ஹாலிவுட் படங்களில் ஆக்ஷன் படங்களுக்கென ரசிகர்கள் ஏராளம். குறிப்பாக இந்திய ரசிகர்கள் ஹாலிவுட் ஆக்ஷன் படங்களை விரும்பி பார்ப்போம். ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் படங்கள், மேட் மேக்ஸ் படங்கள், ஜான் விக் சீரீஸ் என எல்லா படங்களுமே இந்தியாவில் சக்கை போடு போட்டன. அந்த வகையில் 2022-ஆம் ஆண்டு வெளியான அதிரடி ஆக்ஷன் படம் தான் சிசு. இரண்டாம் உலக போரின் இறுதியில், போரின் பின்விளைவுகளால் தன குடும்பத்தினர் அனைவரையும் இழந்த ஒரு போர் வீரர், தனித்து வாழ்ந்து வரும் தருணத்தில் இயற்கையின் பரிசாக கிடைத்த தங்கப் புதையலை எடுத்துக் கொண்டு பயணிக்கும் பொது , வெறி கொண்டு அலையும் சில ஜெர்மானிய வீரர்களின் கையில் சிக்காமல் இருக்க அவர்களை திரும்ப தாக்குகிறார்! அவர்களிடம் இருந்து தப்பித்தும் விடுகிறார்! அத்துடன் முதல் பாடம் முடிந்தது. அதை தொடர்ந்து வெளியாகி இருக்கிறது இரண்டாம் பாகம் “சிசு – ரோடு டூ ரிவெஞ்ச்”!
படத்தின் கதைப்படி, போரில் கொல்லப்பட்ட தன் குடும்பத்தாரின் நினைவாக, அவர்கள் வாழ்ந்த வீட்டை அப்படியே இடம் பெயர்த்து வேறு ஒரு இடத்தில் புதிதாக அந்த மரக்கட்டை, பலகைகளை வைத்து புது வீட்டை கட்டி வாழ முயற்சிக்கிறார் நாயகன். ஆனால் அவரை கொன்றே தீர வேண்டும் என்ற ஒரு வெறி உணர்வோடு அவரை தேடித் தேடி தாக்கி கொல்ல முயற்சிக்கிறது எதிரணி! ஆனால் நாயகனோ The Immortal என சொலப்படுபவர், சாக மாட்டேன் என்ற மன உறுதியோடு வாழ்பவர். அதி நவீன ஆயுதங்கள், பல நூறு போர் வீரர்கள் என அவர்கள் அனைவரையும் சமாளித்து தப்பித்தாரா? அவர் நினைத்தது போலவே அந்த வீட்டை எழுப்பினாரா? அந்த ஊரை சென்று சேர்ந்தாரா? என்பதே பரபரக்கும் அதிரடி ஆக்ஷன் படம்.
நம்ம ஊரு கமலஹாசன் ஆக்ஷன் ஹீரோவாக ரத்தம் சொட்டச் சொட்ட நடித்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறார் நாயகன் Jorma Tommila. முதல் பாகத்திலேயே தெறிக்க விட்டவர் இந்த பாகத்திலும் அதிரடி காட்டி இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகள் ஒவ்வொன்றிலும் சிரத்தை எடுத்து நடித்திருக்கிறார். Stephen Lang, Richard Brake ஆகியோரும் ஹீரோவுக்கு சற்றும் குறைவில்லாத கேரக்டர்களில் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கிறார்கள்.
முழு நீள ஆக்ஷன் படம். அதை மிகச் சிறப்பாக படம் பிடித்து தந்துள்ளார் ஒளிப்பதிவாளர் Mika Orasmaa. சிசு படத்தை பொறுத்தவரை கதையை தாண்டி சண்டைக் காட்சிகள் தான் பிரதானம். அடுத்து என்ன அடுத்து என்ன என எதிர்பார்ப்பை எகிற வைக்கும், மயிர்கூச்செறிய வைக்கும் சண்டைக் காட்சிகள் படத்தின் ஆகப்பெரும் பலம். ஒவ்வொரு எபிசோடிலும் வரும் ஒவ்வொரு சண்டைக் காட்சியும் அதை எடுத்த விதமும் பிரமிக்க வைக்கிறது.
சிசு முதல் பாகத்தை இயக்கிய Jelmari Helander தான் இந்த படத்தையும் எழுதி இயக்கியுள்ளார். இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் நடக்கும் ஒரு கதைக்கு ஏற்ப லொகேஷன்ஸ் மற்றும் காட்சியமைப்புகள் என அத்தனையும் பிரமாதப்படுத்தியுள்ளார். முதல் பாகத்தில் இடம் பெற்ற சண்டை காட்சிகள் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டன! அதை எல்லாம் தூக்கி சாப்பிடும் விதத்தில் சண்டை காட்சிகள் அமைந்திருக்கின்றன. மொத்தத்தில் பைசா வசூல் ஆக்ஷன் டமாகா தான் இந்த சிசு பார்ட் 2. நிச்சயம் தியேட்டரில் சென்று பார்த்து ரசிக்கலாம்..

