கருப்பு மெகா பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பின் சூர்யா நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘விஸ்வநாத் & சன்ஸ்’. தெலுங்கு இயக்குனர் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் இந்த படத்தில் மமிதா பைஜூ நாயகியாக நடித்திருக்கிறார். படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, மிகப்பெரும் தொழிலதிபரான சூர்யா, அவருக்கு பிடித்தமான துப்பாக்கி சுடுதலில் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று நாடு திரும்புகிறார். மிகப் பிரபலமான சூர்யா 40 வயதை கடந்த பின்பும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்கிறாரே என்ற கவலை, ஏக்கம் அவரது தாய் ராதிகாவுக்கு இருக்கிறது. வாரிசு தானே வேண்டும் இதோ என சொல்லி வாடகைத் தாய் மூலம் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்து வீட்டுக்கு கொண்டு வருகிறார் சூர்யா. வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் சூழலில் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் வர, அதற்கு தாய் இருந்தால் தான் அந்த சிகிச்சையை மேற்கொள்ள முடியும் என என மருத்துவர் கூறுகிறார். அவர் தான் மமிதா பைஜூ. அவரை அழைத்து வர, குழந்தைக்காக வந்த இடத்தில் மமிதா பைஜூவுக்கு சூர்யா மீது காதல் ஏற்படுகிறது. ஆனால், 20 வயது வித்தியாசம் மற்றும் திருமணத்தில் விருப்பமில்லை என்பதை சொல்லி சூர்யா மமிதாவை ஏற்க மறுக்கிறார். சூர்யா மனம் மாறினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
நாயகன் சூர்யா. ஆக்ஷன் அவதாரத்தில் பார்த்து பார்த்து திடீரென 20 ஆண்டுகள் பழைய காதல் இளவரசன் சூர்யாவை திரையில் பார்த்தது புத்துணர்ச்சியை தரும் அனுபவம். வழக்கம் போல இப்படத்திலும் அவரது நடிப்பால் ரசிக்க வைக்கிறார். தாய் மீதான அன்பு, மமிதாவிடம் காட்டும் கண்டிப்பு, உறவுகளை பற்றிய புரிந்து கொள்ளுதல், அத்துடன் 2 ஆக்ஷன் காட்சிகளிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு ஃப்ரெஷான சூர்யாவை பார்த்த உணர்வு எழுந்திருக்கிறது.
நாயகி மமிதா பைஜூ. தோற்றத்திலும், சில மேனரிசங்களிலும் ஆரம்ப கால அசினை நினைவுபடுத்துகிறார். குறும்பான, இளமை துள்ளலான ஒரு கதாபாத்திரத்தை மிக அழகாக செய்திருக்கிறார். எதை செய்தாலும் ரசிக்க வைக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படி ஒரு கியூட்டான நாயகி தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கிறார்.
ராதிகா சரத்குமார் சூர்யாவின் அம்மாவாக வந்து மனதில் நிற்கிறார். ஜாலியான காட்சிகளிலும் சரி, எமோஷனல் காட்சிகளிலும் சரி, கலை அரசி என்பதை நிரூபிக்கிறார். முதல் பாதி முழுக்க ராதிகா ஆதிக்கம் செலுத்துகிறார் என்றால் இரண்டாம் பாதியில் ரவீணா தாண்டன் ஸ்கோர் செய்கிறார். சுனில் காமெடி காட்சிகளில் ரகளை. பவானி ஸ்ரீ சில காட்சிகளில் வந்து சர்ப்ரைஸ் செய்கிறார். ராஜீவ் மேனன், ஜார்ஜ் மரியான், கார்த்திக், தீபா என சின்ன சின்ன கதாபாத்திரங்களில் வரும் மற்ற நடிகர்களும் அவரவர் பங்கை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.
நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். படத்தை இன்னும் கொஞ்சம் ரிச்சாக காட்டியிருக்கிறது. உள்நாடு, வெளிநாடு என படம் முழுக்க அந்த விஷூவல் கண்களுக்கு விருந்து. இன்னொரு புறம் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் பல மனதை தொடும் காட்சிகளை மேலும் அழகாக, உணர்வுப்பூர்வமாக ஆக்கியிருக்கிறார்.
இயக்குனர் வெங்கி அட்லூரி. நல்ல ஒரு குடும்ப உணர்வுகளை பேசும் ஒரு படத்தை தந்திருக்கிறார். அதில் காதலை ரசிக்கும்படியும் சொல்லியிருக்கிறார். வாடகைத் தாய், வயது வித்தியாச காதல், திருமணம் இன்றி வாழும் 40+ ஆணின் உணர்வுகள் என பல விஷயங்களை திரைக்கதையில் எழுதிய விதம் நன்றாக இருந்தது. மையக் கதையை தாண்டி இன்னொரு கிளைக்கதையும் இரண்டாம் பாதியின் பாதி படத்தை ஆக்கிரமித்திருக்கிறது. காமெடி காட்சிகளும் படத்தை கலகலப்பாகவே நகர்த்தி இருக்கிறது. படத்தின் நீளத்தை மட்டும் கொஞ்சம் குறைத்திருக்கலாம். மற்றபடி குடும்பத்துடன் சென்று ரசித்து விட்டு வரக்கூடிய ஒரு நல்ல பொழுதுபோக்கு திரைப்படம் தான் இந்த “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்”.

