ஆண்பாவம் பொல்லாதது – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் சில ட்ரெண்ட் செட்டர் திரைப்படங்கள் இருக்கும், அப்படி ஒரு ட்ரெண்ட்செட்டர் திரைப்படம் பாண்டியராஜன் இயக்கி நடித்த படம் “ஆண் பாவம்”. இன்றும் அந்த படத்தை பார்த்து சிலாகிக்காத தமிழ் சினிமா ரசிகர்களே இருக்க முடியாது. அதே தலைப்பில் கூட பொல்லாதது என சேர்த்து இப்போது உருவாகியிருக்கும் படம் தான் “ஆண் பாவம் பொல்லாதது”.  Drumsticks Productions தயாரிக்க, அறிமுக இயக்குனர் கலையரசன் தங்கவேல் இயக்க, ஜோ’ படத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ரியோ ராஜ் – மாளவிகா மனோஜ் ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க உருவாகி இருக்கிறது. படத்தின் ட்ரைலரே மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, நாயகன் ரியோ ராஜ், மாளவிகா மனோஜூக்கு பெற்றோற்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெறுகிறது. ஒரு வருடம் சந்தோஷமாக கழியும் அவர்களின் திருமண வாழ்க்கை, இருவருக்கும் இடையே நிகழும் கருத்து முரண்களால் விவாகரத்து வரை செல்கிறது. பெண் சுதந்திரம், ஆடை சுதந்திரம், பெண்ணியம், தனி மனித உரிமை என பல்வேறு டாபிக்குகளில் நடக்கும் இந்த மோதல்கள் முடிவில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தார்களா? அல்லது மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா? அதன் பின் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

ரியோ ராஜ். சிவா என்ற கதாபாத்திரத்தில் புதிதாக திருமணம் ஆன அக்மார்க் தமிழ் இளைஞனை அப்படியே பிரதிபலிக்கிறார். சக்தி என்ற கதாபாத்திரத்தில் Progressive thoughts உடன் இருப்பதாக தன்னை காட்டிக் கொண்டு வாழும் இளம் பெண்ணாக மாளவிகா மனோஜ் நம்மை கொள்ளை கொள்கிறார். இந்த ஜோடிக்கு இடையே அப்படி ஒரு கெமிஸ்ட்ரி. ரியல் ஜோடியை போலவே நம்மை எண்ண வைக்கும் அளவுக்கு தத்ரூபமாக, ரொம்பவே இயல்பாக இளம் ஜோடியாக வந்திருக்கிறார்கள். இருவருக்கும் இடையே இடைவேளையில் வரும் அந்த காட்சியில் அட்டகாசமான நடிப்பு. ரியோ ராஜ் அனாயசமாக ஸ்கோர் செய்கிறார். மாளவிகா மனோஜ் நம் இளைஞர்கள் மனதை மீண்டும் ஒரு முறை உருக வைப்பது நிச்சயம்.

ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் வழக்கறிஞராக அவரது கேரியரில் சொல்லிக் கொள்ளும்படியான சிறந்த ஒரு கதாபாத்திரத்தில் அசத்துகிறார். அவரது பின் கதையும் படத்துக்கு உயிரூட்டுகிறது. விக்னேஷ், ஜென்சன் கூட்டணி இரண்டாம் பாதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு செல்கிறது. போலீஸ் ஸ்டேஷன் காட்சி, டிடெக்டிவ் காட்சிகள் என எல்லாமே வெடிச் சிரிப்புக்கு கேரண்டி. ஷீலா ராஜ்குமார் வழக்கம் போள அழுத்தமான கதாபாத்திரத்தில் அவர் நடிப்பாலும் ஆளுமையாலும் ஸ்கோர் செய்கிறார். ஏ. வெங்கடேஷ், ராஜா ராணி பாண்டியன், மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் படத்துக்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.

மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு படத்துக்கு ஏற்ற வகையில் கலர்ஃபுல்லாக ரசிக்கும்படி இருக்கிறது. சித்து குமார் இசையில் பாடல்கள் படத்துக்கு கூடுதல் பலம். மறச்சேனே நெஞ்சில் பாடல் இன்னொரு உருகி உருகி பாடல் போல நம் மனதில் ரீங்காரமிடுகீறது. இரண்டாம் பாதியில் கோர்ட் காட்சிகளில் வரும் அத்தான் பாடலும் படத்துக்கு சிறப்பு சேர்க்கிறது.

இயக்குனர் கலையரசன் தங்கவேல் இன்றைய இளம் தலைமுறையினர் மனதை படம் பிடித்து திரையில் காட்ட முயற்சி செய்திருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். சமூக வலைத்தளங்களின் தாக்கம், போலி பெண்ணியம், ஆண்கள் அனுபவிக்கும் அன்றாட சுக துக்கங்கள், விவாகரத்தின் பின்னணியில் இருக்கும் பல்வேறு விஷயங்களையும் மிகச் சிறப்பாக, நகைச்சுவை சேர்த்து மிக கச்சிதமாக பதிவு செய்திருக்கிறார். ட்ரைலரை பார்த்து விட்டு இன்னுமொரு யூடியூப் வீடியோ தானா, இதெல்லாம் எவ்ளோவோ பார்த்தாச்சு என எழுந்த கமெண்டுகளை படத்தில் இன்னும் இருக்கு என சொல்லி வாயடைக்க வைக்கிறார். படம் முழுக்க விழுந்து விழுந்து சிரித்து ரசிக்க, நெகிழ்வான தருணங்களை உணர என அத்தனையும் கலந்து நல்ல ஒரு ஜாலியான திரைப்படத்தை தந்திருக்கிறார் இயக்குனர். 80’களில் ஒரு ஆண் பாவம் என்றால் இன்றைய தலைமுறைக்கு இந்த ஆண்பாவம் பொல்லாதது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *