சூரி இதையெல்லாம் குறைத்துக் கொள்ள வேண்டும் – வெற்றிமாறன் அட்வைஸ்!

RS Infotainment நிறுவனம் தயாரிப்பில் நடிகர் சூரி, சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்ட திரைப்படம் “மண்டாடி”. வரும் செப்டம்பர் 10 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் இந்த படத்தை இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். பாரம்பரிய பாய்மரப் படகு போட்டி மற்றும் தமிழ்நாட்டின் கடலோர சமூகங்களின் கடல்சார் கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட ஓரு ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை டிரேட் சென்டரில் மிக பிரமாண்டமாக அரங்கேறியது. இயக்குனர்கள் வெற்றிமாறன், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்தினர்.

அப்போது பேசிய இயக்குனர் வெற்றிமாறன், “மண்டாடி எனக்கு கொஞ்சம் ஸ்பெஷலான படம். அதற்கு முக்கியக் காரணம், இந்தப் படத்தின் இயக்குநர் மதிமாறன் என்னுடைய சொந்த மாமா பையன். எனக்கு ‘வெற்றிமாறன்’ என்று பெயர் வைத்ததே மதிமாறனுடைய அப்பா தான். அதனால் என்னை விட அவர் தான் இன்று மேடையில் அதிக கர்வத்துடனும் பெருமையுடனும் இருக்க வேண்டும். மதி இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்த போதே என்னிடம் சினிமாவுக்கு வர விருப்பம் தெரிவித்தான். அவனது அம்மா “அரியர்ஸ் எல்லாவற்றையும் முடித்தால் தான் சினிமாவுக்குப் போகலாம்” என்று நிபந்தனை விதித்தார். மதி ஒரே செமஸ்டரில் அனைத்து அரியர்ஸ்களையும் முடித்து விட்டு வந்தான். அப்போதும் என்னிடம் நேராக உதவி இயக்குநராகச் சேர வரவில்லை. அவன் ஒரு குறும்படம் எடுத்து, அதை எனக்குக் காட்டினான். “உங்களுக்கு என் திறமை மீது நம்பிக்கை வந்து, நான் தகுதியானவன் என்று தோன்றினால் மட்டுமே என்னைச் சேர்த்துக்கொள்ளுங்கள்” என்று மெரிட் அடிப்படையில் வாய்ப்புக் கேட்ட ஒரு நேர்மையான நபர் தான் மதி.

மண்டாடி போன்ற பிரமாண்டமான படத்தை தயாரிக்க எல்ரெட் குமார் போன்ற ஒருவரால் தான் எடுக்க முடியும். அவர் பல நேரங்களில் ஒரு தயாரிப்பாளர் என்பதை மறந்து விட்டு, ஒரு சினிமா மாணவனைப் போல மாறி விடுவார். விடுதலை படத்தில் நான் ஒரு காட்சியை 13 நாட்கள் ரிஹர்சல் செய்து ஒரே ஷாட்டில் எடுக்கலாம், அதற்கு 6 முதல் 8 கோடி வரை பட்ஜெட் ஆகும் என்று சொன்னபோது, “உங்கள் விஷன் என்னவோ அதை அப்படியே பண்ணிடுங்க சார்” என்று உறுதுணையாக நின்றார். சுமார் 80 நாட்கள் கடலுக்குள்ளேயே சென்று படப்பிடிப்பு நடத்துவது சாதாரண விஷயம் அல்ல. அதற்குத் தயாரிப்பாளருக்குத் தனி தைரியம் வேண்டும். விடுதலை படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளின் போது மதியின் ஸ்கிரிப்ட் தெளிவு மற்றும் கமிட்மென்ட்டைப் பார்த்து தயாரிப்பாளர்கள் மணி மற்றும் எல்ரெட் சார் அவனிடம் முழு கதையையும் ஒப்படைத்துப் பாதுகாத்தார்கள்.

நாம் எவ்வளவு கஷ்டமான வேலை கொடுத்தாலும் அதைச் செய்யக் கூடியவர் சூரி. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவர் மிகவும் ஸ்ட்ராங்கான நபர். ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் அதைச் செய்து முடிப்பார். சூரி இந்தப் படத்திற்காக வந்தபோது “அண்ணே, என் ரெண்டு விரல்களும் உடைந்த பிறகு சேரவே இல்லை, காலிலும் இந்த பக்கம் உடைந்து வீங்கி இருக்கு” என்று காட்டினார். சவாலான கதாபாத்திரங்கள் செய்வது முக்கியம் தான், ஆனால் ரிஸ்க்கை கொஞ்சம் பேலன்ஸ் செய்ய வேண்டும். அதனால் சூரி கொஞ்சம் இதையெல்லாம் குறைத்துக்கொண்டு கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

படத்தில் நடித்த சுஹாஸ், மகிமா நம்பியார், விஜய் என அனைவரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். சுஹாஸ் இரண்டு வெவ்வேறு காலகட்டத்துக்கான உடல் மொழியையும், முக பாவனைகளையும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளார். கேமராமேன் (DOP), எடிட்டர் மற்றும் கலை இயக்குநர் என அனைவரும் அந்த கடல் உலகத்தை மிக தத்ரூபமாக கண்முன்னே கொண்டுவந்துள்ளனர்.

ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் வெறும் சண்டை பயிற்சியாளர் மட்டுமல்ல, அவர் ஒரு சிறந்த இன்ஜினியர். கடலுக்குள் க்ளோஸ்-அப் காட்சிகளை எப்படி எடுப்பது என்ற சவால்களுக்குத் தொடர்ந்து புதிய கருவிகளையும் யோசனைகளையும் Device செய்துகொண்டே இருப்பார்.

ஆடுகளம் போன்ற ஒரு ஸ்போர்ட்ஸ் படத்திற்கு ஜிவியின் இசை எப்படி மிகப்பெரிய பலமாக இருந்ததோ, அதேபோல் இந்த படத்திலும் அவரது பாடல்களும், குறிப்பாக பேக்ரவுண்ட் ஸ்கோர் (பின்னணி இசை) மிக ஸ்பெஷலாக அமைந்துள்ளது. சினிமாவில் ஒருவருக்கு எல்லாவற்றையும் விட மிக முக்கியமாகத் தேவைப்படுவது ‘பொறுமை’ (Patience) மற்றும் நிதானம் தான். அதை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *