‘என்ன விலை’ ஆடியோ உரிமையை பெற்ற ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை நிறுவனம்!

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஜி.வி. பிரகாஷ் குமாரின் கலைப் பயணம், பல்வேறு படைப்புத் தளங்களில் விரிவடைந்து வருகிறது. பல்வேறு திரைப்படப் பணிகளில் தொடர்ந்து பிஸியாக இருந்தாலும், புதிய இசைத் தளங்களிலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார். இதன் மூலம் இந்திய இசை உலகில் தனித்துவமான குரலாக தனது இடத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளார்.

இசைத் துறையில் தனது சொந்த இசை நிறுவனத்தின் வாயிலாக திறமையான மற்றும் புதிய இசைப் படைப்புகளை ஊக்குவிக்கும் முயற்சியிலும் ஜி.வி. பிரகாஷ் குமார் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக, திரையுலகில் தன்னுடன் பயணிக்கும் சக இசையமைப்பாளர்களின் இசையில் உருவாகும் திரைப்படங்களின் ஆடியோ உரிமைகளைப் பெற்று, அவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பது இதன் முக்கிய நோக்கமாகும்.

அந்த வகையில், ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை நிறுவனம் தற்போது விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தின் ஆடியோ உரிமையைப் பெற்றுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் சஜீவ் பழூர் இயக்கியுள்ள இப்படத்தில் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் முதல் பாடலான ‘கடலாடும்’ ஏற்கனவே ஜி.வி. பிரகாஷ் குமாரின் அதிகாரப்பூர்வ இசைத் தளத்தின் வாயிலாக வெளியாகியுள்ளது. அந்தோணி தாசனின் வசீகரிக்கும் குரல் மற்றும் உணர்வுப்பூர்வமான வரிகளுடன் உருவாகியுள்ள இப்பாடல், ‘என்ன விலை’ படத்தின் உலகிற்குள் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ளதுடன், படம் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

தேசிய விருது பெற்ற இயக்குநர் சஜீவ் பழூர் இயக்கியுள்ள ‘என்ன விலை’, பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இதனால், படத்தின் திரையரங்கு வெளியீட்டுக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மேலும், தமிழ் திரையுலகில் நடிகர் கருணாஸ் தனது 25 ஆண்டுகால திரைப் பயணத்தை நிறைவு செய்யும் முக்கியமான தருணத்திலும் இப்படம் வெளியாகிறது. அதேபோல், தனது சிறப்பான நடிப்பால் கவனம் ஈர்த்து வரும் நடிகை நிமிஷா சஜயன் இந்த திரைப்படத்தில் நடித்திருப்பது கூடுதல் பலம்.

சர்வதேச திரைப்பட விழாக்களில் வரவேற்பைப் பெற்றுள்ள ‘என்ன விலை’, ஜெர்மனியில் நடைபெற்ற மேன்ஹெய்ம் ஆர்ட் அண்ட் ஃபிலிம் பெஸ்டிவலில் சிறந்த திரைப்படத்திற்கான விருதையும், தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதையும் வென்றுள்ளது. மேலும், இஸ்தான்புல்லில் நடைபெற்ற கயா சர்வதேச திரைப்பட விழா மற்றும் சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற அட்லாண்டா இந்திய திரைப்பட விழா ஆகியவற்றிலும் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டுள்ளது. இதன் மூலம் திரையரங்கு வெளியீட்டுக்கு முன்பாகவே இப்படம் சர்வதேச அளவில் வலுவான தடம் பதித்துள்ளது.

கலாமயா சினிவெர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜிதேஷ் விஸ்வாம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ‘என்ன விலை’ திரைப்படம் செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் ஆடியோ உரிமையை ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை நிறுவனம் கைப்பற்றியிருப்பது, படத்தின் இசைப் பயணத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளது. படத்தின் இசைத் தொகுப்பிலிருந்து அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ‘என்ன விலை’ படத்தின் சிறப்புத் திரையிடல்களைப் பார்த்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள், படத்தின் தாக்கத்தாலும், அழுத்தமான கதை சொல்லல் முறையாலும் வெகுவாக ஈர்க்கப்பட்டுள்ளனர். படத்தைப் பார்த்த பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். அவர்களின் உற்சாகமான வரவேற்பு, இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டுக்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *