ஓ பட்டர்ஃப்ளை – விமர்சனம்!

பட்டர்ஃபிளை எஃபெக்ட் என்று ஆங்கிலத்தில் ஒரு விஷயம் உண்டு. எங்காவது ஏற்படும் ஒரு சின்ன மாற்றம் ஒரு பிரளயத்தையே நிகழ்த்தி விடும். தசாவதாரம் படத்தில் கூட அதன் பின்னணியில் கதை சொல்லியிருப்பார் கமல்ஹாசன். இந்த வகையில் ஒரு பட்டர்ஃபிளையை படத்தின் மெடோஃபராக வைத்தும் வந்திருக்கும் ஒரு படம் தான் “ஓ பட்டர்ஃப்ளை”. நிவேதிதா சதிஷ், சிபி சந்திரன், அதுல் ஆகியோர் நடித்திருக்கும் ஒரு Relationship ட்ராமாவான இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, திருமணமான சில மாதங்களில் கணவரை இழந்து மனநல பிரச்சினையால் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் நிவேதிதா சதிஷை சந்திக்க அவர் வீட்டுக்கு வருகிறார் சிறுவயதிலேயே துறவறம் பூண்ட அவரது அக்கா லட்சுமி பிரியா சந்திரமௌலி. ஆரம்பத்தில் பேச முடியாத நிவேதிதா கொஞ்சம் கொஞ்சமாக தனக்கு நடந்த விஷயங்களை விவரிக்க ஆரம்பிக்கிறார். நிவேதிதா தன் கணவருடன் மலைப்பிரதேசத்தில் இருக்கும் குறிஞ்சி இல்லத்துக்கு செல்கிறார். கணவர் அதுல் வேலை இழந்து ஸ்டார்ட் அப் ஆரம்பிக்கும் முயற்சியில் obsessed-ஆக இருக்கிறார். அதுல் இடம் ஒரு முக்கியமான விஷயத்தை பகிர்ந்து கொள்ள தயாராகிறார் நிவேதிதா. அந்த நேரத்தில் நிவேதிதாவின் முன்னாள் காதலர் சிபி அங்கு வருகிறார். இந்த மூவருக்குள்ளும் நடக்கும் விஷயங்கள் ஒரு மிகப்பெரிய சம்பவத்துக்கு காரணமாக அமைகிறது. தன் கணவரை தான் தான் கொலை செய்ததாக கூறி அதிர்ச்சியளிக்கிறார் நிவேதிதா. உண்மையில் என்ன நடந்தது? அவரது கணவர் இறப்பிற்கு காரணம் என்ன? மனநல பிரச்சினையில் இருந்து வெளியில் வந்தாரா நிவேதிதா என்பதே மீதிக்கதை.

கதையின் நாயகி நிவேதிதா சதிஷ். தான் ஒரு மிகச்சிறந்த நடிகை என்பதை இதற்கு முன்பே பல சந்தர்ப்பங்களில் நிரூபித்தவர் இந்த படத்திலும் அவரது அசாத்திய நடிப்பால் நம்மை ஈர்க்கிறார். அப்படி ஒரு இயல்பான, தத்ரூபமான நடிப்பு. தன் கணவன், தன்னை ஏமாற்றிய முன்னாள் காதலன் இருவருக்கும் இடையில் சிக்கித் தவிக்கும்போது அவரது எண்ண ஓட்டங்கள் எப்படி இருக்கும் என்பதை அப்படியே அழகாக பிரதிபலித்திருக்கிறார்.

நிவேதிதா கணவராக வரும் அதுல், உண்மையில் மனநிலை பாதித்தவர் அவர் தான் என்பது போல ஒரு obsession-ஆன நடிப்பு. அவ்வளவு நேர்த்தியாக நடித்திருக்கிறார். கதையின் முக்கியமான கதாபாத்திரம் என்பதை உணர்ந்து அவர் பங்கை அழகாக செய்திருக்கிறார். முன்னாள் காதலராக சிபி சந்திரன், ஒரு கூலான அலட்டிக் கொள்ளாத தன் சுயநலத்துக்காக வாழும் மனிதராக சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். இந்த மூன்று முக்கிய கதாபாத்திரங்களுக்கு இணையாக நாசர் அவரது அனுபவ நடிப்பால் கதையின் முக்கியமான விஷயங்களை எளிதாக சொல்லி விட்டு கடக்கிறார். லட்சுமி பிரியா சந்திரமெளலி, கீதா கைலாசம் என மற்ற நடிகர்களும் சொல்லிக் கொள்ளும்படியான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

படத்தின் ஆகப்பெரும் பலம் ஒளிப்பதிவாளர் வேதராமன் சங்கரன் ஒளிப்பதிவு. இப்படி ஒரு நுண்ணிய உணர்வுகளையும் பிரதிபலிக்கும் படத்துக்கு ஏற்ப அத்தனை அற்புதமான ஒளிப்பதிவால் நம்மை ஆட்கொள்கிறார். வைசாக் சோமநாத் இசையில் பாடல்கள் படத்தோடு பார்க்கும்போது கதையை மிக அழகாக நகர்த்தி சென்றிருக்கிறது. பின்னணி இசையும் கூடுதல் பலம். புவனேஷ் மணிவண்ணன் படத்தொகுப்பு கச்சிதம்.

இயக்குனர் விஜய் ரங்கநாதன், தான் எழுதியதை மிக அழகாக திரையில் கொண்டு வந்திருக்கிறார். இசை, ஒளிப்பதிவு, சவுண்ட், எடிட்டிங்க் என அத்தனையும் ஒருங்கிணைத்து நல்ல ஒரு தரமான படத்தை தந்திருக்கிறார். ஒரு உரையாடல் படம் என்றாலும் அதை போரடிக்காமல் பார்க்க வைக்கும் வித்தையில் கைதேர்ந்தவர் என்பதை நமக்கு உணர்த்தியிருக்கிறார். ஒரு சில கதாபாத்திரங்களை மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு 2:15 மணி நேர படத்தை மிக அழகாக ரசிக்கும்படி தந்திருக்கிறார். நடிகர்களை தாண்டி ஒரு சில பொருட்களையும் (Objects) முக்கியமான கதை மாந்தராக உலவ விட்டிருக்கிறார். எல்லாவற்றையும் இணைக்கும் புள்ளிகளை திரைக்கதையில் கொண்டு வந்த விதம் அருமை. மொத்தத்தில் அழகியலோடு நல்ல உணர்வுப்பூர்வமான படத்தை தந்து வெற்றியை பெற்றிருக்கிறார் இயக்குனர் விஜய் ரங்கநாதன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *