கருப்பு – விமர்சனம்!

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிப்பின் நாயகன் சூர்யா நடிக்கிறார் என்றவுடனே பெரும் எதிர்பார்ப்பு உண்டாகியது. கருப்பு என்ற தலைப்பில் இருந்து இதுவரை வெளியான ஒவ்வொரு போஸ்டர், கிளிப்ஸ் என அத்தனையுமே படத்தை பார்க்கும் ஆவலை தூண்டியது. குறிப்பாக இன்றைய GenZ சென்சேஷன் சாய் அபயங்கர் இசையமைக்க ஒப்பந்தமான முதல் படம். படம் எப்படி இருக்கு? சூர்யாவுக்கு நீண்ட நாள் காத்திருப்பான “பிளாக்பஸ்டர்” வெற்றியை தந்ததா? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, கேரளாவில் இருந்து மகள் அனகா ரவியின் ஆபரேஷனுக்காக தமிழ்நாட்டுக்கு வருகிறார் இந்திரன்ஸ். சென்னை வந்து இறங்கிய மறுகணமே ஆபரேஷன் செலவுக்காக கொண்டுவந்த 60 சவரன் நகை திருடப்படுகிறது. போலீஸில் புகார் தர, அவர்கள் அதை மீட்டு 45 பவுன் நகை தான் கிடைத்தது என சொல்கிறார்கள். ஆனால் அந்த நகையை இப்போது தர முடியாது. நீதிமன்றத்தின் மூலமாக வாங்கிக் கொள்ளச் சொல்கிறார்கள். நீதிமன்றத்திற்கு செல்ல அங்கு ஊழலில் ஊறிப்போன வழக்கறிஞர் ஆர்.ஜே.பாலாஜியிடம் சிக்குகிறார்கள். அவரோ சுலபமாக முடிய வேண்டிய இந்த வழக்கை வேண்டுமென்றே இழுத்தடித்து ஃபீஸ், பிரியாணி என சில லட்சங்களை கறந்து விடுகிறார்கள். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் ஆகி இந்திரன்ஸை அடித்து இனி இந்த வழக்கை உன்னால் நடத்தவே முடியாது என சவால் விடுகிறார். தன் கஷ்டங்களை நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள கருப்பு சாமியிடம் மிளகாய் அரைத்து வேண்டுகிறார். பக்தனுக்காக வேட்டை கருப்புசாமி சூர்யா உதவ வருகிறார். தன் வில்லத்தனத்தால் சாமியிடமே சகுனி ஆட்டமும் ஆடுகிறார் ஆர்.ஜே.பாலாஜி. அதை தாண்டி இந்திரன்ஸ் வழக்கை முடித்தாரா கருப்பு? அவரைப் போலவே பல ஆயிரம் வழக்குகளில் கஷ்டப்பட்டு வரும் எளிய மனிதர்களுக்கு நீதி பெற்றுத் தந்தாரா? என்பதே மீதிக்கதை.

சூர்யா. சராசரி மனிதனாக நடித்தது போய் கருப்பு சாமியாகவே அவதாரம் எடுத்திருக்கிறார். என்ன தான் மனித உருவில் பல காட்சிகளில் வந்தாலும் கருப்பு மை பூசிய இமைகள், புருவங்கள், கருவிழி என ஒரு கருப்பு சாமியாகவே நம்மை மிரட்டுகிறார். தியேட்டரை திருவிழா கோலமாக மாற்றுகிறது அவரது எண்ட்ரி காட்சிகள் ஒவ்வொன்றும். ஆக்ஷன் காட்சிகளில் எல்லாம் அதகளம். எமோஷன் காட்சிகளிலும் ஒன்ற வைக்கிறார்.

படத்தில் ஹீரோ சூர்யா தான் என்றாலும் அதிக நேரம் வருவது ஆர்.ஜே.பாலாஜி தான். புத்திசாமித்தனமான, குரூர எண்ணம் கொண்ட வில்லனாக அவரது வழக்கமான காமெடி பஞ்ச்களின் மூலம் ஸ்கோர் செய்கிறார். கிளைமாக்ஸ் சர்ப்ரைஸ் எண்ட்ரி எதிர்பாராதது. சாமியிடமே டீல் பேசுவது, தன் கூட்டத்தை வைத்து எளியவர்களை எல்லாம் ஏய்த்து பிழைப்பது என கதாபாத்திரத்தின் தன்மையை அழகாக உணர வைக்கிறார்.

திரிஷா. இந்த கதையின் நாயகியாக வந்தாலும் மற்றுமொரு கதாபாத்திரமாக ஒரு பொறுப்பான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்த சேஸிங் காட்சியிலும் சரி, ஆர்.ஜே.பாலாஜி உடனான காட்சிகளிலும் கைதட்டல் பெறுகிறார். இவர்களை தாண்டி கதையின் ஜீவன் இந்த இரண்டு கதாபாத்திரங்கள் தான், ஒன்று இந்திரன்ஸ், இன்னொன்று அவரது மகளாக நடித்துள்ள அனகா ரவி. முதல் பாதி முழுக்க எமோஷனல் காட்சிகளில் நம்மை கரைத்து விடுகிறார்கள். கருப்பு அவர்களை காப்பாற்று என நம்மையே கும்பிட வைக்கிறார்கள். இந்த படத்துக்குப் பின் தமிழிலும் ஒரு ரவுண்டு வருவார்கள் இருவருமே. நட்டி நடராஜ் கிரே ஷேட் நீதிபதியாக அவரது வசனம், நடிப்பால் அழுத்தமாக தன் முத்திரையை பதிக்கிறார். ஸ்வாசிகா சின்ன ரோல் என்றாலும் நிற்கிறார். மரியம் ஜார்ஜ், தீபா சங்கர், ஆடுகளம் நரேன், மன்சூர் அலிகான் என மற்ற எல்லா நடிகர்களுமே அவரவர் பங்கை செய்திருக்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்களை பொறுத்தவரையில் ஜிகே விஷ்ணு ஒவ்வொரு காட்சியையும் மிக பிரமாண்டமாக இழைத்திருக்கிறார். மிளகாய் இடிக்கும் காட்சியில் இருந்து கருப்புசாமி வழிபாடு, ஆடல், பாடல் என நம்மையே எழுந்து ஆட வைக்கிறார். கோர்ட் காட்சிகளிலும் கார் சேஸ் காட்சியிலும் அவர் அனுபவம் பளிச்சிடுகிறது. இசையமைப்பாளர் சாய் அபயங்கர். முதல் படம் என்ற தயக்கமோ, பதட்டமோ இல்லாமல் அடித்து துவைத்திருக்கிறார். பல காட்சிகளில் மிரட்டி எடுத்திருக்கிறார். சூர்யா எண்ட்ரி காட்சிகளில் எல்லாம் தெறிக்க விட்டிருக்கிறார் தன் இசையால். வெரப்பா, காட் மோட், ராத்து ராசன் என ஒவ்வொரு பாடலும் நரம்பை புடைக்க வைக்கிறது.

இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி. அவர் நடிக்கும் படங்களையே பெரும்பாலும் இயக்கியவருக்கு சூர்யா போல ஒரு மாஸ் ஹீரோ கிடைத்தால் கொண்டாடித் தீர்க்க மாட்டாரா? என்ன. ஒரு ஃபுல் மீல்ஸ் சாப்பிடும் உணர்வை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளார். சூர்யா எண்ட்ரிக்கு கொஞ்சம் நேரம் ஆனாலும் அந்த ஆரம்ப காட்சிகளிலும் நம்மை ஆர்வத்துடன் உட்கார வைக்கிறார். குறிப்பிட்ட இடைவெளிகளில் மாஸ் சீன்ஸ் வைத்து ரசிகர்களை உற்சாகத்திலேயே வைத்திருக்கிறார். சூர்யா படத்திலும் பல நடிகர்களுக்கு முக்கியத்துவம் அளித்திருக்கிறார், அவை எல்லாமே கதைக்கு பெருமளவு உதவி புரிந்திருக்கிறது. படம் முழுக்க ஆங்காங்கே Reference-களை அள்ளித் தெளித்திருக்கிறார். குறிப்பாக விஜய் ரெஃபரன்ஸ் ஒன்று வரும் இடம் தியேட்டர் அல்லோகலப்படுகிறது, ஒரு சின்ன லாஜிக் இடித்தாலும் ரசிக்க வைக்கிறது. காவல் தெய்வம், நீதித்துறை என இரண்டையும் வைத்து இப்படி ஒரு கமெர்சியல் படத்தை தந்திருக்கிறார். இந்த சிஸ்டம் இயங்கும் முறை, அதனால் பாதிக்கப்படும் எளியவர்கள், சட்டத்தை பயன்படுத்தி தப்பும் அதிகார வர்க்கம் என எல்லாவற்றையும் அழகாக சொல்லியிருக்கிறார். மொத்தத்தில் சிங்கம் சூர்யாவை மீண்டும் பார்க்க மாட்டோமா என ஏங்கிய ரசிகர்களுக்கு மெகா விருந்து படைத்திருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *