ஓம், இது ஆன்மீகமான தலைப்பு மட்டுமல்ல – ராஜ்குமார் பெரியசாமி!

தமிழ் திரையுலகின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாக உருவாகி வரும் #D55 திரைப்படத்தின் தலைப்பு அறிவிப்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்திற்கு “ஓம்” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. R Take Studios மற்றும் Wunderbar Films நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். ‘அமரன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய படைப்பாக உருவாகும் இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இவ்விழாவில் Wunderbar Films சார்பில் ஷ்ரேயாஸ் பேசியதாவது, “முதலில் இயக்குநருக்கும் தனுஷ் சாருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் உங்களிடம் நன்றிக்கடன்பட்டவனாக இருக்கிறேன், சார். இந்த திரைப்படம் திரையுலகில் உருவாகும் மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் ஒன்றாகும். என் திரைப்பயணத்தில் இதுவே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படம் என்று நான் நினைக்கிறேன். மேலும், R Take Studios நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழில் அவர்கள் தயாரிக்கும் முதல் திரைப்படம் இதுதான். இனி பல வெற்றிகரமான கூட்டணிகளுக்கான தொடக்கமாக இது அமையும் என்று நம்புகிறேன். இது மீண்டும் ஒரு பழைய பாணியிலான தனுஷ் சாரின் மாஸ் கமர்ஷியல் திரைப்படம். உங்களின் எதிர்பார்ப்புகளை இந்த படம் நிச்சயமாக பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன். இந்தப் படத்தின் டீசர் மற்றும் பிற அப்டேட்கள் அனைத்தும் உங்களை மகிழ்விக்கும் வகையில் இருக்கும் என நம்புகிறேன். அனைவரையும் திருப்திப்படுத்தும் படைப்பாக இது அமையும். வரும் அக்டோபர் 16-ஆம் தேதி உங்களை அனைவரையும் திரையரங்குகளில் சந்திக்கிறோம்.

R Take Studios சார்பில் ஷ்ரத்தா பேசியதாவது, “ராஜ்குமார் சார், மிக்க நன்றி. இது உண்மையிலேயே அற்புதமான அனுபவம். வரும் அக்டோபர் 16-ஆம் தேதியை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். உங்களுடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது ஒரு அற்புதமான கூட்டணி. அதற்காக உங்களுக்கு எனது மிகப்பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தனுஷ் சாருக்கு நன்றி.

R Take Studios சார்பில் அஸ்மத் பேசியதாவது, “ஷ்ரேயாஸ் மற்றும் ஷ்ரத்தா கூறியதைத் தவிர புதிதாகச் சொல்ல எதுவும் இல்லை. இந்தத் திரைப்படத்தின் ஒரு பகுதியாக எங்களை இணைத்துக்கொண்டதற்கு ராஜ்குமார் சார், உங்களுக்கு மனமார்ந்த நன்றி. இந்தப் படைப்பில் இடம் பெற்றிருப்பது எங்களுக்கு மிகுந்த பெருமையையும் பணிவையும் அளிக்கிறது. படத்திற்கு எங்களால் முடிந்த அளவு அன்பையும் அர்ப்பணிப்பையும் வழங்குவோம் என்று நம்புகிறோம். மிக்க நன்றி.”

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேசியதாவது, “இந்த திரைப்படம் ‘ஓம்’ என்ற தலைப்புடன் தொடங்கியுள்ளது. தலைப்பு தேர்விலிருந்து நடிகர், நடிகைகள் தேர்வு வரை, தற்போது முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்தப் படத்தைச் சுற்றி நடந்த ஒவ்வொரு விஷயத்தையும், இதில் இணைந்துள்ள ஒவ்வொருவரையும் பார்க்கும்போது, இது அனைவருக்கும் மிகவும் முக்கியமான மற்றும் சிறப்பான பயணமாக அமையும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்தப் படத்தில் இணைந்துள்ள அனைவரும் அதே உணர்வோடு பணியாற்றி வருகின்றனர். தனுஷ் சார் முதல், ஷ்ரேயாஸ் மற்றும் படத்தில் நடித்துள்ள அனைத்து கலைஞர்களும் இந்தப் படத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் உருவாக்கி வருகின்றனர். குறிப்பாக, மம்முட்டி சார், சாய் பல்லவி, ஸ்ரீலீலா, இந்திரன் சார் உள்ளிட்ட பல திறமையான நடிகர்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர். அனைவரின் பங்களிப்பாலும் படம் மிகவும் சிறப்பாக உருவாக வருகிறது.

இந்தப் படத்தின் பின்னணியில் மிகப்பெரிய தொழில்நுட்பக் குழு பணியாற்றி வருகிறது. ஒளிப்பதிவாளர், கேமரா குழு, தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் தங்களது சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர். ஒளிப்பதிவாளர் எழிலரசு மிகச்சிறப்பாக பணியாற்றியுள்ளார். படத்தொகுப்பாளராக ‘அமரன்’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படங்களின் படத்தொகுப்பாளர் கலை பணியாற்றி வருகிறார். இந்த தலைப்பு அறிவிப்பு வீடியோவையும் அவர்தான் தொகுத்துள்ளார்.

இந்த வீடியோவை வெறும் தலைப்பு அறிவிப்பு வீடியோவாக மட்டும் பார்க்கக் கூடாது. ஒரு போஸ்டரை வெளியிடுவதற்கு பதிலாக, தனுஷ் சார் ஏற்றுள்ள கதாபாத்திரத்தை ரசிகர்களுக்கு முதன்முறையாக அறிமுகப்படுத்தும் முயற்சியாக இதை உருவாக்கியுள்ளோம். படத்தின் டீசர், ஒவ்வொரு முக்கிய கதாபாத்திரத்திற்கான அறிமுக டீசர்கள் மற்றும் பிரதான டிரெய்லர் ஆகியவை அடுத்த சில வாரங்களிலும், வரும் மாதங்களிலும் வெளியாகும்.

அக்டோபர் 16 இந்தப் படத்திற்கு மிகவும் முக்கியமான நாளாக இருக்கும். அந்த நாளில்தான் படம் வெளியாக உள்ளது. மேலும், படத்திற்கு ‘ஓம்: சேப்டர் 1’ என்று பெயரிட்டுள்ளோம். இது ஆன்மீகமான தலைப்பு மட்டுமல்ல; மிகவும் சிறப்பான, பல அடுக்குகளைக் கொண்ட அர்த்தமுள்ள தலைப்பாகும். இந்த தலைப்பிற்குள் பல சுவாரஸ்யமான அம்சங்களும், பல்வேறு அடுக்குகளும் உள்ளன. அவை படிப்படியாக ரசிகர்களுக்கு புரியும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

Divo Music நிறுவனம் சார்பில் விஷு பேசியதாவது, “இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. இந்தத் திட்டம் தொடங்கிய நாள் முதல், ஒவ்வொரு கட்டத்திலும் எங்களுக்கு வழங்கப்பட்ட ஆதரவுக்கும் நம்பிக்கைக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.தனுஷ் சார் நடித்த எந்த திரைப்படத்துடனும் இணைந்து பணியாற்றுவது எப்போதும் பெருமைக்குரிய விஷயம். இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி சாரின் முதல் படைப்பான ‘அமரன்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தனுஷ் சார் – ராஜ்குமார் சார் கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படத்தில் இணைவது எங்களுக்கு மேலும் உற்சாகத்தை அளிக்கிறது. இந்தத் திட்டத்தில் எங்களை இசை நிறுவனமாக இணைத்துக்கொண்ட தயாரிப்பாளர்கள், படக்குழுவினர் மற்றும் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள். ‘ஓம் நமசிவாய’ என்ற தெய்வீக நம்பிக்கையுடன் கூறுகிறேன்; ‘ஓம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்பது எனது உறுதியான நம்பிக்கை. 2026, 2027 மற்றும் அதற்குப் பிறகும் இந்தப் படம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெறும் என நம்புகிறேன். மிக்க நன்றி.”

Warner Music Group – India சார்பில் ஜே மேத்தா பேசியதாவது, “பல மாதங்களுக்கு முன்பு இந்தத் திரைப்படம் குறித்து முதன்முதலாக பேச்சுவார்த்தைகள் தொடங்கியபோது, எனது முதல் உரையாடல் இந்தக் குழுவுடன்தான் நடைபெற்றது. அதற்கு முன்பு சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் தனுஷ் சாரை சந்தித்திருந்தோம். அப்போது தொடங்கிய இந்தப் பயணம் இன்று இவ்வளவு பெரிய வடிவத்தை எடுத்திருப்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று. இந்தப் படத்துடன் தொடர்புடைய ஒவ்வொரு விஷயமும் மிகவும் சிறப்பானது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி சார் ஒரு அசாதாரண திறமைசாலி. இந்திய சினிமாவில் மட்டுமல்ல, உலக சினிமாவிலேயே உண்மையான மேதைகள் மிகக் குறைவாகவே உள்ளனர். அந்த வகையில் ராஜ்குமார் சார் ஒரு உண்மையான ஜீனியஸ் என்று நான் நம்புகிறேன்.

தனுஷ் சார் குறித்து பேசுவதற்கு என்னிடம் போதுமான வார்த்தைகள் இல்லை. ‘காதல் கொண்டேன்’ முதல், அவர் நடித்த மிகப்பெரிய இந்தி திரைப்படங்கள் வரை, உலக அளவில் தனது திறமையை நிரூபித்த ஒரு சக்திவாய்ந்த கலைஞராக அவர் திகழ்கிறார். மேலும், ஸ்ரீலீலா, சாய் பல்லவி, மம்முட்டி சார் உள்ளிட்ட மிக வலுவான நட்சத்திர பட்டாளம் இந்தப் படத்தில் இணைந்துள்ளது. இவ்வளவு பெரிய நட்சத்திரக் கூட்டணியை ஒரே திரைப்படத்தில் காண்பது மிகவும் அரிதான விஷயம்.

இந்தத் திரைப்படம் ஒரு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக உருவாக தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்திய அளவில் மட்டுமல்லாமல், உலகளாவிய அளவிலும் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறும் அனைத்து தகுதிகளும் இந்தப் படத்திற்குள் உள்ளன என்று நான் உறுதியாக நம்புகிறேன். எனது தனிப்பட்ட நம்பிக்கையின்படி, இது தமிழ்ச் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய திரைப்படங்களில் ஒன்றாக மட்டுமல்ல, எல்லா காலத்திலும் பேசப்படும் ஒரு முக்கிய படைப்பாக அமையும். படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மம்முட்டி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

‘அமரன்’ திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்ற இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, இந்த முறை புதுமையான திரைக்கதையுடன், ரசிகர்களை கவரும் பிரம்மாண்ட ஆக்சன் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். தனுஷ் மற்றும் ராஜ்குமார் பெரியசாமி முதல் முறையாக இணையும் இந்த கூட்டணி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்திற்கு இளம் தலைமுறையின் மனம் கவர்ந்த இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் அடுத்தகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இப்படத்தின் தலைப்பு ஓம் என அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் மற்றும் படப்பிடிப்பு தொடர்பான தகவல்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, மம்முட்டி ஆகியோரின் பிரமாண்ட கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படம் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு படங்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது.

இப்படம் வரும் அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *