கருப்பு பல்சர் – விமர்சனம்!

லப்பர் பந்து, தண்டகாரண்யம் படங்களுக்குப் பிறகு VR தினேஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் கருப்பு பல்சர். ஒரு புறம் பைக், மறுபுறம் காளை என படத்தின் போஸ்டர் & டைட்டிலே ஒருவித எதிர்பார்ப்பை ஏற்றியிருந்தது. அறிமுக இயக்குநர் முரளி கிரிஷ் இயக்கத்தில் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இந்த “கருப்பு பல்சர்” எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, நாயகன் தினேஷ் தாய் தந்தை இல்லாத சூழலிலும் உழைப்பால் தன் தங்கைக்கு திருமணம் செய்து வைத்து விட்டு Water purifier விற்கும் தொழிலில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறார். ரொம்பவே சிக்கனமாக இருக்கும் தினேஷ் ஒரு பைக் கூட வாங்காமல் டிவிஎஸ் எக்ஸல் வண்டியே போதும் என அதை ஓட்டுகிறார். ஒரு கட்டத்தில் நாயகியை சந்திக்க, அவரை பிடித்துப் போகிறது. அவரிடம் கருப்பு பல்சர் பைக் வைத்திருப்பதாக பொய் சொல்லி விடுகிறார். அந்த பொய்யை உண்மையாக்க ஒரு கருப்பு பல்சர் பைக்கும் வாங்குகிறார். அந்த பைக் பின்னால் பெரிய ஒரு மர்மமே ஒளிந்திருக்கிறது. அந்த பைக் வந்த பின் பல திடுக்கிடும் சம்பவங்கள் நடக்கிறது. அந்த பைக்கின் பின்னணி என்ன? தினேஷ் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் என்ன? என்பதே மீதிக்கதை.

நாயகன் தினேஷ் ரொம்ப நாள் கழித்து சென்னை இளைஞனாக துருதுருவென நடித்திருக்கிறார். லப்பர் பந்து படத்தில் நரைத்த முடி, நாயகிக்கு அப்பா என பார்த்தவரை மீண்டும் இளமையாக பார்த்ததே ஆச்சர்யம். இந்த தசரத ராஜா என்ற கதாபாத்திரத்தையும் தாண்டி படத்தில் ஒரு சர்ப்ரைஸூம் கொடுத்திருக்கிறார். சென்னை இளைஞன், மதுரை இளைஞன் என இரண்டு மாறுபட்ட தோற்றங்களில் அசத்தியுள்ளார்.

தினேஷ் ஜோடியாக வரும் ரேஷ்மா வெங்கட், மதுனிகா என இரண்டு பேருமே அழகு, அத்தோடு நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார்கள். வில்லனாக பிரின்ஸ் அர்ஜய் அவரது நடிப்பாலும், தோற்றத்தாலும் மிரட்டுகிறார். சில காட்சிகளே வந்தாலும் படம் முழுக்க அவரின் கதாபாத்திரத்தை வைத்து தான் கதையே நகர்கிறது. மன்சூர் அலிகான் காமெடி கலந்த ஒரு கதாபாத்திரத்தில் ரசிக்க வைக்கிறார். பிராங்க்ஸ்டர் ராகுல் தினேஷின் நண்பனாக வந்து அவருக்கே உரித்தான ஸ்டைலில் காமெடியில் ஸ்கோர் செய்திருக்கிறார். சரவண சுப்பையா, கலையரசன் கன்னுசாமி மற்றும் மற்ற நடிகர்களும் அவர்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இன்பா இசையில் பாடல்கள் ஒகே ரகம், பின்னணி இசையில் முடிந்தவரை படத்தை தூக்கி நிறுத்துகிறார். பாஸ்கர் ஆறுமுகம் ஒளிப்பதிவு சென்னை மதுரை என அனைத்தையும் அழகாக பதிவு செய்திருக்கிறது. ரியலா? படத்துக்காக செய்ததா? என தெரியாத அளவுக்கு ஜல்லிக்கட்டு காட்சிகளை தத்ரூபமாக படமாக்கியுள்ளார். சசி தாட்சா படத்தொகுப்பு தேவையான காட்சிகளை மட்டுமே வைத்துக் கொண்டு 2 மணி நேரத்திற்கும் குறைவாக கச்சிதமாக எடிட் செய்திருக்கிறார்.

இயக்குனர் முரளி கிருஷ். பொல்லாதவன் படத்தை நினைவுபடுத்துவது போல முதல் காட்சியை ஆரம்பித்து பின் அதற்கும் இந்த படத்துக்கும் துளியும் சம்பந்தம் இல்லை என வேறு ரூட்டில் அவரது ரூட்டில் கதையை திருப்புகிறார். முதல் பாதி முழுக்க காதல், காமெடி என பயணிக்கும் இந்த படம் இரண்டாம் பாதியில் காஞ்சனா பட பாணிக்கு பயணிக்கிறது. இந்த கதையிலும் மிக முக்கியமான ஒரு சமூக அரசியலை போகிற போக்கில் எதையும் திணிக்காமல் அழகாக, இயல்பாக சொல்லியிருக்கிறார். ஜல்லிக்கட்டு பின்னணியில் கதையை கொண்டு சென்ற விதமும் அருமை. ஜல்லிக்கட்டை காட்சிப்படுத்திய விதத்தில் ஸ்கோர் செய்திருக்கிறார்.  மொத்தத்தில் குடும்பத்தோடு சென்று பார்த்து ரசிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *