அனந்தன் காடு – விமர்சனம்!

மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் ஆர்யா நடிப்பில் இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கியிருக்கும் படம் ‘அனந்தன் காடு’. 1980 மற்றும் 90களின் பின்னணியில் உருவாகியுள்ள ஓரு ஆக்‌ஷன் அரசியல் த்ரில்லர் திரைப்படமான இந்த படத்துக்கு லூசிஃபர் எழுத்தாளர் முரளி கோபி கதை, திரைக்கதை எழுதியுள்ளார். படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, 1990-களில் இலங்கையில் நடக்கும் ராணுவ மோதலில் குடும்பம் மற்றும் உறவுகளை இழந்து, தலைவர் உதவியால் உயிர் பிழைத்து தமிழ்நாட்டுக்குள் வருகிறார் ஆர்யா. அதே காலகட்டத்தில் கேரளாவில் அரசியல்வாதிக்காக கொலை உட்பட குற்றங்களை செய்து பிழைத்து வரும் கும்பல், அந்த வாழ்க்கையை விடுத்து நல்ல வாழ்க்கை வாழ விரும்புகிறார்கள். அந்த நேரத்தில் முதல்வர் பதவியை இழக்கும் ஒரு சூழல் வருகிறது. தன் பதவியை தக்க வைக்க தமிழகத்தின் தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு செல்வந்தரை கொலை செய்ய வேண்டி வர, இந்த கும்பலை கடைசியாக அந்த ஒரு கொலை செய்ய சொல்கிறார் முதல்வர். கேரளாவுக்கு அடைக்கலம் தேடி வருகிறார் ஆர்யா. அவரும் அந்த கும்பலுடன் சேர்ந்து கொள்கிறார். அந்த கொலையை செய்தது யார்? அதில் இருந்து இந்த கும்பல் மீண்டதா? என்பதே மீதிக்கதை.

நாயகன் ஆர்யா. கதைக்கு ஏற்ப பெரிதாக ஹீரோயிஸம் இல்லாமல் தீவிரமான நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளார். அவரது உடற்கட்டும், முக்கியமான காட்சிகளில் நடிப்பும் சிறப்பு. நிகிலா விமல் முக்கியமான கதாபாத்திரத்தில் ஒரு கண்ணியமான நடிப்பை தந்திருக்கிறார். சுனில் ஒரு மோசமான போலீஸ் அதிகாரியாக மிரட்டலான நடிப்பை தந்திருக்கிறார். இந்திரன்ஸ் இளைஞர்கள் கூட்டத்தை வழி நடத்தும் ஒரு அண்ணன் போல நல்ல நடிப்பு. கிளைமாக்ஸில் கலங்க வைக்கிறார்.

முரளி கோபி, சரத் அப்பாணி, தேவ் மோகன், விஜயராகவன், சாந்தி பாலகிருஷ்ணன் என மற்ற நடிகர்களும் நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். ரெஜினா கஸாண்ட்ரா, பரத் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்து ஆச்சர்யபடுத்தியிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு 1980 மற்றும் 90களின் காலக்கட்டத்தை திரையில் கொண்டு வர ஒளிப்பதிவாளர் கடினமாக உழைத்துள்ளார். கலை இயக்குனரின் பங்கும் அபரிமிதமானது. அஜனீஷ் லோகநாத் பின்னணி இசை படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் 1980,90 காலகட்டத்தில் அரசியல் பின் புலத்தில் நல்ல ஒரு படத்தை தந்திருக்கிறார். இலங்கைப் போர், ஈழம் பின்னணியில் மொத்த படமும் இருக்குமோ என நினைத்து செல்லும் ரசிகர்களுக்கு அப்படி இல்லாமல் தமிழக, கேரள நிலத்தில் நடக்கும் கதையை தந்து ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார். முதல் பாதி முழுக்க ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிக அழகாக அறிமுகப்படுத்தி, அவர்களின் முக்கியத்துவத்தை பதிய வைக்கிறார். இரண்டாம் பாதியில் எல்லாம் நம் மனதை கனக்க வைக்கிறார். ஆர்யாவுக்கு சார்பட்டா பரம்பரை படத்துக்கு பின் நிச்சயம் பாராட்டத்தக்க ஒரு படம் தான் இந்த அனந்தன் காடு. நிச்சயம் திரையரங்கில் காணக் கூடிய ஒரு நல்ல திரை அனுபவம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *