சிங் கீதம் – விமர்சனம்!

உலகம் முழுக்க மிக 80 வயது, 90 வயது, 100 வயதில் படம் இயக்கி சாதனை படத்தை இயக்குனர்களும் இருக்கிறார்கள். கிளிண்ட் ஈஸ்ட்வுட் 94 வயதில் படம் இயக்கு சமீபத்தில் சாதனை படைத்தார். தற்போது அந்த வகையில் 94 வயதான இந்தியாவின் மூத்த இயக்குனர் சிங்கிதம் சீனிவாச ராவ் “சிங் கீதம்” என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி மிகப்பெரிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். ஒரு துணிச்சலான, சோதனை முயற்சியாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மியூசிக்கல் ஃபேண்டஸி படம் உண்மையில் எப்படி இருந்தது? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, ஜெயிலில் இருந்து வெளிவரும் நாயகன் அயான், அவரது தந்தை 99 ஏக்கர் நிலத்தை விட்டுப் போயிருக்கிறார் என்பதை வக்கீல் மூலம் தெரிந்து கொண்டு அந்த பத்திரத்தோடு குபேரபுரம் என்ற அந்த கிராமத்துக்கு வருகிறார். கிட்டத்தட்ட பாலைவனம் போல இருக்கும் அந்த ஊரில் ஒரே ஒரு மரம் மட்டுமே இருக்கிறது. அகில்யா பம்ரூ அந்த மரத்தின் மீது உயிராய் இருக்கிறார். கோல்டு மைனிங் சுரங்கங்கள் இருப்பதால் எந்த இயற்கை வளமும் இல்லாமல் வறண்ட நிலமாக ஆகியிருக்கிறது. இந்த சூழலில் அந்த ஊரில் நடக்கும் ஏதோவொரு விஷயத்தால் மொத்த கிராமத்துக்கும் பேச்சு வராமல் போகிறது, அவர்கள் என்ன பேசினாலும் அது பாடலாகவே பாடுகிறார்கள். அது ஒரு சாபம் என சொல்கிறார் அந்த ஊர் பூசாரி, அது ஒரு தொற்று நோய் என சொல்கிறார் அந்த ஊர் மருத்துவர். உண்மையில் அதற்கு காரணம் என்ன? பாடும் விஷயம் மறைந்து பேச்சு வந்ததா? தங்கம் கிடைத்ததா? என்பதை காமெடி ட்ராமாவாக சொல்லியிருப்பதும், அத்துடன் நல்ல ஒரு கருத்தையும் வலியுறுத்தி இருப்பதே இந்த சிங் கீதம் திரைப்படம்.

சிங்கிதம் சீனிவாச ராவ், முதல் படத்தில் இருந்து இத்தனை ஆண்டுகாலம் பரீட்சார்த்த முயற்சிகள் மேற்கொள்வது என்றால் அவருக்கு அல்வா சாப்பிடுவது போல. பேசும் வார்த்தைகள் எல்லாமே பாடலாக மட்டுமே கேட்கும் என்ற ஒரு முயற்சியை எடுத்துக் கொண்டு அதை மிகச் சிறப்பாக திரையில் கொண்டு வந்திருக்கிறார். இப்படி இரு தனித்துவமான கான்செப்டை இன்றைய இளம் இயக்குனர்கள் கூட முயற்சிக்காத காலகட்டத்தில் சிங்கிதம் சீனிவாச ராவ் இதை செய்ததற்கு ராயல் சல்யூட்.

சிங்கிதம் சீனிவாச ராவின் இந்த முயற்சிக்கு பக்க பலமாக பெரும் துணையாக இருந்திருக்கிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். சாதாரண வசனங்களையும் பாடல்களாக மாற்றி கதையோடு மிகச்சிறப்பாக இணைத்துள்ளனர். பாடல்களை போல அவையும் ரசிக்க வைக்கிறது. உதாரணத்துக்கு சொல்ல வேண்டும்ன்றால் மின்சார கனவு படத்தில் ஸ்ட்ராபெர்ரி பெண்ணே பாடலில் “நீ ஒரு மனுஷனா” போன்ற வரிகள் வருமே, அது போல தான் மொத்த படத்திலும் கீத மழையாய் பொழிகிறது. ஆனாலும் சலிப்பு தட்டாமல் சிரித்து ரசிக்க வைக்கிறார்கள் இயக்குனரும், இசையமைப்பாளரும். ஒரு மியூசிக்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது போன்ற அனுபவத்தை வழங்கியிருக்கிறார்கள்.

நடிகர்களை பொறுத்தவரை புதுமுகங்களான அயான் மற்றும் அகில்யா சிறப்பான நடிப்பால் படத்தின் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளை தாங்கிப் பிடித்துள்ளனர். இவர்களுடன் ஷாலினி கொண்டெபுடி, பானர்ஜி மற்றும் சிவ நாராயணா ஆகியோரும் சிறந்த பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். நிவேதா பெத்துராஜ், விஜய் தேவரகொண்டா, கே.வி.அனுதீப், ராகுல் ரவீந்திரன் போன்றோரும் குரு மரியாதை செய்வது போல கேமியோ கதாபாத்திரங்களில் அழுத்தமான தாக்கத்தை தந்து விட்டு செல்கிறார்கள்.

94 வயதில் சாதாரண ட்ராமா கதைகளை எடுப்பார்கள் என நினைப்பவர்களுக்கு இந்த படம் நிச்சயம் ஆச்சர்யத்தை மட்டுமே அளிக்கும். ஒரு அழகான ஃபேண்டஸி கற்பனை கதையில் மனிதர்களின் பேராசை, நகர மயமாக்கல் மற்றும் இயற்கையை பாதுகாக்க வேண்டிய அவசியம் என பல நல்ல கருத்துக்களை விதைத்து விட்டு போயிருக்கிறார் இயக்குனர் சிங்கிதம் சீனிவாச ராவ். நிச்சயம் தியேட்டர்களில் உங்களுக்கு ஒரு உன்னத அனுபவத்தை இந்த படம் வழங்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *