் தரும். இந்த வாய்ப்பை வழங்கிய படக்குழுவினருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எழுத்தாளர் ரமணகிரிவாசன் பேசியதாவது, “முதலில் மயிலந்திரனுக்கு என் நன்றியைத் தெரிவிக்க வேண்டும். அவர்தான் என்னை இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனிடம் அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு ஆகாஷுக்கும் என் நன்றி. அதைவிட முக்கியமாக, இந்தப்படத்தில் என்னுடன் ஒன்றரை ஆண்டுகளாக மிக நெருக்கமாக பணியாற்றிய பிரவீனுக்கு நான் தனியாக நன்றி சொல்ல வேண்டும்.
இந்த ஒன்றரை ஆண்டு பயணத்தில், வசனங்கள் குறித்து பிரவீன்என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார். பொதுவாக பெரிய படங்களில் பக்கக்கணக்கில் வசனங்கள்எழுதுவோம். ஆனால் இந்தப் படத்தில் ஐந்து அல்லது ஆறு பக்கங்கள் எழுதினாலும், அதிலிருந்து ஐந்து வார்த்தைகள் மட்டும் திரையில் வந்தால்கூட அது கதைக்கு தேவையானதாக இருக்க வேண்டும் என்பதில் இயக்குநர் மிகவும் தெளிவாக இருந்தார்.
நாங்கள் முதன்முதலில் சந்தித்தபோதே தொடர்ந்து விவாதிக்கப்பட்ட ஒரு கேள்வி, ‘நாயகன் ஏன் தனது காதலை சொல்லவில்லை?’ என்பதுதான். ஒன்றரை ஆண்டுகளாக அந்தக் கேள்விக்கான பதிலைத் தேடிக்கொண்டே இருந்தோம். படம் வெளியாகும் தருவாயில், குறைந்தபட்சம் டிரெய்லரிலாவதுஅதற்கான காரணம் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம். பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு, இறுதியில் ஆகாஷ்ஏற்றுக்கொண்ட வசனம், ‘காதலை சொல்ல முடியவில்லை… அதை ஏன் சொல்ல முடியவில்லை என்ற காரணத்தையும் சொல்ல முடியவில்லை’ என்பதுதான். அந்த ஒரு வசனமே இந்தக்கதையின் உணர்வையும், ‘இதயம் முரளி’ என்ற தலைப்பின்சாரத்தையும் முழுமையாக வெளிப்படுத்தியது. ஆகாஷுடன் பல விஷயங்களில் வாதிட்டிருக்கிறோம், திறந்த மனதுடன் விவாதித்திருக்கிறோம். ஆனால் அந்த எல்லா விவாதங்களும் இறுதியில் இந்தப் படத்தின் வெற்றிக்கேவழிவகுத்துள்ளன. இன்று இந்த வெற்றியைப் பார்க்கும்போது, உங்களைப் போல நானும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாபேசியதாவது, “நாங்கள் எல்லோரும் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனை நகைச்சுவையாக ‘ஹெட்மாஸ்டர்’ என்று அழைப்போம். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. 2018-ம்ஆண்டிலிருந்தே இந்தக் கதையை நான் அறிவேன். அன்றிலிருந்து இன்று வரை அவர் இந்தப் படத்திற்காக தொடர்ந்து போராடிக்கொண்டே இருந்தார். ஆகாஷ் மிகவும் அமைதியான, வெகுளியான மனிதர். அந்த அளவுக்கு வெகுளியானவர் என்றாலும், தனது கனவை யாரிடமும் விட்டுக்கொடுக்காமல், இறுதியில் தானே தயாரிப்பாளராக மாறி இந்தப் படத்தை உருவாக்கினார். 2018-லிருந்து ஒவ்வொரு ஆண்டும் ‘ஒரு நல்ல தயாரிப்பாளர், ஒரு சரியான இசையமைப்பாளர் கிடைத்தால் இந்தப் படத்தை ஆரம்பிப்போம்’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். பல ஆண்டுகள் காத்திருந்தோம். இன்று இந்தப் படத்தைப் பார்த்தவர்கள், முன்பு தவறவிட்டவர்கள் நிச்சயம் வருத்தப்படுவார்கள்.
ஒரு நல்ல இசையமைப்பாளர் ஒரு படத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை இந்தப் படத்தின் மூலம் உணர்ந்தோம். தமன் இந்தத்திரைப்படத்தில் இணைந்த பிறகுதான் அனைத்தும் வேகமாக முன்னேறியது. அவரிடம் இசை பெறுவது எவ்வளவு கடினம் என்பது அனைவருக்கும் தெரியும். தெலுங்கில் அவர் அவ்வளவு பிஸி. ஆனால் அவர் இணைந்தது இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. குறிப்பாக தமன் இசையமைத்த பாடல்கள்திரையரங்குகளில் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப்பெற்றுள்ளன.
இந்தப் படத்தை ஆகாஷ் தயாரிக்க வேண்டும் என்று அதிகமாக வலியுறுத்தியவர்களில் நானும் ஒருவன். அமெரிக்காவில் புரொமோஷூட் எடுத்தபோது, பெரிய நிறுவனங்களுடன் பணிபுரிந்தஅனுபவத்தில் ஒரு காதல் கதைக்கு அவர்கள் கொடுத்த முன்னுரிமை மிகவும் குறைவாக இருந்தது. அப்போது, ‘நீங்களே தயாரிப்பாளராக இருந்தால்தான் நினைத்தபடி படத்தைஉருவாக்க முடியும்’ என்று அவரிடம் கூறினேன். அந்த முடிவுதான்இன்று இந்த வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது. இன்று திரைப்படத் தயாரிப்பில் பெரும்பாலான பட்ஜெட் நடிகர்களின் சம்பளத்திற்கே செல்கிறது. ஆனால் ஒரு நல்ல கதைக்கு தேவையான தயாரிப்பு தரத்தில் சமரசம் செய்யக்கூடாது என்ற முடிவை ஆகாஷ் எடுத்தார். அது பாராட்டப்பட வேண்டிய விஷயம். புதிய தயாரிப்பாளர்களுக்கு இது ஒரு முன்னுதாரணமாகஇருக்கும். இந்தப் படத்திற்காக பல இடங்களில் பிரம்மாண்டமான செட்கள் அமைக்கப்பட்டன. சில காட்சிகள் சில நிமிடங்களே திரையில் வந்தாலும், அதற்காக எந்த சமரசமும்செய்யாமல் செலவு செய்து உருவாக்கப்பட்டது. இப்படிப்பட்ட அர்ப்பணிப்புள்ள தயாரிப்பாளர்கள் அதிகம் வர வேண்டும் என்பதே என் விருப்பம்.
அதர்வாவுடன் இதற்கு முன்பும் ஒரு இசை ஆல்பத்தில்பணியாற்றியிருக்கிறேன். அப்போதே அவர் போன்ற திறமையான நடிகருக்கு ஒரு மிகப்பெரிய வெற்றிப் படம் கிடைக்க வேண்டும் என்று நினைத்தேன். இன்று ‘இதயம் முரளி’ அந்த வெற்றியை அவருக்கு கொடுத்திருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த வெற்றி அவருக்குக் கிடைக்க வேண்டியதுதான்.
படத்தின் நாயகிகள் இருவரும் ஆரம்பத்திலிருந்தே மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள். இந்த இரண்டு ஆண்டுகளில் அவர்கள் வேறு படங்களிலும் வளர்ச்சி பெற்றாலும், இந்தப் படத்திற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கினர். திரையில்அவர்களுடைய நடிப்பு, தோற்றம், நாயகனுடனான கெமிஸ்ட்ரிஆகியவை படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.
இசையமைப்பாளர் எஸ். தமன்பேசியதாவது, “சில வாய்ப்புகள் வாழ்க்கையில் ஒரே ஒரு முறைதான் கிடைக்கும். ‘இதயம் முரளி’ அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு. மனோஜ் இவ்வளவு உணர்ச்சிபூர்வமாகப் பேசுவார் என்று நான் நினைத்ததே இல்லை. ‘ஈரம்’ படத்தில் இருந்து எங்களுடைய பயணம் தொடங்கியது. அந்தப் படத்தின் டெஸ்ட் ஷூட்டைஷங்கர் சாரிடம் காட்டியபோது, ‘தண்ணீரே வில்லன்’ என்ற கதையை பலரும் நம்பவில்லை. ஆனால் அந்த உலகத்தை நம்ப வைக்கும் அளவுக்கு காட்சிப்படுத்தியவர் மனோஜ். அந்தப் பயணம்தான் இன்று ‘இதயம் முரளி’ வரை எங்களை கொண்டு வந்திருக்கிறது. அதற்காக மனோஜுக்கு என் மனமார்ந்த நன்றி.
இந்தப் படத்தின் கதை என்னிடம் வந்தது ஒரு சிறிய டிரெய்லர் மூலம் தான். என் நண்பர் தீபன், இயக்குநர் ஆகாஷ் உருவாக்கிய அந்த கான்செப்ட் டிரெய்லரை அனுப்பி வைத்தார். CGI, 2D காட்சிகள் என மிக அழகாக உருவாக்கப்பட்டிருந்த அந்த டிரெய்லரை பார்த்தவுடன், இந்தப் படத்திற்கு நான் கண்டிப்பாகஇசையமைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆரம்பத்தில் வேறு ஒரு இசையமைப்பாளரைப் பற்றி யோசிக்கப்பட்டிருந்தாலும், இந்தக் கதையின் மீது இருந்த ஈர்ப்பால் நானே ஆகாஷிடம், ‘நான் இசையமைத்தால் இந்தப்படத்தில் நடிக்கவும் தயாராக இருக்கிறேன்’ என்று சொன்னேன். இவ்வளவு அழகான காதல் கதையில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பமாக இருந்தது. அந்த முடிவுக்குப்பிறகு உருவான முதல் பாடல் ‘தங்கமே’. அங்கிருந்துதான் இந்த இசைப் பயணம் தொடங்கியது. அதன் பிறகு முழு ஆல்பமும் மிக அழகாக உருவானது.
உண்மையைச் சொன்னால், நான் நடிகராக நடிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை. மனோஜ் வற்புறுத்தவில்லை என்றால் நிச்சயமாக நடித்திருக்க மாட்டேன். நான் எப்போதும் செட்டுக்குஇசையமைப்பாளராகத்தான் வருவேன்; நடிகராக வர வேண்டும் என்று நினைத்ததில்லை. ஆனால் ஆகாஷ் என்னை சம்மதிக்க வைத்தார். இந்தப் படத்தில் ப்ரீத்தி, கயாது, நிஹாரிகா, ஏஞ்சல்உள்ளிட்ட அனைவருடனும் இணைந்து நடித்தது மிகவும் இனிமையான அனுபவமாக இருந்தது. அவர்கள் அனைவரும் படப்பிடிப்பு தளத்தை எப்போதும் உற்சாகமாக வைத்திருந்தார்கள்.
நட்டி சாருடன் மீண்டும் இணைந்ததும் மகிழ்ச்சி அளித்தது. அவருடன் ஏற்கெனவே பணியாற்றிய அனுபவம் இருந்ததால், இந்தப் படத்திலும் அவருடைய நடிப்பு சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. அதே நேரத்தில், ரக்ஷன் மற்றும் டிராவிட்(நகைச்சுவையாக) எங்களுக்கு நிறைய ‘டார்ச்சர்’ கொடுத்தார்கள். குறிப்பாக டப்பிங் செய்யும்போது தேவைக்கு அதிகமாகப் பேசி, படத்தின் இறுதிப்பணிகளையேதாமதப்படுத்திவிட்டார்கள். ஆனால் அதுவும் செட்டில் நடந்த மகிழ்ச்சியான நினைவுகளில் ஒன்றுதான்.
அதர்வா மிகவும் அருமையான மனிதர். அவருடன் பணியாற்றியதுமிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. எப்போதும் நேர்மறை ஆற்றலுடனும், மகிழ்ச்சியுடனும் அனைவரையும்உற்சாகப்படுத்தும் மனிதர் அவர்.” இந்தப் படத்தின் முழுக்குழுவுடனும் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாகஇருந்தது. ஒவ்வொருவரும் இந்தப் படத்தை தங்களுடைய படமாக நினைத்து உழைத்தார்கள். அந்த அர்ப்பணிப்புதான்இன்று இந்த வெற்றியாக மாறியுள்ளது.
இந்தப் படத்தின் பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும்ரசிகர்கள் அளித்த வரவேற்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒரு இசையமைப்பாளராக இதைவிட பெரிய திருப்தி வேறு எதுவும் இல்லை. இந்த வெற்றிக்கு காரணமான இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன், தயாரிப்பாளர் குழு, நடிகர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் மற்றும் இந்தப் படத்தை கொண்டாடிய ரசிகர்கள், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன்.
‘இதயம் முரளி’ எங்கள் அனைவரின் அன்பாலும், நம்பிக்கையாலும் உருவான திரைப்படம். அந்த அன்பை இதேபோல் தொடர்ந்து கொடுத்து, நல்ல சினிமாவை ஆதரிக்க வேண்டும்.
நடிகர் நட்டி பேசியதாவது, “இந்த மேடையில் நான் சொல்ல வேண்டியது ஒன்றே ஒன்று – நன்றி. முதலில், இந்த வாய்ப்பைவழங்கிய இயக்குநரும் தயாரிப்பாளருமான ஆகாஷ் பாஸ்கரனுக்குஎன் மனமார்ந்த நன்றி. அதேபோல் மனோஜ் சார், அதர்வா சார், ப்ரீத்தி முகுந்தன், கயாது, ஏஞ்சல், ரக்ஷன், சுதாகர், டிராவிட்உள்ளிட்ட படத்தின் அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தில் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டகதாபாத்திரத்தை அனைவரும் மிகச் சிறப்பாகச் செய்திருந்தார்கள். அதனால்தான் படம் இவ்வளவு அழகாக உருவாகியுள்ளது. தயாரிப்புக் குழுவில் கிருஷ்ணா சார், ஜோஜோசார் உள்ளிட்ட அனைவரும் படப்பிடிப்பு முழுவதும் மிகவும் உதவிகரமாக இருந்தார்கள். அவர்களின் ஒத்துழைப்பை மறக்க முடியாது. இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் என்னவென்றால், முழுக் குழுவும் ஒரே உற்சாகத்துடனும், நேர்மறை ஆற்றலுடனும்பணியாற்றியதுதான். அந்தச் சூழல்தான் படத்திலும்பிரதிபலித்துள்ளது. எனவே, இந்த வெற்றிக்குப் பின்னால் உழைத்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.”
மாதம்பட்டி ரங்கராஜ் பேசியதாவது, “தயாரிப்பாளரும்இயக்குநருமான ஆகாஷ் பாஸ்கரனுடன்எனக்கு இருக்கும் நட்புதான் இன்று என்னை இந்த மேடையில் நிற்க வைத்திருக்கிறது. அவரது திருமண விருந்தாக இருந்தாலும், ‘இதயம் முரளி’ படத்தில் இடம்பெற்றதிருமண விருந்தாக இருந்தாலும், இன்றைய நன்றி அறிவிப்பு விழாவின் விருந்தாகஇருந்தாலும், ஒவ்வொரு முறையும் என்னை நினைவில் வைத்திருப்பது அந்த நட்பின்வெளிப்பாடுதான்.
‘இதயம் முரளி’ மிகவும் அழகான திரைப்படம். அறிமுக இயக்குநராகவே ஆகாஷ் தனது திறமையை சிறப்பாக நிரூபித்திருக்கிறார். இதுபோன்ற தரமான படங்களை தொடர்ந்து இயக்கி, ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தைப்பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். இந்தப் படம் எனக்கு பல நல்ல நண்பர்களையும் கொடுத்திருக்கிறது. அதர்வாபிரதருக்கு இன்னும் பல சிறந்த படங்கள் அமைய வேண்டும். அவர் மேலும் உயரங்களை அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
நடிகர், உதவி இயக்குநர் மற்றும் வசனஎழுத்தாளர் டிராவிட் பேசியதாவது, “முதன்முறையாக பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை நேரடியாக இந்த மேடையில் சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதற்கு காரணமான ‘இதயம் முரளி’ திரைப்படத்திற்கும், இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனுக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்தக் கதையில் நடிக்க வந்தபோது, இந்தக் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. என்னுடைய முதல் வெளியான திரைப்படமான ‘டியூட்’ நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதே நேரத்தில் ‘இதயம் முரளி’ படமும் தொடங்கியது. யூடியூப்பில் மட்டும் இயங்கி வந்த எனக்கு, சினிமாவில் ஒரு இடம் வேண்டும் என்ற ஏக்கம் இருந்தது. அந்த ஏக்கத்தை ‘டியூட்’ மற்றும் ‘இதயம் முரளி’ போன்ற படங்கள்நிறைவேற்றின. இன்று என் வாழ்க்கையை ‘இதயம் முரளிக்கு முன், இதயம் முரளிக்கு பின்’ என்று கூட பிரித்துப் பார்க்கலாம். முன்பு ஒரு யூடியூபராக இருந்த நான், இன்று சினிமாக்காரன் என்று அழைக்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தப் படத்தில் நாங்கள் நண்பர்களாக நடித்தோம். ஆனால் உண்மையில் யாரும் நடித்ததாக எனக்குத் தோன்றவில்லை. அனைவரும் நிஜ வாழ்க்கை நண்பர்களாகவே வாழ்ந்தோம். அதர்வா முதல் நாளிலிருந்தே எங்களுக்கு அந்த நெருக்கத்தையும்சுதந்திரத்தையும் கொடுத்தார். ப்ரீத்தி, கயாது, ஏஞ்சல், ரக்ஷன், சுதாகர் என அனைவரும் ஒரு குடும்பமாகவே இருந்தோம். நட்டி சார் வந்தாலே எங்களை கலாய்ப்பார். மனோஜ் சார்தான்எங்களுக்கு உண்மையான ‘ஹெட்மாஸ்டர்’. அவர் வந்தாலே எல்லாரும் ஒழுங்காக வேலை செய்ய ஆரம்பித்துவிடுவோம். அதே நேரத்தில் அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.
சாய் பிரதரை நாங்கள் மிகவும் மிஸ் செய்கிறோம். தமன்அண்ணாவுடன் பணியாற்றியதும் மறக்க முடியாத அனுபவம். அவர் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய உயரத்தை கொடுத்திருக்கிறார். இவ்வளவு பெரிய இசையமைப்பாளராக இருந்தாலும், மிகவும் எளிமையாகவும் அமைதியாகவும் பழகும் மனிதர். எந்த சூழ்நிலையிலும் பதற்றப்படாமல், ‘பண்ணிடலாம்’ என்று நம்பிக்கை கொடுப்பார். அவருடைய அந்த இயல்பே இந்தப்படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்திலும் பிரதிபலித்துள்ளது. மாதம்பட்டி ரங்கராஜ் சார் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், அது மிகவும் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதேபோல் பகத் சார் சிறிய தோற்றத்தில் கூட எப்படி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கலாம் என்பதை நிரூபித்திருக்கிறார்.
இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் என்னை நடிகராக மட்டுமல்லாமல், உதவி இயக்குநராகவும், வசன எழுத்தாளராகவும் நம்பி பொறுப்பு கொடுத்தார். சில காட்சிகளில் எனக்கு முழு சுதந்திரத்தையும் வழங்கினார். அந்த நம்பிக்கையை எப்போதும் மறக்க மாட்டேன்.
இந்தப் படத்தின் முதன்மை வசன எழுத்தாளர் ரமணகிரிவாசன் சார், இணை இயக்குநர் பிரவீன், இணை இயக்குநர் செந்தில் அண்ணா ஆகியோரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். என்னை இந்தப் படத்தில் உதவி இயக்குநராக இணைத்து, நடிகராக அறிமுகப்படுத்தி, வசன எழுத்திலும் பங்களிக்க வாய்ப்பு வழங்கிய இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இந்தப் பயணம் என் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.”
நடிகர் ரக்ஷன் பேசியதாவது, “பொதுவாக நான் தொகுப்பாளராகமேடையில் நிறைய பேசியிருக்கிறேன். ஆனால் இப்படி விருந்தினராக வந்து பேசும்போது கொஞ்சம் பதற்றமாகத்தான்இருக்கும். ‘இதயம் முரளி’ பற்றி சொல்ல வேண்டுமென்றால், நெருங்கிய நண்பர்கள் ஒன்றாக இணைந்து ஒரு படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்று பலர் நினைப்பார்கள். ஆனால் இந்தப் படம் அதற்கு நேர்மாறானது. இந்தப் படத்தில் நடித்த பிறகுதான் நாங்கள் அனைவரும் நெருங்கிய நண்பர்களாக மாறிவிட்டோம்.
நான் மனிதர்களை மிகவும் மதிப்பவன். அந்த வகையில், இந்தப்படம் எனக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு இந்த அழகான நட்புகள்தான். முதலில் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு நன்றி. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முந்தைய இரவுதான் அவர் என்னை தொடர்புகொண்டு பேசினார். அடுத்த நாள் காலை நேராக படப்பிடிப்பில் இணைந்தேன். ஆரம்பத்தில் குழு எப்படி இருக்கும் என்ற பதற்றம் இருந்தது. ஆனால் முழுக் குழுவும் மிகவும் ஜாலியாகவும், அன்பாகவும் பழகியதால் அந்த பயம் உடனே மறைந்துவிட்டது.
அதர்வா பிரதருடன் இணைந்து பணியாற்றியதில் மிகுந்த மகிழ்ச்சி. ப்ரீத்தி, காயத்ரி உள்ளிட்ட அனைவருடனும்பணியாற்றிய அனுபவம் மிகவும் இனிமையானது. இந்தப் படத்தில்தொடர்ந்து புதிய நடிகர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். அதுபோல படப்பிடிப்பு தளமும் எப்போதும் உற்சாகமாக இருந்தது. நிஹாரிகா, ஜுனைதா மேம், ஏஞ்சல் என அனைவரும் அந்த மகிழ்ச்சியான சூழலின் ஒரு பகுதியாக இருந்தார்கள். இயக்குநர் ஆகாஷ் மிகவும் அமைதியாகவும் நம்பிக்கையுடனும்படப்பிடிப்பை வழிநடத்தினார். ‘ஜிகர்தண்டா’ படத்தைப் போல எங்களை சுதந்திரமாக நடிக்கவிட்டு, பின்னர் எடிட்டிங்கில்அனைத்தையும் அழகாக ஒருங்கிணைத்திருந்தார். தமன் சார் இசை இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலம். அவருடைய இசை படத்திற்கு தனி ஆற்றலைக் கொடுத்திருக்கிறது. நான் திரையில்கொஞ்சம் குறைவாகப் பேசியிருந்தால், அல்லது செட்டில்அதிகமாகப் பேசியிருந்தால், அதற்கும் தமன் சார்தான் காரணம். அவர் எப்போதும் உற்சாகமாக இருந்தார்.
நடிகர் சுதாகர் பேசியதாவது, “முதலில், ‘இதயம் முரளி’ போன்ற அருமையான படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு என் மனமார்ந்த நன்றி. நான் காமெடி கதாபாத்திரங்களை மட்டுமா செய்ய வேண்டும், இல்லையா வேறு விதமான கதாபாத்திரங்களையும் செய்ய வேண்டுமா என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் இந்த வாய்ப்பு வந்தது. அதை சரியாக பயன்படுத்தியிருக்கிறேன் என்ற மகிழ்ச்சி இருக்கிறது. நான் இயல்பாகவே மிகவும் அமைதியானவன். அதிகம் பேச மாட்டேன். ஆனால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் என்னை மிகவும் இயல்பாக பழக வைத்து, ஒரு நண்பர்கள் குழுவின் அங்கமாக உணர வைத்தார்கள். அதற்காக முழு படக்குழுவிற்கும் என் நன்றி.
கயாது, ப்ரீத்தி, சாய், ஜோஜோ, மனோஜ் சார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. ஒரு காமெடி காட்சியை எழுதுவது ஒரு விஷயம்; அதை சரியாக படமாக்கி, எடிட்டிங் மூலம் இன்னும் சிறப்பாக மாற்றுவது இன்னொரு விஷயம். மனோஜ் சார், எடிட்டர் பிரதீப் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அதனை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். என் காட்சிகள் எதுவும் கட் ஆகாமல் பார்த்துக்கொண்ட இயக்குநருக்கு நன்றி.
குறிப்பாக டிராவிட் பற்றி சொல்ல வேண்டும். அவன் மிகவும் உணர்ச்சியோடு பேசினான். நாங்களும் அதே அளவுக்கு உணர்ச்சிவசப்பட்டிருக்கிறோம். நீண்ட நாட்களாக வெற்றிக்காக காத்திருந்தோம். இந்த ஆண்டு ‘டியூட்’ மற்றும் ‘இதயம் முரளி’ ஆகிய படங்கள் எங்களுக்கு அந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளன. இந்தப் படத்தில் எனது நகைச்சுவைக் காட்சிகள் நன்றாக வர டிராவிட் எழுதிய வசனங்களும், எங்கள் இருவரின் கலந்துரையாடல்களும் பெரிய காரணம் சீரியஸான கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறேன். ஆனால் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்கும்போதுதான் எனக்கு முழுமையான திருப்தி கிடைக்கிறது. சீரியஸான காட்சிகளுக்கு முந்தைய நாள் கூட எனக்கு தூக்கம் வராது. ஆனால் காமெடி காட்சிகளில் நடிக்கும்போது மிகவும் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பேன்.
நன்றி சொல்ல வேண்டிய பலரின் பெயர்களை தவறவிட்டிருக்கலாம். ரக்ஷன், ஏஞ்சலின், மாதம்பட்டி ரங்கராஜ், நட்டி சார், ரமணகிரிவாசன் சார், சின்னி ஜெயந்த் சார் என அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சின்னி ஜெயந்த் சார் பல வருடங்களுக்கு முன்பே, ‘நீங்கள் சினிமாவுக்கு வந்தால் இன்னும் பெரிய இடத்தை அடைவீர்கள்’ என்று என்னை ஊக்கப்படுத்தியவர். இன்று அது நினைவுக்கு வருகிறது. ரமணகிரி வாசன் சாருடன் நடந்த கதை விவாதங்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தன. சில நாட்கள் விவாதங்களில் மட்டும் இருந்தால்கூட நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது.
இந்தப் படத்தில் வேலை செய்த அனுபவம், ஒரு படத்தில் நடித்த அனுபவமாக இல்லாமல், ஒரு வாழ்க்கையை வாழ்ந்த அனுபவமாக இருந்தது. படம் முடிந்துவிட்டதே என்ற வருத்தம் இருக்கிறது. ஆகாஷ் பாஸ்கரன் விரைவில் அடுத்த படத்தை தொடங்க வேண்டும் என்று மனதார விரும்புகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த நன்றி.”
நடிகை கயாது லோகர் பேசியதாவது, ‘இதயம் முரளி’ தான் நான் முதலில் ஒப்பந்தமான தமிழ் திரைப்படம். அதனால் இந்தப் படம் எனக்கு எப்போதும் மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்திற்கும் எனக்கும் நீங்கள் அளித்த அன்பு மிகவும் நெகிழ்ச்சியாகவும், மனதை வருடும் வகையிலும் இருக்கிறது.
‘அமுதா’ கதாபாத்திரம் எனக்கு மிகவும் நெருக்கமானது. அந்தக் கதாபாத்திரத்தின் அப்பாவித்தனம், மன வலிமை, உணர்வுகள் என அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்தக் கதாபாத்திரத்தை நம்பி என்னிடம் ஒப்படைத்த இயக்குநருக்கும், முழு படக்குழுவிற்கும் என் நன்றி. ஆகாஷ் இந்தக் கதையை என்னிடம் முதலில் பகிர்ந்தபோது, ‘சாம்’ கதாபாத்திரத்தை நான் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தார். அதேபோல், ப்ரீத்தியும் ‘அமுதா’ கதாபாத்திரத்திற்கான லுக் டெஸ்ட் செய்திருந்தார். இறுதியில் எல்லாம் சரியாக அமைந்து, ‘அமுதா’ எனக்கு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி. இந்தக் கதாபாத்திரத்தின் மூலம் என்னுள் இருக்கும் நடிகையை பலரும் பார்த்து பாராட்டியது எனக்கு மிகப்பெரிய அங்கீகாரம்.
ஒளிப்பதிவாளர் மனோஜ் சார் எங்களை திரையில் மிகவும் அழகாகக் காட்டியிருக்கிறார். சாய் மற்றும் முழு ஒளிப்பதிவுக் குழுவிற்கும் என் நன்றி. இந்தப் படத்தின் காட்சியமைப்பும், இசையும், தொழில்நுட்ப தரமும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. தமன் சாரின் இசை இந்தப் படத்தை இன்னும் உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது. முழு ஆல்பத்தையும் நான் மிகவும் விரும்புகிறேன். அது 2000-களின் இனிமையான நினைவுகளை மீண்டும் கொண்டு வருகிறது. எனக்கு அவர் பரிசாக வழங்கிய பியானோவிற்கும் என் மனமார்ந்த நன்றி.
இந்தப் படத்தில் இணைந்து நடித்த அதர்வா, ப்ரீத்தி, டிராவிட், ஏஞ்சலின், ரக்ஷன், நட்டி சார், மோனிஷா, யஷஸ்ரீ மற்றும் அனைத்து நடிகர்களுடனும் பணியாற்றிய அனுபவம் மிகவும் இனிமையானது. இந்தக் குழுவுடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் பணியாற்ற வேண்டும் என்று உண்மையாகவே விரும்புகிறேன். ப்ரீத்தி எனக்கு இந்தத் துறையில் மிகவும் நெருக்கமான தோழி. எப்போதும் நான் சாய்ந்து நிற்கக்கூடிய ஒருவராக இருந்ததற்கு நன்றி. நீ இந்தப் படத்தில் மிகவும் அழகாக இருந்தாய்.
அதர்வாவுடன் திரையில் அதிக காட்சிகள் இல்லாவிட்டாலும், நாங்கள் உருவாக்க முயன்ற உணர்வுகள் ரசிகர்களிடம் சென்றடைந்தது மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் தொழில்மீதான அர்ப்பணிப்பே திரையில் பிரதிபலித்திருக்கிறது. மீண்டும் உங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
நடிகை ப்ரீத்தி முகுந்தன் பேசியதாவது, “இந்தப் படத்தின் பயணம் தொடங்கி இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன. இவ்வளவு நாள் ஒன்றாக உழைத்த இந்தப் பயணத்தை இப்போது ஒரு மேடையில் நின்று நினைவுகூர்ந்து, அனைவருக்கும் நன்றி சொல்ல வேண்டும் என்று நினைக்கும்போது என்ன பேசுவது என்றே தெரியவில்லை. முதலில், என்னுடைய மிகப்பெரிய நன்றி இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனுக்குத்தான். என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்கு மனமார்ந்த நன்றி. கதை கேட்ட முதல் நொடியிலேயே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. ‘சாம்’ கதாபாத்திரத்தையும், ‘அமுதா’ கதாபாத்திரத்தையும் தேர்வு செய்யும் வாய்ப்பை எனக்குக் கொடுத்தார். இரண்டு கதாபாத்திரங்களுமே மிக அழகாக எழுதப்பட்டிருந்ததால் அது எனக்கு மிகவும் கடினமான முடிவாக இருந்தது. ஆனால் படம் முடிந்து திரையில் பார்த்தபோது, ஒரு நடிகையாக இல்லாமல், ஒரு ரசிகையாக நான் அந்தப் படத்தை ரசித்தேன். இவ்வளவு அழகான, மனதை வருடும் ஒரு திரைப்படத்தில் நானும் ஒரு பகுதியாக இருந்திருக்கிறேன் என்பதே எனக்கு மிகப்பெரிய திருப்தியாக இருந்தது. இந்த அருமையான படத்தில் நாங்கள் அனைவரும் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஆகாஷ் சார் தயாரிப்பாளராக இருந்தாலும், அவருடைய உண்மையான ஆர்வம் இயக்கத்தில்தான் இருக்கிறது என்பதை இந்தப் படம் முழுவதும் உணர முடிகிறது. கதையில் அவர் வைத்திருந்த சிறிய சிறிய விவரங்களே அவரது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றன. முதல் படத்திலேயே இவ்வளவு அழகான படைப்பை கொடுத்ததற்கு அவருக்கு என் வாழ்த்துகள். இன்னும் பல சிறந்த படங்களை அவரிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
ஒளிப்பதிவாளர்கள் மனோஜ் சார் மற்றும் சாய் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி. படப்பிடிப்பின் போது ஒரு நாள் மனோஜ் சாரிடம், ‘எப்படி சார் ஒவ்வொரு ஃபிரேமையும் ஓவியம் போல இவ்வளவு அழகாக உருவாக்குகிறீர்கள்?’ என்று கேட்டேன். ஒவ்வொரு காட்சியும் மிகவும் இயல்பாக இருந்தாலும், அதே நேரத்தில் கவிதை போலவும் இருந்தது. இந்தப் படத்தில் காட்சிகளின் மூலமே பல உணர்வுகளையும் கதையையும் அவர்கள் அழகாகச் சொல்லியிருக்கிறார்கள். எங்களை அனைவரையும் திரையில் மிகவும் அழகாகக் காட்டியதற்கு நன்றி.
இந்தப் படத்தின் நண்பர்கள் குழுவில் இருந்த அனைவருக்கும் என் நன்றி. உங்களால் இந்தப் படப்பிடிப்பு ஒரு வேலை போல இல்லாமல், குடும்பமாக இருந்த அனுபவமாக மாறியது. ஏஞ்சலின், நீ மிகவும் இனிமையானவரும் திறமையானவரும். உன் வயதைக் காட்டிலும் மிகவும் முதிர்ச்சியாக சிந்திக்கிறாய். உன் எதிர்காலம் மிகவும் சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன்.
டிராவிட், இந்தப் படத்தில் நடிகராக மட்டுமல்லாமல், எழுத்தாளராகவும் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறாய். படப்பிடிப்பின்போதே நீ மிகவும் உயரம் செல்வாய் என்று எனக்குத் தெரிந்தது. உன்னுடைய எதிர்காலப் படைப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். ரக்ஷன், ஆரம்பத்தில் தெரியவில்லை. ஆனால் போகப் போக என்னை மிகவும் அன்பாக உங்களுடைய குழுவில் ஒருவராக ஏற்றுக்கொண்டீர்கள். அதற்கு நன்றி.
சுதாகர், நீங்கள் மிகவும் திறமையான கலைஞர். உங்கள் வீடியோக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். படம் பார்க்கும்போது மற்ற ரசிகர்களைப் போல நானும் உங்கள் கதாபாத்திரத்திற்குத்தான் அதிகமாக உற்சாகப்பட்டேன். இந்தப் படத்தில் உங்கள் காட்சிகள் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளன. நீங்கள் இன்னும் பெரிய உயரங்களை அடைவீர்கள் என்று நம்புகிறேன்.
நட்டி சார், குறைந்த திரை நேரத்திலேயே இவ்வளவு தாக்கம் ஏற்படுத்தும் வகையில் அந்தக் கதாபாத்திரத்தை உயிரோட்டமாக நடித்திருக்கிறீர்கள். அந்தக் கதாபாத்திரத்தில் வேறு யாரையும் என்னால் கற்பனை செய்ய முடியவில்லை.
கயாது, நீ மிகவும் அன்பானவரும் திறமையான நடிகையும்தான். ‘அமுதா’ கதாபாத்திரம் உனக்குக் கிடைத்தது மிகவும் சரியான முடிவு என்று நான் நினைக்கிறேன். அதை மிக அழகாகச் செய்திருக்கிறாய். எப்போதும் என்னிடம் அன்பாக நடந்துகொண்டதற்கு நன்றி. வெளியில் பலர் எங்களை ஒப்பிட்டுப் பேசலாம். ஆனால் உண்மையில் நாங்கள் இருவரும் ஒருவரின் வெற்றிக்காக மற்றொருவர் மனதார வாழ்த்துபவர்கள்தான். நீ இன்னும் பெரிய உயரங்களை அடைய வேண்டும் என்று மனதார விரும்புகிறேன்.
அதர்வா… நான் சந்தித்த நடிகர்களில் மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவர் நீங்கள். எப்போதும் மிகவும் பணிவாகவும், அனைவரையும் சமமாக மதித்து நடந்து கொண்டீர்கள். நீங்கள் எவ்வளவு பெரிய நடிகர் என்பதை ஒருபோதும் உணர்த்தாமல், ஒவ்வொருவரையும் மரியாதையுடன் நடத்தினீர்கள். குறிப்பாக படத்தின் இறுதிக்கட்டத்தில் நாங்கள் நல்ல நண்பர்களாக மாறினோம். அந்த நட்பு நீண்ட காலம் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்.
தமன் சார் இசை இந்தப் படத்தின் ஆன்மா. எங்கள் படத்தின் முழு ஆல்பமும் தொடர்ந்து என் பிளேலிஸ்டில் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு பாடலும் படப்பிடிப்பு நாட்களை மீண்டும் நினைவூட்டுகிறது. இந்தப் படத்திற்கு உயிர் கொடுத்ததற்கு அவருக்கு என் மனமார்ந்த நன்றி. ‘இதயம் முரளி’ எங்கள் அனைவரின் மனதிற்கும் மிகவும் நெருக்கமான திரைப்படம்.
இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் பேசியதாவது, “முதலில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நீங்கள் இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தீர்கள். நல்ல விமர்சனங்களையும் ஆதரவையும் வழங்கினீர்கள். அதற்காக மனதார நன்றி. அதேபோல், ரசிகர்களுக்கும் என் நன்றி. படம் வெளியான பிறகு பலர் எனக்கு நேரடியாகச் செய்தி அனுப்பி, ‘இந்தப் படம் எங்கள் பள்ளி, கல்லூரி நாட்களை நினைவுபடுத்தியது’ என்று சொன்னார்கள். அந்த வார்த்தைகள்தான் இந்தப் படத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டு.
அதர்வா சார் முதல் நாளிலிருந்தே இந்தப் பயணத்தில் என்னுடன் இருந்தார். ஒரு நடிகராக மட்டுமல்லாமல், நண்பராகவும் எல்லா ஏற்றத் தாழ்வுகளிலும் உறுதுணையாக இருந்தார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி. ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா சார் இந்தப் படத்திற்கு ஆரம்பம் முதல் முழு ஆதரவாக இருந்தார். இவ்வளவு பெரிய படங்களில் பணியாற்றியிருந்தாலும், எங்கள் சிறிய படத்திற்கும் அதே அர்ப்பணிப்புடன் உழைத்தார். அதற்காக அவருக்கு நன்றி.
தமன் சார் இந்தப் படத்தின் மீது அளவற்ற நம்பிக்கை வைத்திருந்தார். அவருடைய இசை இந்தப் படத்திற்கு ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியது. எங்கு சென்றாலும் இந்தப் படத்தைப் பற்றி பெருமையாகப் பேசிக்கொண்டே இருப்பார். ஹைதராபாத் சென்றாலும், மும்பை சென்றாலும் ‘இதயம் முரளி’ பற்றிய பேச்சுதான். அந்த நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் அவருக்கு என் நன்றி.
சாய் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக மட்டுமல்லாமல், தயாரிப்பு நிர்வாகி, எக்ஸிக்யூட்டிவ் புரொட்யூசர், உதவி இயக்குநர் என பல பொறுப்புகளை ஏற்றார். சில நேரங்களில் நடிகர்களின் கால்ஷீட்டுகளை வாங்கி தருவது வரை எல்லாவற்றையும் கவனித்தார். குறிப்பாக கயாது லோகரின் கால்ஷீட்டுகளை ஒருங்கிணைக்க அவர் மிகவும் உதவினார். அவர் எனது மிக நெருங்கிய நண்பர். அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சி.
எடிட்டர் பிரதீப்புடன் ஆரம்பத்தில் அதிக நேரம் செலவிடவில்லை. ஆனால் இறுதி மூன்று மாதங்கள் தொடர்ந்து அவருடன் அமர்ந்து பணியாற்றியதால்தான் படம் இவ்வளவு கச்சிதமாக உருவானது. அவருடைய அனுபவம் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. தயாரிப்பு வடிவமைப்பாளர் கார்த்திக் சார் உருவாக்கிய செட்கள் இந்தப் படத்தின் அழகை மேலும் உயர்த்தின. மொட்டைமாடி, டெரஸ் உள்ளிட்ட பல முக்கியமான இடங்கள் அனைத்தும் அவருடைய உழைப்பின் விளைவு. உடை வடிவமைப்பாளர் பல்லவி மேம், மீனாட்சி மற்றும் அவர்களுடைய குழுவினருக்கும் என் நன்றி. பெரிய நட்சத்திரங்களுடன் பணியாற்றி வந்த நேரத்திலும், எங்கள் படத்திற்காக முழு அக்கறையுடன் உழைத்தார்கள்.
என் குறும்பட காலத்திலிருந்தே என்னுடன் பணியாற்றி வரும் போஸ்டர் வடிவமைப்பாளர் கபிலனுக்கும் நன்றி. அதேபோல், இறுதிக் கட்ட ஒலிக்கலவையை சிறப்பாகச் செய்து கொடுத்த சுரேன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. வசன எழுத்தாளர் ரமணகிரிவாசன் சார் எனக்கு ஒரு நல்ல ஆலோசகராக இருந்தார். ஒவ்வொரு காட்சியையும் நாங்கள் விரிவாக விவாதிப்போம். அவர் ஒரு வடிவத்தை உருவாக்கிக் கொடுப்பார். அதை வைத்து நாங்கள் மேலும் மெருகேற்றுவோம். இந்தப் படத்தின் வசனங்களில் அவருடைய பங்கு மிக முக்கியமானது.
இந்தப் படத்தின் மூலம் பல புதிய முகங்களை அறிமுகப்படுத்தியிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கயாது லோகரை முதன்முதலாக சென்னைக்கு அழைத்து வந்து தேர்வு நடத்தினோம். அப்போது சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்தார். இன்று பல படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். அவருடைய வளர்ச்சியைப் பார்க்க பெருமையாக இருக்கிறது. நிஹாரிகாவுக்கும் இதுவே முதல் படம். இன்று பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ப்ரீத்தி முகுந்தனும் அப்போது சினிமாவில் அதிகமாக அறிமுகமாகாத நிலையில் இருந்தார். இன்று அவர் சிறந்த நடிகையாக வளர்ந்து வருகிறார்.
மோனிஷா, ஏஞ்சலின் ஆகியோருக்கும் இந்தப் படம் முக்கியமான தொடக்கமாக அமைந்தது. அவர்கள் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள். டிராவிட்டை முதலில் நடிகராகத்தான் அழைத்தோம். பின்னர் அவர் உதவி இயக்குநராகவும், வசன எழுத்திலும் எங்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தார். அவருடைய திறமை இந்தப் படத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இந்தப்படத்தில் உழைத்த என் உதவி இயக்குநர்கள் மற்றும் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.

