சட்டென்று மாறுது வானிலை – விமர்சனம்!

BV Production நிறுவனம் சார்பில் இயக்குநர் பாபு விஜய் தயாரித்து இயக்க, ஜெய் நடித்திருக்கும் ரொமாண்டிக் திரில்லர் படம் “சட்டென்று மாறுது வானிலை”. இன்றைய நவீன யுகத்தில் நடக்கும் மிக முக்கியமான பிரச்சனையை பேசும் படமாக உருவாகியுள்ள இந்த படம் ஜெய்க்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த ஜெய் ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கிறார். சம்பளத்தில் ஒரு பகுதியை ஆஸ்ரமத்துக்கு தந்து கொண்டிருக்கிறார். மறுபுறம் நாயகி மீனாக்ஷி கோவிந்தராஜனின் தந்தை ஒரு அரசியல்வாதி. அவரின் தலைவர் சரவண சுப்பையா அரசியலில் இன்னும் உச்சத்தை அடைய மனைவியை விவாகரத்து செய்து விட்டு நாயகியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஜோசியக்காரர் சொன்னதற்காக நாயகியை அடைய நினைக்கிறார். அதற்கு நாயகியின் அம்மா ஒப்புக் கொள்ளாததால் அவரை கொன்று விடுகிறார் நாயகியின் அப்பா. இதனால் ஹாஸ்டலில் தனியாக வாழ்கிறார் நாயகி. அவரை திருமணம் செய்து சொத்தை அடைய முயற்சிக்கிறார் ஒரு இளைஞர்.

அந்த நேரத்தில் ஜெய்யை யதேச்சையாக சந்திக்க, காதல் வளர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.  தேனிலவு சென்ற இடத்தில் ஹோட்டல் நடத்தும் வில்லன் கருடா ராம் செய்யும் தில்லு முல்லு தெரிந்து கொள்கிறார் ஜெய். அந்த பிரச்சினைகளில் இருந்து ஜெய் எப்படி தப்புகிறார்? நாயகியுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்தாரா? என்பதே மீதிக்கதை.

நாயகன் ஜெய். சமீபத்தில் படங்களை குறைத்துக் கொண்ட ஜெய், இந்த படத்தில் அவரது ஜோனில் கலக்கி எடுக்கிறார். விஜய் மேனரிஸம், வழக்கமான ஹ்யூமர், நடனம், ஸ்டைலான ஆக்ஷன் என நாம் மிஸ் செய்த ஜெய் மீண்டும் நமக்கு கிடைத்திருக்கிறார். முதல் பாதியில் ஜாலி, இரண்டாம் பாதியில் சீரியஸ் மோட் என இரண்டு மோடிலும் அவர் திறமையை காட்டியிருக்கிறார். நாயகி மீனாக்ஷி கோவிந்தராஜன் இயற்கையான அழகுடன் மாடர்ன் தமிழ்பெண்ணாக மனதில் பதிகிறார். பெரும்பாலும் சோகம் இழையோடும் கதாபாத்திரம் என்றாலும் அதிலும் ஸ்கோர் செய்கிறார். காதல் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.

யோகி பாபு அவர் ட்ராக்கில் வழக்கம் போல காமெடி மற்றும் ஒன்லைனர்கள் மூலம் ரசிக்க வைக்கிறார். கருடா ராம் டெக்கி வில்லனாக வந்து அவரை இதுவரை பார்க்காத ஒரு கோணத்தில் நம் முன் நிற்கிறார். ஆதித்யா கதிர், ஸ்ரீமன், சத்யன் மற்ற நடிகர்கள் என ஒவ்வொருவரும் நல்ல நடிப்பையே தந்திருக்கிறார்கள்.

கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. துள்ளலான அக்காடி பாடல் ஆட்டம் போட வைக்கிறது. டைட்டில் பாடல் ஹம் செய்ய வைக்கிறது. உயிரே உயிரே பாடல் மனதில் ஒலிக்கிறது. ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் M நாதன் படத்துக்கு ஏற்ற விஷூவல்ஸை தந்திருக்கிறார்.

இயக்குனர் பாபு விஜய். முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர். முக்கியமான ஒரு சமூக பிரச்சினையை காதல் கலந்து ஒரு நல்ல ரொமாண்டிக் திரில்லராக தந்திருக்கிறார். நான் லீனியர் கதை சொல்லலில் ஆரம்பித்து கதையை நகர்த்திய விதம் படத்துக்கு வலு சேர்த்திருக்கிறது. பல கதாபாத்திரங்களை கொஞ்சம் கிரே ஷேடில் உலவ விட்டிருப்பதும் அடுத்து என்ன என்ற ஆர்வத்தை தூண்டுகிறது. கிளைமாக்ஸில் வரும் அடுத்தடுத்த திருப்பங்களும் அட போட வைக்கிறது. படத்தின் நீளத்தை இரண்டு மணி நேரத்துக்கு வைத்தது படத்தின் ஆகச்சிறந்த முடிவு. மொத்தத்தில் இயக்குனர் பாபு விஜய் கதைக்களத்தை அமைத்ததில் இருந்து கதையில் ஒரு கருத்தை வலியுறுத்தியது வரை வெற்றியே பெற்றிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *