ஆட்டி – விமர்சனம்!

மேதகு, சல்லியர்கள் படங்களை இயக்கிய இயக்குனர் த.கிட்டு இயக்கத்தில், இசக்கி கார்வண்ணன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் “ஆட்டி”. 1960, 1970களில் நடக்கும் ஒரு கதை. படம் எப்படி இருக்கு? இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, ஒரு மலை கிராமத்தில் பெரும்பாலான மக்கள் மலையில் இருக்கும் தேயிலை தோட்ட வேலை, ஆண்களில் சிலர் வேட்டையாடுவதை தொழிலாக கொண்டிருக்கிறார்கள். அந்த கிராமத்திலேயே அதிகம் படித்த பெண் அபி நட்சத்திரா. படிப்பில்லாத தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் போல அடுத்த தலைமுறையும் இருக்கக் கூடாது என்பதற்காக அந்த ஊர் குழந்தைகளுக்கு இலவசமாக படிப்பு சொல்லிக் கொடுக்கிறார். அந்த ஊருக்கு வருகிறார் ஒரு வாத்தியார். சில நாட்களிலேயே அவர் கொலை செய்யப்பட, அந்த கொலையை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பதை விசாரிக்க அந்த ஊருக்கு மாற்றலாகி வருகிறார் காவல்துறை ஆய்வாளர் இசக்கி கார்வண்ணன். கொலையாளியை கண்டுபிடித்தாரா? பின்னணி என்பதே மீதிக்கதை.

கதையின் நாயகனாக இசக்கி கார்வண்ணன். ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக, கொலை வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக கம்பீரமாக வலம் வருகிறார். நல்ல ஒரு நடிப்பை வழங்கியிருக்கிறார். வழக்கை வேறு ஒரு கோணத்தில் கொண்டு சென்ற விதம் அருமை. அபி நட்சத்திரா மலை கிராமத்தில் இருக்கும் படித்த பெண்ணாக, குழந்தைகளுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்கும் பெண்ணாக மனதில் நிற்கும் கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்கிறார். பள்ளி ஆசிரியராக வரும் பிரவீன் பழனிச்சாமி மிரட்டலான நடிப்பை தந்திருக்கிறார். காதல் சுகுமார் அவ்வபோது காமெடி காட்சிகளில் கலகலப்பூட்டுகிறார். பெரிய அறிமுகம் இல்லாத நடிகர்கள் என்றாலும் ஒவ்வொருவருமே வியப்பூட்டுகிறார்கள்.

சிபி சதாசிவம் ஒளிப்பதிவு அந்த காலகட்டத்தை நம் கண்முன்னே நிறுத்துகிறது. அதற்கு கலை இயக்குனர் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் பங்களிப்பு பெருமளவில் உதவி புரிந்திருக்கிறது. இசையமைப்பாளர் தீசன் பின்னணி இசையில் படத்துக்கு மிகப்பெரிய அளவுக்கு உதவி புரிந்திருக்கிறார். சுரேஷ் சண்டைக் காட்சியை வடிவமைத்திருக்கும் விதம் அருமை.

இயக்குனர் த.கிட்டு. ஒவ்வொரு படத்திலும் நாம் இதுவரை பார்க்காத ஒரு கதைக்களத்தை நம் கண் முன் நிறுத்துபவர். இந்த படத்திலும் தமிழ்ச் சமுதாயம் எப்படி எல்லாம் இருந்திருக்கிறது என்பதை நமக்கு மிக அழகாக சொல்லியிருக்கிறார். திருமுருகன் திரைக்கதையில் செய்திருக்கும் பங்களிப்பு அளப்பரியது. வசனங்களும் படத்துக்கு மிகப்பெரிய பலம். 1:30 மணி நேரம் நீளம் இயக்குனர் சொல்ல வந்த கருத்தை சொல்ல போதுமானதாக இருந்திருக்கிறது. தமிழ்ச் சமுதாயத்தில் பெண்களின் நிலை எப்படி இருந்தது, சிறுதெய்வ வழிபாடு போன்றவற்றையும் சிறப்பாக சொல்லியிருக்கிறார். நிச்சயம் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *