குட் பேட் அக்லி, ட்யூட் படங்களில் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கியிருக்கும் இந்த படம் ஒரு ஃபீல் குட் ஃபேமிலி ட்ராமாவாக உருவாகியுள்ளது. படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, நாயகன் ரிஷிகாந்துக்கும், நாயகி அனிஷ்மாவுக்கும் திருமணம் நிச்சயமாகி திருமணத்தன்று ஒட்டுமொத்த குடும்பம் மற்றும் உறவினர்களும் மண்டபத்தில் காத்திருக்கிறார்கள். நாயகன் ரிஷிகாந்த் கடந்த கால காயத்தால் பாதிக்கப்பட்டு திருமணமே வேண்டாம் என்ற நிலையில் துபாயில் வேலை பார்த்துக் கொண்டு தனிமையில் இருக்கிறார். அவரை தங்கை மகனுக்கு காது குத்து என பொய் சொல்லி வர வைக்கிறார்கள். நாயகி அனிஷ்மா வேறு ஒரு இளைஞரை காதலிக்கிறார். அவருடன் ஓடிப் போக திட்டமிட்டும் இருக்கிறார். இந்நிலையில் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. அதன் பின் அவர்கள் மனநிலை என்ன? அவர்கள் எடுத்த முடிவுகள் என்னவானது? என்பதை ஒரு இரவில் சொல்லும் படம் தான் இந்த மொத ராத்திரி.
நாயகன் ரிஷிகாந்த். எத்தனையோ படங்களில் ஹீரோவின் நண்பனாக, முக்கியமான கதாபாத்திரங்களில் எல்லாம் நடித்து அனுபவப்பட்ட ரிஷிகாந்த் இந்த படத்தில் நாயகனாக நல்ல ஒரு முதிர்ச்சியான நடிப்பை தந்திருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதி வரை வலி, ஏமாற்றம், அறும்பும் காதல், கட்டிய மனைவியின் விருப்பத்துக்கு நிற்பது என நல்ல ஒரு யதார்த்தமான நடிப்பு. நாயகி அனிஷ்மா அனில்குமார். சிறை, யூத் படங்களில் எப்படி ஒவ்வொன்றும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் அசத்தினாரோ அப்படி இந்த படத்திலும் முந்தைய படங்களின் சாயல் இல்லாத ஒரு கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார்.
இந்த படத்தை இன்னும் ஒரு படி மேலே தூக்கி நிறுத்துவது துணை கதாபாத்திரங்களில் வரும் அத்தனை நடிகர்களும் தான். சேத்தன், ஏ. வெங்கடேஷ், பகவதி பெருமாள், அப்துல் லீ, ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், பானுப்ரியா, சுமித்ரா தேவி, வர்ஷினி கார்மேகம், கார்த்திகேயன், வேலன், கௌஷிக் கபிலன் என அந்த திருநெல்வேலி, தூத்துக்குடி வட்டார வழக்கில் அந்த ஊர் மனிதர்களாக, அசல் முகங்களாக மாறி நம்மை அசத்துக்கிறார்கள். காமெடிக்கு இந்த நடிகர்களே கியாரண்டி.
பரத் ஷங்கர் இசையில் பாடல்கள் இனிமை. பின்னணி இசையும் படத்துக்கான உணர்வை நமக்கு கடத்துகிறது. சுரேந்திரன் பரஞ்சோதி ஒளிப்பதிவு குறைந்த நாட்களில் இப்படி ஒரு படத்தை படம் பிடிக்க பேருதவி புரிந்திருக்கிறது. எந்த ஒரு இடத்திலும் சிறு குறையும் இல்லாத ஒளிப்பதிவு.
பிரமாண்ட படங்களையே எடுத்து பழக்கப்பட்ட மைத்ரி மூவி மேக்கர்ஸ் தமிழ் சினிமாவில் சின்ன பட்ஜெட்டில் நல்ல படங்களை கொடுக்க முன்வந்திருக்கும் முயற்சியை பாராட்டலாம். அந்த நம்பிக்கையை தன் முதல் படத்திலேயே காப்பாற்றி இருக்கிறார் அறிமுக இயக்குனர் ராஜா கருப்பசாமி. ஒரு யதார்த்த நகைச்சுவை படமாக, எளிய வாழ்வியல் கதையுடன் எளிதில் ரசிகர்களை கவரும் ஒரு படத்தை தந்திருக்கிறார். ஒரே இரவில் நடக்கும் கதையில் அடுத்தடுத்த திருப்பங்கள், கலாட்டாக்கள் என நம்மை ரசிக்கவும் வைக்கிறார். ஆச்சர்யமும் ஊட்டுகிறார். காதலன் பைக்கில் வரும் ஒரு போர்ஷன், மொத ராத்திரிக்கு தேக்கு கட்டில் எடுத்து வரும் வியாபாரி போர்ஷன், ஆண்கள் எல்லோரும் சரக்கடிக்க போகும் போர்ஷன், வீட்டில் பெண்கள் எல்லோரும் இருக்கும் போர்ஷன், நாயகன் நாயகி சேத்தன் போர்ஷன் என ஒவ்வொரு போர்ஷனுமே ரசிக்க வைக்கிறது. காமெடிக்கு பஞ்சமில்லை. ஆங்காங்கே வரும் வசனங்கள், சாதிய மனநிலைக்கு சவுக்கடி தரும் காட்சிகள் என நல்ல பல கருத்துக்களையும் சொல்லியிருக்கிறார். மொத்தத்தில் குடும்பத்துடன் சென்று ரசித்து விட்டு வரக்கூடிய நல்ல ஒரு பொழுதுபோக்கு திரைப்படம் இந்த “மொத ராத்திரி”.

