பாண்டிராஜ் எந்த மாதிரி ஜானரில் படம் எடுத்தாலும் அதில் ரசிகர்களை திருப்திப்படுத்தி விடுவார். வெற்றிப்படமாகவும் கொடுத்து விடுவார். காமெடி, ஃபீல்குட் ட்ராமா மற்றும் குடும்பப் படங்களில் தான் வல்லவர் என நினைக்கும்போது கதகளி போல ஒரு திரில்லர் படத்தை தந்து விடுவார். இப்போது ஃபேலிமி ஃட்ராமாவில் கதகளியை கலந்து கொடுத்திருக்கும் ஒரு படம் தான் “பரிமளா அண்ட் கோ”. படம் எப்படி இருக்கு? இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, ஜெயராம், ஊர்வசி தம்பதியினர் கல்லூரி படிக்கும் தங்களின் இரு மகள்கள் சஞ்சனா & அனந்திகா உடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். சகோதரிகள் இருவரும் எலியும் பூனையுமாய் சண்டையிட்டு கொண்டே இருக்கிறார்கள். அதே ஏரியாவை சேர்ந்த ரவுடி சாண்டி அனந்திகா பினால் சுற்றி காதலிப்பதாகவும் சொல்லி தொல்லை கொடுகிறார். ஜெயராம் உட்பட ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் தொல்லை தருகிறார் சாண்டி. ஒரு கட்டத்தில் சாண்டியை கொலை செய்து விடலாமா என எண்ணும் அளவுக்கு நிலைமை செல்கிறது. அந்த யோசனையில் இருக்கும்போதே சாண்டியை யாரோ மர்மமான முறையில் கொலை செய்து விட, அந்த கொலையை செய்தது யார் என போலீஸ் ஒரு புறம் துப்பு துலக்க, ஜெயராம் குடும்பத்தினரும் நம்ம குடும்பத்தினர் யாரோ தான் அந்த கொலையை செய்தது என சந்தேகித்து விசாரிக்கிறார்கள். உண்மையில் சாண்டியை கொலை செய்தது யார்? காரணம் என்ன? என்பதை காமெடி தூக்கலாக சொல்லியிருப்ப்பதே இந்த பரிமளா அண்ட் கோ.
ஜெயராம், ஊர்வசி ஜாடிக்கேத்த மூடி என்பது போல ஜோடி மிக மிகப் பொருத்தமான ஒரு ஜோடி. காமெடியில் கலக்கி எடுக்கிறார்கள். அவர்களது டைமிங் சென்ஸ், ரியாக்ஷன்ஸ், வசனங்கள் என ஒவ்வொன்றிலும் ஸ்கோர் செய்கிறார்கள். கஞ்சத்தனம் செய்யும் ஜெயராம் அக்காவுக்கு பட்டுப்புடவை எடுப்பது, உறவினர்கள் முன் டாக்ஸியில் போய் இறங்கும் ஊர்வசி என அந்த காட்சியே அதகளம். கிளைமாக்ஸில் விசாரணை சீனில் ஜெயராம், ஊர்வசி அடிபொலி. காமெடி மீட்டர் மட்டும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
மகள்களாக வரும் சஞ்சனா, அனந்திகா சனில்குமார் என இரண்டு பேருமே அழகு, கியூட்டான ரியாக்ஷன் மூலமாக படம் முழுக்க ரசிக்க வைக்கிறார்கள். ஜெயராம், ஊர்வசிக்கு ஈடு கொடுத்து காமெடியிலும் கலக்குகிறார்கள். சாண்டி அவருக்கே கைவந்த கலை என்பது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் அசால்ட்டாக நடித்து ஸ்கோர் செய்கிறார். யோகி பாபு மொத்தமே 2,3 நாட்கள் கால்ஷீட் வாங்கி படம் பிடித்திருக்கிறார்கள். அந்த வீட்டை சுற்றியே வந்தாலும் அவர் ஒன்லைனர்கள் தியேட்டரை தெறிக்க விடுகிறது.
மிஷ்கின் காவல்துறை அதிகாரியாக பின்னி எடுக்கிறார். அறிமுக காட்சியிலேயே ரகளையான எண்ட்ரி. அதற்கும் ஒரு லாஜிக் சரியாக அமைந்தது இன்னும் சிறப்பானதாக்குகிறது அந்த காட்சியை. காமெடியையும் தாண்டி அவர் கதாபாத்திரத்தின் இன்னொரு பரிமாணம் வெளிப்படும் இடம் படத்தின் ஆணிவேர். தயாரிப்பாளர் தமிழ் குமரன் நடிப்பில் புதிது என்றாலும் குறையில்லாத நடிப்பு. தேனப்பன், பூர்ணிமா ரவி, சிங்கம் புலி, பகவதி பெருமாள், சென்றாயன் என ஏகப்பட்ட நடிகர்கள். அவர்களும் வலு சேர்க்கிறார்கள்.
ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு சென்னையில் பல இடங்களை அழகாக படமாக்கியிருக்கிறது. பட்ஜெட்டில் நல்ல விசுவல்ஸை தந்திருக்கிறார். அறிமுக இசையமைப்பாளர் Foxn இசையில் வாச்ச உடாத பாடல் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை ஒகே ரகம்.
இயக்குனர் பாண்டிராஜ். ஒரு திரில்லர் படத்துக்கான கதைக்களத்தை எடுத்துக் கொண்டு அதில் காமெடியை கலந்து ஒரு வித்தியாசமான அனுபவத்தை தர முயற்சி செய்திருக்கிறார். காமெடி பல காட்சிகளில் ஒர்க் அவுட் ஆகிறது, ரசிக்க வைத்திருக்கிறது. ஆனாலும் ரவுடி கும்பல், போதைப் பொருள், Stalking போன்ற மோசமான, சீரியஸான விஷயங்களை எல்லாம் காமெடியாக சொல்லும்போது அதை எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது என குழம்ப வைக்கிறார் இயக்குனர். அவர் பல கோணங்களை, பல தியரிக்களை போகிற போக்கில் சொல்லி விட்டுப் போவதை நாம் நம்புவதா? வேண்டாம? நம்பினால் அந்த கதாபாத்திரத்தின் தன்மையே மாறி விடும் அபாயமும் இருக்கிறது. அதே நேரம் குடும்பத்துக்குள் ஒளிவு, மறைவு இருக்குமா என்ற விஷயம் படத்துடன் ஒன்ற விடாமல் செய்கிறது. ஆனாலும் ஆங்காங்கே வரும் காமெடியை ரசித்து சிரித்து விட்டு நாம் கடந்து செல்கிறோம். இந்த மாதிரியான லாஜிக் எல்லாம் பார்க்காமல் குடும்பத்துடன் சென்று ரசிக்கும் ரசிகர்கள் நிச்சயம் தியேட்டரில் சிரித்து ரசிப்பார்கள் என்பதை உறுதியாக சொல்லலாம்.

