தமிழ் சினிமாவில் எத்தனையோ வகை ஹாரர் படங்கள் வெளியாகியுள்ளன. ஹாரர் திரில்லர், ஹாரர் காமெடி, ஹாரர் என எல்லா வகையான படங்களும் வெளிவந்திருக்கின்றன. ஆனாலும் அவ்வப்போது புதுப்புது முயற்சிகளை மேற்கொள்ள நம் தமிழ் சினிமா படைப்பாளிகள் தவறுவதே இல்லை. அந்த வகையில் தற்போது சோனியா அகர்வால் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் “டார்க் ஜெயண்ட்”. படம் எப்படி இருக்கு? இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, ‘அருவி’ மதன் வாழ்க்கையில் எனக்கு எதும் கிடைக்கவில்லையே என புலம்பி இருக்கும் வேளையில் ஒருவர் சொல்படி கடவுளைத் தேடி நடக்க, ஒரு இடத்தில் ஒரு சிலை இருக்க அதை வேண்டி எனக்கு ஒரு படி நெல் கொடு என்கிறார். அவருக்கு நெல் கிடைக்க, பின் கொஞ்சம் கொஞ்சமா சில விஷயங்களை கேட்கிறார். அவரின் அப்பா நிறைய தங்கம் கேளு என சொல்ல, அப்போது அந்த சிலை எனக்கு பதிலுக்கு என்ன சிசு பலி கொடு என கேட்கிறது. அந்த சாமியாரிடம் இதை சொல்ல, நீ வேண்டுவது கடவுளிடம் இல்லை, சாத்தானிடம், அதன் பேச்சை நம்பி பின்னான் போனால் குடும்பமே அழிந்து விடும் என எச்சரிக்கிறார்.
சில ஆண்டுகள் கழித்து கடன் பிரச்சினையில் தவிக்கும் நாயகன் ஆதர்ஷ்க்கு ஒரு ஃபோன் கால் வருகிறது. படுக்கையில் கிடக்கும் அவரது தாத்தா சொத்துக்களை எழுதி வைக்கிறார் என சொல்லி ஒருவர் அழைக்கிறார். அதைக் கேட்டு மனைவி ஜோவிட்டா, தங்கையுடன் கோபிசெட்டிப்பாளையம் அருகிள் உள்ள கிராமத்துக்கு வந்து அந்த தாத்தா வீட்டிலேயே தங்குகிறார். பாழடைந்து கிடக்கும் அந்த வீட்டில் ஒரு படுக்கையில் கவனித்துக் கொள்ள கூட ஆள் இல்லாமல் இருக்கும் அந்த தாத்தாவின் பின்னணி என்ன? அவர் யார்? நாயகனுக்கு அந்த சொத்துக்கள் கிடைத்ததா? அருவி மதன் யார்? சோனியா அகர்வால் இந்த கதையில் என்னவாக வருகிறார்? என பல விஷயங்களை வைத்து தைத்திருப்பதே மீதிக்கதை.
இந்த கதையின் நாயகி என்றால் அது ஜோவிட்டா தான். அவர் வேறு யாருமல்ல நம்ம லிவிங்க்ஸ்டன் மகள். கதை நாயகியாக முக்கியமான கதாபாத்திரத்தில் நாயகன் தவறு செய்ய முடிவெடுக்கும் போது கூட அது தவறு, சரி என அறத்தின் பக்கம் நிற்பவராக அழகாக அவரது கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளம் நாயகன் ஆதர்ஷ். இரண்டு மூன்று பரிமாணங்களில் மிரட்டுகிறார். சில நேரங்களில் அவர் பேசும் வசனங்களிலேயே அந்த பரிமாணத்தை அழகாக பிரதிபலிக்கிறார். ஆரம்ப காட்சிகளில் வரும் அருவி மதன் கதையின் மையக் கதாபாத்திரம். அவ்வளவு அழகாக கதையின் அழுத்தத்தை நம்மை உணர வைக்கிறார்.
நம்ம சோனியா அகர்வால் நாயகியாக அல்லாமல், மிக முக்கியமான கதாபாத்திரத்தில் கதையின் ஆணிவேராக நடித்திருக்கிறார். கொஞ்ச நேரமே வரும் கதாபாத்திரம் என்றாலும் மனதில் கண்ணியமாக அமர்கிறார். அதே போல சின்ன சின்ன கேமியோ கதாபாத்திரங்களில் வரும் கே.பாக்யராஜ், லிவிங்ஸ்டன் ஆகியோரும் கச்சிதம். அமுதவாணன் சின்ன கதாபாத்திரம் என்றாலும் கதையின் போக்கை மாற்றும் புள்ளியில் வந்திருக்கிறார். ரஃபிக் பாட்ஷா, நாயகனின் தங்கை, தங்கையின் காதலன், தாத்தா என முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் சிறப்பான தேர்வு. அசத்தலான நடிப்பு, ஆச்சர்யப்படுத்துகிறார்கள்.
விக்னேஷ் ராஜா இசை படத்தின் தன்மையை நமக்கு தொடர்ந்து உணர்த்துவதோடு ஒரு வித டென்ஷனை நமக்கு தருகிறது. சங்கீத் மணிகோபால் கிராமத்தின் அழகை காட்டுவதற்கு பதில் படத்துக்கேற்ப நம்மை பயப்பட வைக்கும் ஒளிப்பதிவை தந்திருக்கிறார். கலை இயக்குனரின் பங்கும் பாராட்டுக்குரியது.
இயக்குனர் கே.எஸ்.கிஷன் கதை திரைக்கதையிலேயே நம்மை கவர்ந்திருக்கிறார். அதையும் தாண்டு அதை படமாக்கிய விதம், ஒவ்வொரு காட்சியையும் தந்த விதம் என ஒரு ஹாரர் படத்தை பார்த்த உணர்வை மிக அழகாக தந்திருக்கிறார். சில நேரங்களில் 90களில் நாம் பார்த்த பேய் படங்கள் தந்த பீதி உணர்வை இந்த படமும் தரத் தவறவில்லை. யார், உருவம், ஜமீன் கோட்டை போன்ற படங்களை பார்த்து வளர்ந்த 90’ஸ் கிட்ஸ்களுக்கும், இன்றைய இளம் தலைமுறைக்குமே கூட பிடிக்கும் ஒரு படம் தான் இந்த டார்க் ஜெயண்ட். தமிழில் தலைப்பு வைத்திருந்தால் இன்னும் கூட எளிதாக மக்களை சென்று சேரும். மொத்தத்தில் ஹாரர் விரும்பிகளுக்கும், பேய் படங்களை கண்டால் பேய் ஓட்டம் பிடிக்கும் மக்களுக்கும் என எல்லோருமே பார்த்து ரசிக்கலாம்.

