சம்ஹாரம் – விமர்சனம்!

நடிகர் பிரஜின் நடிப்பில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு வெளியாகி இருக்கும் திரைப்படம் சம்ஹாரம். ஒரு இரவில், ஒரு லொகேஷனில் நடக்கும் ஒரு திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படம் பிரஜினுக்கு அவர் நினைத்த வெற்றியை கொடுத்ததா? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, நாயகன் பிரஜின். தாய் தந்தை இல்லாத குடும்பத்தில் தன் இரு தங்கைகளை வளர்த்து நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டிய பொறுப்புடன் இருக்கிறார். முதல் தங்கையை தன் சொந்த மாமா மகனுக்கு திருமணம் செய்து வைத்து குடும்ப சொந்தம் விட்டுப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறார். ஆனால் தங்கைக்கு அந்த திருமணத்தில் விருப்பமில்லை, மாமன் மகன் மோசமானவன் என்பதையும் சொல்கிறார். ஆனால் பிரஜின் அதை நம்ப மறுக்கிறார். சில நாட்களில் தங்கை யாராலோ கொலை செய்யப்படுகிறார்.

பின் சில மாதங்கள் கழித்து தன் இரண்டாவது தங்கை ஷருமிஷாவை அதே மாமன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து திருமண ஏற்பாடுகளை செய்கிறார். விடிந்தால் திருமணம் என்ற சூழலில் நாயகி ஷாருமிஷாவோ காதலனுடன் வீட்டை விட்டு ஓட திட்டமிடுகிறார். மாமன் மகன் பிரஜின் வீட்டில் வந்து தங்குகிறார். பிரஜின் நண்பருக்கு வேண்டிய தந்தை, மகள் கார் பிரேக் டவுன் எனக் கூறி அந்த இரவு மட்டும் அங்கே தங்குகிறார்கள். ஷாருமிஷா காதலன் அவரை அழைத்துச் செல்ல வீட்டிற்குள் நுழைகிறார். இப்படி பல மனிதர்கள் அந்த ஒரே வீட்டில் ஒரு இரவில் தங்க, அடுத்து என்ன நடக்கும்? விடிந்தால் திருமணம் நடக்குமா? பிரஜின் ஏன் பிடிவாதமாக இருக்கிறார்? என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடை சொல்லும் படமே “சம்ஹாரம்”.

நாயகன் பிரஜின். ஆரம்ப காட்சிகளில் இவர் தான் வில்லனோ என எண்ணுமளவுக்கு வில்லத்தனம் கலந்த நடிப்பில் மிரட்டுகிறார். பெண்களை அடக்கி ஒடுக்க நினைக்கிறாரோ எனவும் எண்ண வைக்கிறார். ஆனாலும் அவர் கதாபாத்திரம் என்ன என்பதை போகப் போக அவர் நடிப்பால் புரிய வைக்கிறார். தாடி, மீசை இல்லாமல் இன்னும் இளமையாக புதுவித தோற்றத்தில் ரசிக்க வைக்கிறார்.

நாயகி ஷருமிஷா. பிரஜின் தங்கையாக கதையின் மையக் கதாபாத்திரமாக படம் முழுக்க நம்மை உட்கார வைக்கிறார். அழகாக இருக்கிறார். ரசிகர்களையும் அவர் நடிப்பால் ஈர்க்கிறார். பிரஜின் மனைவியாக வரும் இன்னொரு நாயகி நியா வர்கீஸ், அதிக முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரம் தான் என்றாலும் கிடைத்த வாய்ப்பை அழகாக பயன்படுத்தி இருக்கிறார்.

வில்லனாக வரும் கணேஷ் சாவரட்டில் இவர் நல்லவரா? கெட்டவரா? என எண்ண வைக்கும் அளவுக்கு ஒரு புதிரான கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்கிறார். பிரஜின் போலவே இவருக்கும் ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் அதகளம். ராஜ் குமார், தென்றல் ராஜா மற்றும் இயக்குனர் ராம் பிரபா என மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் அவரவர் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சுரேஷ் குமார் சுந்தரம் கொடுத்த பட்ஜெட்டில் ரசிகர்களை உறுத்தாத, ரசித்து பார்க்க வைக்கும் வகையில் ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார். ஹரி கிருஷ்ணன் இசை படத்துக்க்யு பக்க பலம். பல மாண்டெஜ் காட்சிகளில் பின்னணி இசை அதன் வீரியத்தை அதிகப்படுத்தி காட்டியிருக்கிறது.

இயக்குனர் ராம் பிரபா. பட்ஜெட்டில் ஒரு படத்தை பரபரப்பான திரில்லர் படமாக கொடுக்க முடியும் என அவரால் முடிந்த அளவுக்கு நிரூபித்திருக்கிறார். எளிய கதை, எளிமையான, சுருக்கமான திரைக்கதை மூலம் குடும்பத்துடன் பார்க்கும் படத்தை தந்திருக்கிறார். 1 மணி நேரம் 50 நிமிடங்கள் என கால அளவு கச்சிதமாக இருப்பதும், தேவையற்ற காட்சிகளை வைக்காததும் படத்தை கதையிலிருந்து விலகாமல் பார்த்துக் கோண்டதோடு நம்மை ரசிக்க வைத்திருக்கிறது. முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் அடுத்தடுத்து திருப்பங்கள் பார்வையாளர்களை ஈர்க்கிறார். ஒரே இடத்தில் நடக்கும் கதை என்ற குறை இருந்தாலும் அதையும் நிறையாக மாற்றி இருக்கிறார். மொத்தத்தில் எதையும் யோசிக்காமல் அமர்ந்தால் நிச்சயம் ஒரு முறை பார்க்கக்கூடிய நல்ல திரில்லர் தான் இந்த சம்ஹாரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *