இரட்டையர் – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் இரட்டையர்களை மையப்படுத்திய ஒரு சில படங்கள் வெளிவந்திருக்கின்றன. அந்த வகையில் இரட்டை குழந்தைகளை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் தான் “இரட்டையர்”.  Asia Iconic Studios சார்பில் ராஜேஸ்வரி லக்ஷ்மிநாராயணன் மற்றும் வினோத் கண்ணன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஜெகதீஷ் இயக்கியிருக்கிறார். ஒரு சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகியுள்ள இந்த “இரட்டையர்”படத்தில் அபிநயா நாயகியா நடிக்க, அனுமிதா மற்றும் அனுஷிதா என்ற இரட்டை குழந்தைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படம் எப்படி இருக்கு? இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, நாயகி அபிநயா தன் கணவர் மற்றும் இரட்டை குழந்தைகளுடன் மலைப்பகுதியில் உள்ள வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருக்கிறார். வழியில் நடக்கும் ஒரு விபத்தில் கணவரை பறிகொடுக்கிறார். அபிநயா முகமும் கடுமையாக சேதமடைகிறது. பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளும் அபிநயா வீட்டிற்கு கிளம்புகிறார். அவரின் நடத்தைகள், குரல் என எல்லாமே வித்தியாசத்தை தர, அவரது இரட்டை குழந்தைகளுக்கு அவர் உண்மையான அம்மாவா என்ற சந்தேகம் எழுகிறது. அம்மாவை மறைத்து வைத்து விட்டு அல்லது கொன்று விட்டு யாரோ ஒருவர் அம்மா போல வேடமிட்டு வந்திருப்பதாக சந்தேகிக்கிறார்கள். அந்த இரட்டை குழந்தைகள் அதன் பின் செய்யும் விஷயங்களும், உண்மையா அம்மா அபிநயா எங்கே என்பது போன்ற கேள்விகளுக்கு விடையுமாக அமைந்திருக்கிறது மீதிக்கதை.

நாயகியாக அபிநயா. இரட்டை குழந்தைகளுக்கு தாயாக ஒரு முதிர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதுவரை மிக அழகாக மட்டுமே பார்த்து பழக்கப்பட்டவரை இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்த முகமாக பார்ப்பது ரொம்பவே வித்தியாசமான அனுபவம்.

இரட்டை குழந்தைகளாக வரும் அனுமிதா மற்றும் அனுஷிதா. படத்தை மொத்தமாக நகர்த்தி செல்வதே இந்த இரண்டு பேர் தான். படம் முழுக்க இந்த இரண்டு சிறுமிகளும் செய்யும் ஒவ்வொரு செயல்களுமே நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. கிளைமாக்ஸில் எல்லாம் நம்மை அதிர்ச்சி அடையவும் வைக்கிறார்கள். சுப்ரமணிய சிவா மிக முக்கிய கதாபாத்திரத்தில் கதையின் போக்கையே, அதை நாம் பார்க்கும் கோணத்தையே மாற்றி வைக்கிறார். மறைந்த வெங்கட் சுபா அவர்களை இந்த படத்தில் பார்த்தது ஒரு நோஸ்டல்ஜிக் அனுபவம்.

வெறும் 21 நாட்களில் படமாக்கப்பட்ட படம் என்பது சற்று ஆச்சர்யம் தான். மொஹமது அமீன் ஒளிப்பதிவு கதைக்கேற்ப அமைந்திருக்கிறது. சில இடங்களில் எந்த லைட்டும் உபயோகம் செய்யாமல் படம் பிடித்த உணர்வை தருகிறது. GKV பின்னணி இசை இந்த சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்துக்கு மேலும் ஒரு வித்தியாசமான உணர்வை தருகிறது. எடிட்டர் ஈஸ்வர மூர்த்தி 1:30 மணி நேரத்தில் படத்தை கொடுத்ததற்கும் பாராட்டுக்கள்.

இயக்குனர் ஜகதீஷ். ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் மொத்தமே ஒரு 5,6 கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு ஒரு திகிலூட்டும் சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தை தந்திருக்கிறார். முழுக்க அந்த வீட்டுக்குள் நடக்கும் காட்சிகள் ஒரு வித்தியாசமான ஹாரர்-த்ரில்லர் அனுபவத்தை தருகிறது. நம் கவனத்தை வேறு ஒரு பக்கம் திருப்பி, சொல்ல வந்த திடுக்கிடும் திருப்பங்களை கிளைமாக்ஸில் சொல்லி நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார் இயக்குனர். முதல் பாதி முழுக்க அடுத்து இது தானே என நினைக்க வைத்தவர் கிளைமாக்ஸில் நீங்க நினைச்சது இல்ல என சொல்லி அசால்ட்டாக ஸ்கோர் செய்கிறார். மொத்ததில் ஒரு ஹாலிவுட் ஸ்டைல் சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தை தந்து மிரட்டியிருக்கிறார். மேக்கிங்கிலும் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்திருந்தால் உலகம் முழுக்க கொண்டாடியிருப்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *