பாலன் – விமர்சனம்!

மஞ்சும்மல் பாய்ஸ் என்ற கேரளாவின் மலையாள சினிமா இண்டஸ்ட்ரி ஹிட் படத்தை தந்த சிதம்பரம் அடுத்து தமிழின் பெரிய ஹீரோக்களை வைத்து படங்களை இயக்கப் போகிறார் என செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது அவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஒரு முற்றிலும் மாறுபட்ட படம் தான் “பாலன்”. ஜித்து மாதவன் எழுத்தில் சிதம்பரம் இயக்கத்தில் ஒரு தாய்க்கும் குழந்தைக்குமான அன்பை மையமாக வைத்து உருவாகியிருக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான சஸ்பென்ஸ் ட்ராமா தான் இந்த பாலன். படம் எப்படி இருக்கு? விமர்சனத்தில் பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, ஒரு தனியாளாக தன் குழந்தையை வளர்க்கும் ஃபர்ஸானா பலதிங்கல், சிறையில் இருந்து விடுதலையாகி 5 வயது இருக்கும் தன் மகனுடன் வெளியே வருகிறார். தினம் தினம் தன் குழந்தைக்கு கதை சொல்லி சொல்லி வளர்க்கிறார். அத்துடன் சொந்த பெயர் என்றே ஒன்று இல்லாமல் நேரத்துக்கும், இடத்துக்கும் தகுந்த மாதிரி தங்கள் பெயர்களையும், தங்களின் பின்புலம் பற்றியும் மாற்றி மாற்றி தன் குழந்தைக்கு சொல்கிறார். அந்த சிறுவனும் தாய் சொல்லிக் கொடுத்ததை அப்படியே கடைபிடிக்கிறான். அவர்கள் ஏன் அப்படி செய்கிறார்கள்? அவர்கள் பின் கதை என்ன? இப்படியே அடிக்கடி இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பதன் காரணம் என்ன? என்பது போன்ற பல கேள்விகள் நமக்கும் எழுந்து கொண்டே இருக்கிறது. நீங்களும் அந்த கேள்விகளுக்கான விடைகளை படத்தை பார்த்து விட்டு வந்து பேசுங்கள்.

கதையின் மைய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அந்த சிறுவன் ஆதிசேஷன். குழந்தைத்தனமும், ஆர்வமும், குழப்பமும், நம்பிக்கையும் கலந்த ஒரு கதாபாத்திரத்தை மிக இயல்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். பல காட்சிகளில் தாயின் மீதான தவிப்பால், நம் மனதில் ஒரு சோகத்தையும் விதைக்கிறார். இன்னொரு சிறுவன் கொஞ்சம் வளர்ந்த சிறுவனாக வரும் ஜினன் அவரின் துடிப்பான நடிப்பால் ஸ்கோர் செய்கிறார்.

சிறுவனுக்கு அம்மாவாக நடித்துள்ள ஃபர்ஸான பலதிங்கல் தேர்ந்த நடிப்பு படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்தியிருக்கிறது. பல காட்சிகளில் அவரது கண்களே பாதி வேலையை அழகாக செய்து முடிக்கிறது. ஒரு தாயின் ஆத்மார்த்தமான அன்பு, தியாகம், மனவலிமை ஆகியவற்றை மிக இயல்பாக அவர் நடிப்பின் மூலம் வெளிப்படுத்துகிறார். மிக முக்கியமான ஒரு கேமியோ போன்றதொரு கதாபாத்திரத்தில் வரும் டொவினோ தாமஸ் அழுத்தமான முத்திரையை பதித்து விட்டு செல்கிறார். அந்த பாட்டி, காவல்துறை அதிகாரிகள் உட்பட மற்ற நடிகர்களும் சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஷைஜூ காலித் ஒளிப்பதிவு படத்தின் மிக முக்கியமான தூண். ஒவ்வொரு காட்சியையும் படம் பிடித்த விதமும், கேமரா கோணங்களும் அவ்வளவு அழகு. கதாபாத்திரங்களின் உணர்வுகளை காட்சிகளில் கொண்டு வந்ததில் முக்கிய பங்கும் அவருடையதே. சுஷின் ஷ்யாம் இசை நம்மை கதைக்களத்துக்குள் உலவ விடுகிறது. மனதை தொடும் இசை, பாடல்களிலும் கொஞ்சம் புதுமையை தூவியிருக்கிறார்.

ஜித்து மாதவன் எழுதிய கதையை தன்னுடைய விஷன் மூலம் திரையில் மிகச் சிறப்பாக வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் சிதம்பரம். ஒரு குழந்தை நிஜ உலகத்தை புரிந்து கொள்ளும் விதத்தில் தாயின் பங்கு எத்தகையது, அவரின் அன்பு எப்படி அவனை வழிநடத்துகிறது என்பதை மிக நுணுக்கமாக திரையில் சொல்லியிருக்கிறார். உலக சினிமாவுக்கே உரித்தான வகையில் பெரும்பாலும் காட்சிகளின் மூலமே கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர். வசனங்களே மிகவும் குறைவு தான். மலையாள படைப்பாளிகளின் கதை சொல்லல் எப்போதுமே தனித்துவமாக இருக்கும். அதிலும் மிகப்பெரிய வசூல் படத்தை கொடுத்து விட்டு உடனேயே இப்படி ஒரு உலக சினிமாவை கொடுத்த சிதம்பரத்தை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். அவரது திரை வாழ்க்கையில் இந்த ‘பாலன்’ காலம் கடந்தும் பேசப்படும் மிக முக்கியமான படமாக அமையும் என்பதை உறுதியாக சொல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *