இந்தியாவின் முன்னணி OTT தளமான பிரைம் வீடியோ பல நல்ல இணையத் தொடர்களை தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டுள்ளது. அந்த வகையில் தற்போது வெளியிட்டிருக்கும் தொடர் தான் ‘எக்ஸாம் – EXAM’. போட்டித் தேர்வுகளின் பின்னணியில் நடைபெறும் குற்றப் பின்னணியில் உருவாகியிருக்கும் ஏழு எபிசோடுகளைக் கொண்ட சஸ்பென்ஸ் ட்ராமாவான இந்த தொடர் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
இந்த தொடரின் கதைப்படி, மரமல்லி என்ற ஒரு DSP-யாக இருக்கும் அதிதி பாலன் பணியிட மாற்றமாகி, உதகம் மலை என்ற ஊருக்கு வருகிறார். பணியில் சேரும் முன் அவரை கடத்தி அடைத்து வைத்து, அவரது இடத்தில் DSP-யாக ஆள் மாறாட்டம் செய்கிறார் துஷாரா. ஒரு குழுவே அவருக்கு உதவியாக இருக்கிறது. போட்டித் தேர்வுகளில் முறைகேடுகளை செய்ய யாரோ சிலர் திட்டம் போட, அவர்களை கண்டுபிடித்தனரா? அந்த முறைகேடுகளை செய்வது யார்? எப்படி அரங்கேற்றுகிறார்கள்? ஆள் மாறாட்டம் செய்யும் துஷாரா மாட்டிக் கொண்டாரா? என்பதே மீதிக்கதை.
துஷாரா விஜயன் முழுக் கதையையும் தன் தோளில் சுமந்திருக்கிறார். தனக்கென ஒரு குழுவை வைத்துக் கொண்டு ஒரு விஷயத்துக்காக இறங்கி அடிக்கும்போது ஸ்கோர் செய்கிறார். பின் கதையில் நாடோடி அம்மாவுடன் வாழும்போதும் கஷ்டப்பட்டு போட்டித் தேர்வுக்கு படிக்கும்போதும், பின் ஜெயிலில் இருக்கும்போதும் நம்மை அவர் மீது பரிவு கொள்ள வைத்திருக்கிறார். அதிதி பாலன் கதாபாத்திரம் ஒரு துணைக் கதாபாத்திரமாகவே வந்து செல்கிறார். கதையில் அவருக்கு பெரிய முக்கியத்துவம் இல்லை எனினும் சில காட்சிகள் அப்ளாஸ் வாங்குகிறார். அப்பாஸ் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் ஒரு நல்ல நோக்கத்துக்காக துணை நிற்கும் மனிதராக வந்து மனதில் நிற்கிறார்.
இவர்களை தாண்டி, சரவண சக்தியின் கதாபாத்திரமும், துரை சுதாகர் கதாபாத்திரமும் மனதில் நிற்கிறது. துரை கதாபாத்திரம் ஒரு காட்சியில் அசால்ட்டாக ஸ்கோர் செய்கிறார். சரவண சக்தி எமோஷனலாக ஸ்கோர் செய்கிறார். வசுந்தரா கஷ்யாப் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் வந்தாலும் அவர் ஆளுமையை வெளிப்படுத்துகிறார். குமரேசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த சூரியா ஜெயா, நடுத்தர வயது மனிதர் நரேன் மணி என இருவருமே அந்த கதாபாத்திரத்தை தூக்கி நிறுத்திருக்கிறார்கள்.
அருண் அமரேந்திரன் ஒளிப்பதிவு தரத்தை உயர்த்தியிருக்கிறது. சாம்.சி.எஸ் பின்னணி இசை காட்சிகளை அடுத்த தளத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது.
வால் வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் புஷ்கர் & காயத்ரி தயாரிப்பில் வெளியான தொடர்கள் ஒவ்வொன்றுமே தரமானதாகவே இருந்து வந்திருக்கிறது. அந்த வகையில் இந்த தொடரும் ட்ரைலர் வந்தது முதலே எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தது. தேசிய விருது பெற்ற இயக்குநர் சற்குணம் இயக்கம் என்பது கூடுதல் சிறப்பு. முதல் எபிசோடில் இருந்தே இரண்டு கதைகளை இணையாக சொல்லிக் கொண்டே வந்து அந்த இரண்டையும் ஒரு புள்ளியில் இணைத்த விதம் அருமை. கதாபாத்திர தேர்விலேயே பாதி வெற்றியை பெற்றிருக்கிறார்கள் எக்ஸாம் குழுவினர். ஹீரோ வில்லன் என்பதை தாண்டி சராசரி மனிதர்களை அவர்களது சூழ்நிலையே எப்படி மாற்றுகிறது என்பதை தான் பெரிய அளவில் பேசியிருக்கிறார்கள்.
துஷாரா விஜயனின் பின் கதை நிச்சயம் ரசிகர்களுக்கு கண்ணீர் வர வைக்கும். அதிதி பாலன் ஏன் கடத்தப்பட்டார் என்பது தெரியும் புள்ளியும் சுவாரஸ்யமான இடம். சரவண சக்தி கிளைக்கதையும் கதையோட்டத்தில் கூடுதல் சிறப்பு. குமரேசன் கதையை இறுதி வரை எடுத்துச் சென்ற விதமும் அதை நிகழ்கால கதையில் இணைத்த விதமும் நன்றாக இருந்தது. மொத்தத்தில் ஒரு நல்ல தரமான சஸ்பென்ஸ் ட்ராமாவை தந்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். வீட்டில் உட்கார்ந்து குடும்பத்துடன் பார்த்து ரசிக்க தரமான ஒரு தொடர் இந்த “எக்ஸாம்”.

