சாருகேசி – விமர்சனம்!

கமெர்சியல் கிங் என புகழப்படும் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, கமெர்சியல் படங்களையும் தாண்டி பல உணர்வுப்பூர்வமான படங்களை அவ்வப்போது தந்திருக்கிறார். பாட்ஷா போன்ற கமெர்சியல் ட்ரெண்ட்செட்டிங் படங்களை கொடுத்த காலத்திலேயே ஆஹா, சங்கமம் போன்ற உணர்வுப்பூர்வமான படங்களையும் தந்தவர். தற்போது ஒய்.ஜி.மகேந்திரன் நடிக்க சாருகேசி என்ற படத்தை தந்திருக்கிறார். படம் எப்படி இருக்கு? இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, கர்நாடக இசை உலகில் புகழ்பெற்ற பாடகராக இருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன் அல்சைமர் நோயின் காரணமாக நினைவுகளை மெல்ல மெல்ல இழக்கத் தொடங்குகிறார். அவரது மகனுக்கு ஓய்.ஜி.மகேந்திரன் மீது பெரிய மரியாதை எதுவுமில்லை. இந்த சூழ்நிலையில் அல்சைமர் நோயிலிருக்கும் ஓய் ஜி மகேந்திரன் வாழ்க்கையை பிறர் மூலம் நாம் அறிய முடிகிறது. இசையில் சாதனை படைத்த ஒருவரின் வாழ்க்கையில் நினைவுகள் மறைந்து போகும் வேதனையையும், அதனால் குடும்பத்தில் ஏற்படும் மாற்றங்களையும் படம் மையமாகக் கொண்டுள்ளது. இதனுடன், பல ஆண்டுகளாக மறைந்திருந்த குடும்ப ரகசியங்கள் வெளிவருவதும், தந்தை–மகன் உறவில் ஏற்பட்ட விரிசல்களும் கதையின் முக்கிய அம்சங்களாக அமைகின்றன. முடிவில் நோய்மையிலிருந்து ஓய்.ஜி.மகேந்திரன் மீண்டாரா? அந்த குடும்பம் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

கதையின் நாயகன் ஒய்.ஜி.மகேந்திரன் அவரது அனுபவமிக்க நடிப்பின் மூலம் கதாபாத்திரத்தின் வலியையும், உள்ளார்ந்த உணர்வுகளையும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். உண்மையான ஒரு இசைக்கலைஞனை நம் கண் முன் நிறுத்துகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் வரும் சுஹாசினி, சத்யராஜ், சமுத்திரகனி என அனுபவமிக்க நடிகர்களின் நடிப்பும் படத்தை தூக்கி நிறுத்துகிறது. ரம்யா பாண்டியன் போன்ற தேர்ந்த நடிகை படத்தில் நடித்திருப்பதும் கூடுதல் பலம். உறவுகளின் நுணுக்கமான உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகளில் எல்லாம் இந்த தேர்ந்த நடிகர்கள் பிரகாசிக்கிறார்கள்.

படமே இசை சம்பந்தப்பட்டது என்பதால் தேவாவின் பங்களிப்பு பற்றி நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இப்படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது தேவாவின் இசை. பாடல்களும் சிறப்பு, பின்னணி இசையும் படத்தின் தாக்கத்தை அதிகரிக்கிறது. ஒளிப்பதிவு படத்தை இன்னும் தரமானதாக மாற்றுகிறது.

இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். ட்ராமா படம் என்பதால் கொஞ்சம் மெதுவான திரைக்கதை நகர்வு இருப்பது கமெர்சியல் சினிமா ரசிகர்களுக்கு கொஞ்சம் அயற்சியை தரலாம். ஆனால் இந்த மாதிரி படங்களை ரசிக்கும் நிச்சயம் படத்துக்குள் சென்று முழுமனதாக ரசிப்பார்கள். சில குடும்ப ரகசியங்கள் & எமோஷனல் காட்சிகள் கணிக்கக் கூடியதாக இருந்தாலும் திரையில் கதையோடு பார்க்க நன்றாகவே இருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சிகள் பார்வையாளர்களின் மனதில் நீண்ட நேரம் நிற்கும் வகையில் அமைந்துள்ளன. மொத்தத்தில் சாருகேசி குடும்ப உறவுகளின் மதிப்பு, இசையின் ஆழம் மற்றும் நினைவுகளின் முக்கியத்துவத்தை பேசும் ஒரு உணர்வுப்பூர்வமான திரைப்படம். மென்மையான கதைகளையும் சிறந்த நடிப்பையும் விரும்பும் ரசிகர்களுக்கு இது ஒரு மனதைத் தொடும் அனுபவமாக அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *