ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் தென்பாதியான் இயக்கத்தில், மிகப் பிரபலமான தயாரிப்பாளரான கே.ஜெ.ஆர் கதையின் நாயகனாக அறிமுகமாகியுள்ள படம் “அங்கீகாரம்”. விளையாட்டுத் துறையின் அவலங்களையும், சட்டத்தையும் சமூகத்தையும் கேள்வி கேட்கும் ஆழமான கருத்துகளுடன் உருவாகியுள்ள இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, சென்னையின் ஒரு ஒடுக்கப்பட்ட பின்னணியில் 8*8 அறையில் அம்மா, தங்கையுடன் வாழ்ந்து வரும் நாயகன் கே.ஜே.ஆர், சிறு வயதில் இருந்தே தடகள விளையாட்டையே உயிராய் நினைத்து வளர்கிறார். எந்த நேரமும் மைதானமே கதி என கிடக்கும் அவர், காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்ற லட்சியத்தோடு கடினமாக உழைத்து வருகிறார். ஆனால் விளையாட்டு ஆணையத்தில் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் பெரும் புள்ளிகள் இவரின் திறமையை அங்கீகரிக்க மறுக்கிறார்கள். தன்னை விட குறைவான தகுதி உடையவர்களுக்கு எப்படி அந்த வாய்ப்பு போகிறது? தனக்கு ஏன் தகுதி இருந்தும் வாய்ப்புகள் நிராகரிக்கப்படுகிறது என கேள்வி எழுப்பும் நாயகன் நீதிமன்றனத்தை நாடுகிறார். அப்படி நீதிமன்றத்தில் அவருக்கான நீதி கிடைத்ததா? காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்றாரா? என்பதே மீதிக்கதை.
நாயகன் கே.ஜே.ஆர். என்கிற ராஜேஷ். ஒரு தயாரிப்பாளராக பல இடங்களில் பார்த்த இவரை திடீரென திரையில் ஒரு நடிகராக, அதுவும் கதாநாயகனாக பார்ப்பதே மிகப்பெரிய ஆச்சர்யம். வெறுமனே நடித்தோம், ஹீரோ ஆனோம் என்றில்லாமல் கதையின் நாயகனாக, அந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக, அந்த கதபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அம்மா, தங்கை இருக்கும் குடும்பத்தில் எந்த ஒரு பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளாமல் விளையாட்டுக்காகவே அர்ப்பணித்து 30 வயது வரையும் இருக்கும் ஒரு இளைஞனாக வலி மிகுந்த அவரது வாழ்க்கையை அப்படியே நம் கண் முன் நிறுத்துகிறார். பல இளைஞர்களை அப்படியே பிரதிபலித்திருக்கிறார்.
சிந்தூரி விஸ்வநாத். வழக்கமான நாயகிகள் போல் அல்லாமல் முக்கியத்துவம் உள்ள ஒரு கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்கிறார். விஜி வெங்கடேஷ் அட்வகேட் ஜெனரலாக அவரது பார்வையிலேயே நம்மை மிரட்டுகிறார். அசத்தலான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். ரங்கராஜ் பாண்டே, மோகன் ராமன் ஆகியோரும் நீதிபதிகளாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ரமா நாயகனின் அம்மாவாக, சென்னையின் விளிம்பு நிலை அம்மாக்களை நினைவுபடுத்தி கலங்க வைக்கிறார். வசுந்தரா கஷ்யாப் ஒரு கோச்சை அப்படியே கண் முன் நிறுத்துகிறார். அஜித் கோஷி, மன்சூர் அலிகான், ஆண்டனி உட்பட மற்ற நடிகர்களும் நல்ல நடிப்பையே தந்திருக்கிறார்கள்.
ஜிப்ரான் இசையில் பாடல்கள் மிக உயிரோட்டமாக அமைந்துள்ளன. பின்னணி இசையிலும் படத்தின் ஆன்மாவை நமக்கு உணர வைத்திருக்கிறார். ஏ.விஸ்வநாத் ஒளிப்பதிவு சென்னையில் ரியல் முகத்தை ரொம்பவே Candid ஆக படம் பிடித்து காட்டியிருக்கிறது.
இயக்குனர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணி புரிந்த தென் பாதியான் எடுத்துக் கொண்ட கதைக்களத்திலேயே பாதி வெற்றியை பெறுகிறார். விளையாட்டு, அதில் விளிம்பு நிலை மக்களின் பங்களிப்பு, அவர்களுக்கு முறையாக கிடைக்காத அங்கீகாரம் என அவ்வளவு வலி மிகுந்த, உணர்வுப் பூர்வமான கதையை மிக உண்மைக்கு நெருக்கமாக சொல்லியிருக்கிறார். பல உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டும் காட்சிகள் அமைத்து மேலும் நம் மனதை கனமாக்குகிறார். தடகள வீரர்கள் சந்திக்கும் போராட்டங்களையும் அங்கீகாரத்திற்கான அவர்களின் பயணத்தையும் இதை விட ஆழமாக, அழுத்தமாக யாரும் பேச முடியாது என நிரூபித்திருக்கிறார். விளையாட்டுத் துறையில் நடக்கும் ஊழல்களையும், முறைகேடுகளையும், பாகுபாடுகளையும் மிக துணிச்சலாக பேசியிருக்கிறார். வசனங்களும் மிகச் சிறப்பாக இருக்கின்றன. முடிவு யாரும் எதிர்பாராதது. 2026-ல் வெளியாகியுள்ள மிக சிறந்த ஒரு படம் தான் இந்த “அங்கீகாரம்”. நிச்சயம் தவற விடக் கூடாத ஒரு நல்ல படைப்பு.

