பெத்தி – விமர்சனம்!

RRR படத்துக்கு பிறகு நடிக்கும் எல்லா படங்களுமே பிரமாண்டமான பான் இந்தியா படங்களாக நடித்து வரும் ராம்சரண் நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் “பெத்தி”. சுகுமார் பட்டறையில் பட்டை தீட்டப்பட்டவரும், உப்பெணா என்ற முதல் படத்தின் மூலமே முத்திரை பதித்தவருமான புச்சி பாபு சனா இயக்கியிருக்கும் இந்த படம் எப்படி இருக்கு? இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, மலைகிராமவாசி ராம்சரண் மற்றும் அவரது ஊர்க்காரர்கள் பிழைப்புக்காக பக்கத்து ஊரான விஜயநகரம் வந்து சர்க்கரை ஆலையில் கூலிக்கு வேலை செய்கிறார்கள். ராம்சரண் கிரிக்கெட் விளையாட்டிலும் வல்லவர் என்பதால் அந்த ஊரில் பணக்காரர்கள் அவர்களது அணியில் கூலிக்கு விளையாட ராம்சரணை ஏலத்துக்கு எடுப்பது வழக்கம். அவர் களத்துக்கு வந்தாலே அதிரடி தான். ஒரு கட்டத்தில் ராம் சரணை அந்த கிரிக்கெட் அணியினர் அவமானப்படுத்தி விடுகிறார். இதற்கிடையில் ராம்சரண் சொந்த கிராமத்தின் வழியாக செல்லும் ரயில் வண்டி அங்கு நிறுத்தம் இல்லாததால் நிற்காமல் செல்வதால் கிராம மக்கள் பல கிலோ மீட்டர் தொலைவு மலை ஏறி, நதியை கடந்து நடந்து தான் ஊருக்கு வர முடியும். அந்த ஊரில் இருக்கும் ஜகபதி பாபு எவ்வளவோ முயற்சித்தும் அரசு அலுவலகங்களுக்கு நடந்தும் அவர் கோரிக்கை நிறைவேறாமலே இருக்கிறது. கிரிக்கெட்டில் வல்லவரான ராம்சரண் குஸ்தி வாத்தியார் சிவராஜ்குமார் உதவியால் குஸ்தி வீரனாகவும் மாறுகிறார். அப்படி அந்த விளையாட்டின் மூலம் எப்படி அவர் தன் சொந்த ஊருக்கு அடையாளத்தைப் பெற்றுத் தருகிறார் என்பதை எமோஷன் மற்றும் அதிரடி கலந்து சொல்வதே மீதிக்கதை.

நாயகன் ராம்சரண், சுகுமார் இயக்கத்தில் ரங்கஸ்தலம் மூலம் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதையும் நிரூபித்தார். சுகுமாரின் சிஷ்யன் படத்தின் மூலம் இன்னும் அடுத்த கட்டத்துக்கு நடிப்பு திறமையை கொண்டு சென்றிருக்கிறார். குறிப்பாக இரண்டாம் பாதியில் எல்லாம் அவரது நடிப்பால் நம் மனதை உருக்கி எடுக்கிறார். அதே நேரம் விளையாட்டு வீரராக அவ்வளவு அர்ப்பணிப்புடன் நடித்திருக்கிறார். குஸ்தி எல்லாம் நிஜ குஸ்தி வீரரை பார்ப்பது போலவே இருக்கிறது.

ராம் சரணை அடுத்து படத்தில் இன்னொரு ஹீரோ என சொல்லும் அளவுக்கு ஒரு அழுத்தமான முத்திரையை பதித்திருக்கிறார் சிவராஜ்குமார். குஸ்தி வாத்தியாராக வந்து ராம்சரணை வார்த்தெடுக்கிறார். அந்த கம்பீரமும், முக்கியமான காட்சியில் அவரது உருக்கமான நடிப்பும் தரம்.

நாயகி ஜான்வி கபூர், நல்ல அழகு. ஆனால் கமெர்சியல் படத்துக்கு ஹீரோயின் வேண்டுமே என எழுதப்பட்ட கதாபாத்திரமாகவே நிற்கிறது. கவர்ச்சி நாயகியாக மட்டுமே வலம் வந்திருக்கிறார். கதையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத ஒரு கதாபாத்திரம். ஜகபதி பாபு அடையாளமே கண்டுபிடிக்க முடியாத ஒரு தோற்றத்தில் வந்து முக்கியமான காட்சியில் மனதில் இடம் பிடிக்கிறார். பொமன் இரானி கதையில் ஏதாவது செய்வார் என பார்த்தால் வெறும் கதை கேட்கும் ஒரு கதாபாத்திரத்தில் வந்து செல்கிறார். ஸ்ருதிஹாசன் ஒரு பாடலுக்கு அவரது நளினமான நடனம் மற்றும் கவர்ச்சியால் வசீகரிக்கிறார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவரது இசையால் படத்தை தூக்கி நிறுத்துகிறார். பாடல்களை காட்டிலும் பின்னணி இசையில் இன்னும் உயிர் கொடுத்திருக்கிறார். சிக்ரி பாடலும், ஹல்லல்லோ பாடலும் இளமை துள்ளல். ரத்னவேலு ஒளிப்பதிவில் பிரமாண்டமாக காட்சிகள் விரிகிறது. பல சிஜி காட்சிகள் தெரிந்தாலும் பெரும்பான்மையான இடங்களில் ரத்னவேலு ஒளிப்பதிவு படத்தை பல படிகள் உயரத்தில் வைக்கிறது. ஷாம் கௌஷல், சுப்ரீம் சுந்தர் ஆகியோர் சண்டைக் காட்சிகள் அசத்தல்.

உப்பென்னா என்ற முதல் படத்திலேயே முத்திரையை அழுத்தமாக பதித்த புச்சி பாபு சனா, இந்த படத்தை இன்னும் பிரமாண்டமாக, அதே சமயம் ஆன்மாவை தொடும் விஷயங்களையும் பேச முயற்சி செய்திருக்கிறார். ஒரு தனி மனிதனுக்கு அடையாளம் என்பது எவ்வளவு முக்கியம், அப்படிப்பட்ட அடையாளம் ஒரு ஊருக்கே இல்லாமல் இருக்கும் அவலத்தை பேசியிருக்கிறார். அதை விளையாட்டு பின்னணியில் சொன்ன விதமும் அருமை. அதற்காக அவர் தொட்டிருக்கும் விளையாட்டுக்களும், அதை எப்படி கடக்கிறார் என்பதையும் சிறப்பாகவே சொல்லியிருக்கிறார். திரைக்கதையில் ஆங்காங்கே சொதப்பல்கள் இருந்தாலும் முழுப்படத்தையும் பார்க்க வைக்கிறார் ராம்சரண்.

படத்தின் நீளம் ஒரு முக்கியமான பிரச்சினை. இரண்டாம் பாதியில் இருக்கும் அழுத்தம் முதல் பாதியில் இல்லாமல் போனது தான் முதல் குறை. மிக நீளமான முதல் பாதியை கடந்தால் தான் அவர் சொல்ல வந்த மையக்கருத்தான இரண்டாம் பாதியில் இருக்கும் கருத்து ரசிகர்களை சென்றடையும். முதல் பாதியை கொஞ்சம் சுருக்கமாக சொல்லி, மையக்கதைக்குள் சென்றிருந்தால் இன்னும் சிறப்பான படமாக அமைந்திருக்கும். ஆனாலும் குடும்பத்துடன் சென்று பார்க்கக் கூடிய படமாகவே அமைந்திருக்கிறது இந்த ‘பெத்தி’. நிச்சயம் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *