நல்ல கதையசம்சம் உள்ள திரைப்படங்களையும், தொடர்களையும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கும் ZEE 5 இந்த மாதம் வெளியிட்டிருக்கும் தொடர் தான் “மம்மட்டியான் ஸ்டார்ஸ்”. சவிர் சுதாகர் இயக்கம, சிங்காரவேலன் தயாரித்துள்ள இந்த மம்மட்டியான் ஸ்டார்ஸ் நட்பு, கனவுகள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களின் ஆர்வத்தை கொண்டாடும் ஒரு கிரிக்கெட் விளையாட்டு பின்னணியில் உருவாகியுள்ளது. தொடர் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
மம்மட்டியான் ஸ்டார்ஸ் கதைப்படி, ஒரு சின்ன கிராமத்தில் தீவிரமான கிரிக்கெட் ரசிகர்களாகவும், விளையாட்டு வீரர்களாகவும் இருக்கும் வைபவ் முருகேசன் மற்றும் அவரின் நண்பர்கள் ‘தல’ கிரிக்கெட் வீரரின் ரசிகர்கள். தங்கள் ஃபேவரைட் கிரிக்கெட்டரின் கடைசி போட்டியை அவர் ஓய்வு பெறும் முன் நேரில் காண சென்னைக்கு செல்ல ஆசைப்படுகிறார்கள். இதற்காக டோர்ணமெண்ட் பரிசுப் பணத்தை கொஞ்சம் திருடிச் செல்கிறார்கள். சென்ற இடத்தில் பணத்தை வாங்கிக் கொண்டு போலி டிக்கெட் கொடுத்து இவர்களை ஏமாற்றி விடுகிறார்கள். மேட்சையும் பார்க்க முடியாமல், பணத்தையும் இழந்து ஊருக்கும் திரும்ப முடியாமல் அங்கு இருக்கும் நண்பன் உதவியுடன் ஒரு ஹாஸ்டலில் தங்கி பணத்தை சேர்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். பணம் சேர்த்து ஊருக்கு திரும்பினார்களா? தலைவனின் கடைசி ஆட்டத்தை பார்த்து ரசித்தார்களா? என்பதே மீதிக்கதை.
வைபவ் முருகேசன். காமெடியில் ஸ்கோர் செய்யும் நல்ல ஒரு கதாபாத்திரத்தில் துடிப்பான நடிப்பை தந்திருக்கிறார். அவருக்கு ஏற்ப அவர் நண்பர்கள் வெங்கட பாலமுரளி, ஜகபர் சாதிக்கும் நல்ல சாய்ஸ். மூன்று பேரின் காம்போ சிறப்பு. லாவண்யா அன்பழகன் அழகான, புத்திசாலியான ஒரு கதாபாத்திரத்தில் ஹீரோ மற்றும் நண்பர்களையே ஓவர்டேக் செய்கிறார். நான் கடவுள் ராஜேந்திரன், விவேக் பிரசன்னா, சம்பத் ராம், கார்த்திகேயன் என மற்ற நடிகர்களும் அவர்கள் பங்கை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.
பி.எம். ராஜ்குமார் மற்றும் அவினாஷ் ஒளிப்பதிவு கொடுக்கப்பட்ட பட்ஜெட்டிலும் திருப்திகரமான ஒரு விஷூவலை தந்திருக்கிறார்கள். கிரிக்கெட் மேட்ச் ஸ்டேடியத்தை பார்த்த அனுபவத்தை ஒளிப்பதிவில் தந்திருக்கிறார்கள். கிரிக்கெட் காட்சிகளை ஏ.ஐ.யில் வடிவமைத்த விதமும் அருமை. பவித்ரன் படத்தொகுப்பும் கூடுதல் பலம். பின்னணி இசையும் நன்றாகவே இருக்கிறது.
சவிர் சுதாகர், நவீன் ராஜ்குமார், கலை செல்வன் மற்றும் வினு கார்த்திகேயன் ஆகியோர் கதை, திரைக்கதை எழுதியுள்ளனர். காட்சிகளும், வசனங்களும் ரசிக்க வைக்கிறது. ஆரம்ப எபிசோடுகளில் கொஞ்சம் இழுவையாக இருந்தாலும் சென்னைக்கு கிளம்பியவுடன் கொஞ்சம் சுவாரஸ்யம் கூடுகிறது. நணபர்களின் ஒரு கனவுப் பயணம், அங்கு கிடைக்கும் வாழ்க்கை அனுபவங்கள், நட்பு, காதல், சூதாட்ட உலகம் என அடுத்தடுத்த எதிர்பாராத திருப்பங்களால் இன்னும் சுவாரஸ்யமாகிறது. இந்தியாவின் அறிவிக்கப்படாத தேசிய விளையாட்டான கிரிக்கெட் பின்னணி என்பதும், சென்னை, பெங்களூர், பஞ்சாப், தோனி என ஐபில்-லை நினைவுபடுத்தும் வகையில் இருப்பதும் ரசிகர்களை இன்னும் ஒன்ற வைக்கிறது. கிளைமாக்ஸில் சிறுவர்களுடன் வைபவ் பேசும் காட்சியும், அவர்களின் மன மாற்றமும் கதையின் ஆகப்பெரும் சிறப்பு. நிச்சயம் வார இறுதியில் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கலாம்.

