தரமணி, ஜெயிலர் என நல்ல தரமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து தனக்கென ஒரு ஸ்டைலை கொண்டுள்ள நடிகர் வசந்த் ரவி, தொடர்ந்து மேலும் நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது அவர் நடிப்பில் சபரிஷ் நந்தா இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் “இந்திரா”. வசந்த் ரவிக்கு வெற்றிப் படமாக அமைந்ததா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, காவல் துறையில் இன்ஸ்பெக்டராக இருக்கும் வசந்த் ரவி மெஹ்ரீன் பிர்சாடாவை காதலித்து மணம் புரிகிறார். குடிப் பழக்கம் இருக்கும் அவர், ஒரு நாள் குடித்து விட்டு போலீஸ் ஜீப்பை விபத்துக்குள்ளாக்கியதால் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். இதற்கிடையில் மனைவியும் அவருடன் பேசாமல் கோபத்தில் இருக்கிறார். இந்த நிலையில் திடீரென ஒரு நாள் அவருக்கு கண் பார்வை பறிபோகிறது. மனைவியின் அரவணைப்பில் அந்த குறையை மறந்து வாழ்ந்து வரும் நிலையில் மனைவியை யாரோ ஒரு நபர் கொலை செய்து விடுகிறார். அந்த கொலை ஒரு சீரியல் கில்லிங் பேட்டர்னில் இருக்க, அந்த கொலையை செய்தது யார்? அதற்கான காரணம் என்ன? வசந்த் ரவிக்கு கண்பார்வை கிடைத்ததா? என்பதே பரபரப்பான மீதிக்கதை.
நாயகன் வசந்த் ரவி. வழக்கம் போல தன்னுடைய நடிப்பால் ஸ்கோர் செய்கிறார். ஒரு வித மிரட்சியில் இருக்கும் கதாபாத்திரமாகவே நடித்திருக்கிறார். கண் பார்வை இல்லாமல் அவர் எப்படி பிரச்சினைகளை சமாளிப்பார், கொலையாளியை கண்டுபிடிப்பார் என்ற ஒரு பதைபதைப்பை மனதில் ஏற்படுத்துகிறார். மெஹ்ரீன் பிர்சாடாவுக்கு நடிக்க பெரிய அளவில் ஸ்கோப் இல்லையென்றாலும் தன்னால் முடிந்த அளவுக்கு கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வழங்கியுள்ளார்.
சுனில் ஒரு சைக்கோ கொலையாளி கதாபாத்திரத்தில் பாடி லாங்குவேஜ் மற்றும் நடிப்பால் பீதியை கிளப்புகிறார். இன்ஸ்பெக்டராக வரும் நடன இயக்குனர் கல்யாண் தன் தோற்றம் மற்றும் மேனரிசங்களாலேயே மிரட்டுகிறார். வசந்த் ரவி நண்பராக வரும் ராஜ்குமார் நல்ல சாய்ஸ், நன்றாகவே நடித்திருக்கிறார். அனிகா சுரேந்திரன் முக்கியமான கதாபாத்திரத்தில் இதுவரை பார்க்காத விதத்தில் நடித்திருக்கிறார். இன்னொரு முக்கிய கதாபாத்திரம் ஒன்றும் உண்டு. அதில் நடித்தவரும் சிறப்பாக நடித்து படத்துக்கு வலு சேர்க்கிறார்.
அஜ்மல் தஹ்ஸீன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையும் கதையின் தன்மைக்கேற்ப நல்ல ஒரு சூழலை அமைத்துக் கொடுக்க தவறவில்லை. பிரபு ராகவ் ஒளிப்பதிவில் படத்தின் த்ரில்லர் அம்சங்கள் மிக அழகாக ரசிகர்களுக்கு கடத்தப்பட்டிருக்கிறது. ஒரு திரில்லர் பட உணர்வை மிக அழகாக தந்திருக்கிறார். பிரவீன் கே.எல். படத்தொகுப்பும் படத்திற்கு பலம் சேர்க்கிறது.
சபரிஷ் நந்தா எழுதி இயக்கியிருக்கிறார். தான் எடுத்துக் கொண்ட களத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் திரைக்கதை அமைத்து படத்தை ரசிக்கும் விதத்தில் தந்திருக்கிறார். சீரியல் கில்லர் படத்தில் சஸ்பென்ஸ் ரொம்பவே முக்கியம். ஆனாலும் கொலையாளியை ரசிகர்களுக்கு ட்ரைலரிலேயே காட்டிய விதம் ஆச்சர்யம் தான். ஆனாலும் படத்தில் இன்னும் சர்ப்ரைஸ் உண்டு என்பது படம் பார்க்கும்போது தான் ரசிகர்களுக்கு தெரியும். திரில்லர் பட ரசிகர்களுக்கு நிச்சயம் இது ஒரு நல்ல விருந்து தான். நிச்சயமாக பார்த்து ரசிக்கக் கூடிய படம் இந்த இந்திரா.

