தமிழில் கொன்றால் பாவம், கன்னடத்தில் பல வெற்றிப்படங்களை தந்த இயக்குனர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு”. K.V.சபரீஷ் தயாரிக்க, டி பிக்சர்ஸ் சார்பில் தயாள் பத்மநாபன் இணைத் தயாரிப்பாளராக இணைந்து உருவாக்கியுள்ள இந்த படத்தில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா சகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மரண தண்டனை குறித்த ஒரு விவாதத்தை ஏற்படுத்தும் படமாக வந்திருக்கும் இந்த படம் எப்படி இருக்கு? இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, நாயகன் வெற்றி. தன் பெற்றோக்கு ஒரே பிள்ளையான அவர் நன்கு படித்த இளைஞர். வேலை கிடைக்காத வெற்றி, மாறன் பேச்சைக் கேட்டு சிறு சிறு திருட்டுக்களை செய்ய ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் திருடப் போன இடத்தில் ஒருவரை கொலை செய்து விட்டு போலீஸிலும் சரண் அடைகிறார். நீதிமன்றத்தில் அவர் செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அவரை தூக்கில் இடும் சிறை அதிகாரியாக வரும் ரங்கராஜ் பாண்டே உடன் இந்த சிஸ்டம் எப்படி இருக்கிறது, மரண தண்டனை ஏன் என பல விஷயங்களை பேசுகிறார் வெற்றி. யாரை அவர் கொலை செய்தார்? எதற்காக கொலை செய்தார்? தூக்கில் இடப்பட்டாரா? என்பதே மீதிக்கதை.
நாயகன் வெற்றி. அவரது திரைப்பயணத்தையும், பட வரிசையையும் வைத்தே அவர் நல்ல படங்களில், நல்ல கதையம்சம் உள்ள படங்களில் தான் நடிப்பார் என்ற ஒரு நல்ல கருத்து மக்கள் மனதில் இருக்கிறது. அந்த வகையில் இந்த படத்திலும் வழக்கமான படங்களை போல அல்லாமல் கொஞ்சம் தனித்துவமான படமாக தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார். பெரும்பாலும் வசனங்களில் நகரும் இந்த படத்திலும் அவரது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கதையில் நாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் வரும் ரங்கராஜ் பாண்டே தனக்கே உரிய ஆளுமையுடன், அந்த கதாபாத்திரத்தை தாங்கும் இமேஜூடன் மிகக் கச்சிதமாக பொருந்துகிறார். பத்திரிக்கையாளராக கருத்துக்களை அவர் பேசுவதை தொடர்ந்து பார்த்து வந்த நமக்கு, இதிலும் அவர் வைக்கும் கருத்துக்களை இவரை விட கச்சிதமாக யாராலும் வைக்க முடியாது என எண்ண வைக்கிறார்.
நாயகி பிரிகிடா சகா. கொஞ்ச நேரமே வந்தாலும் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்த்து அழுத்தமான, ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி விட்டு போகிறார். நாயகனின் அம்மாவாக லிசி ஆண்டனி, சிறையில் அந்த ஒரு காட்சியே போதும். ஆசிரியராக வரும் சரவணன், திருடனாக வந்து கதையின் போக்கையே மாற்றும் லொள்ளு சபா மாறன், ரெட்டியாராக வந்து மிரட்டும் கவிதா பாரதி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராக நிற்கும் அருவி மதன், இறுதி காட்சியில் மரண தண்டனை குறித்து பேசும் சுப. வீரபாண்டியன், லோகா கண்ணன், நர்மதா, கனியா பாரதி என மற்ற நடிகர்களும் நல்ல நடிப்பையே தந்திருக்கிறார்கள்.
எம்.வி.பன்னீர் செல்வம் ஒளிப்பதிவு படத்துக்கு வலு சேர்க்கிறது. குறிப்பாக 1970களில் நடக்கும் கதையை அதற்கேற்ற எளிமையோடு அழகாக படம் பிடித்துள்ளார் கலை இயக்குனர் அன்புவின் அளப்பரிய பங்களிப்புடன். தர்புகா சிவாவின் இசையில் ஆதலால் காதல் செய்வீர் பாடல் இனிமை. பின்னணி இசையிலும் நல்ல அழுத்தமான உணர்வை தருகிறார்.
கவிதா பாரதியுடன் இணைந்து திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் தயாள் பத்மநாபன். நான் லீனியர் முறையில் கதை சொல்லப்பட்டிருந்தாலும் கூட அந்த கொலை சம்பவம், அதன் பின்னணி, அந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒரு கதாபாத்திரத்தின் இன்றைய நிலை என அந்த அடுத்தடுத்த திருப்பங்களையும், சஸ்பென்ஸையும் தக்க வைத்த விதம் அருமை. வசனங்கள் எல்லாமே நச்சென்று இருக்கின்றது. அறிவு vs System என்ற அந்த கருத்து விவாதமும் அருமை. வெற்றி, பிரிகிடா காதல் காட்சிகள் அருமை, இன்னும் கொஞ்சம் கூட நீட்டித்திருக்கலாம் போல என்ற உணர்வை தருகிறது அவர்களின் அந்த கெமிஸ்ட்ரி.
மரண தண்டனை, ஆதிக்க மனநிலை கொண்டவர்களின் அகம்பாவம், சட்டத்தின் படி நடக்கும் அதிகாரிகள், அரசாங்க வேலையை செய்தாலும் இளகிய மனதை கொண்ட ஊழியர்கள் என பல விஷயங்களை அழகாக இந்த கதையில் கொண்டு வந்திருக்கிறார். 1:45 மணி நேரம் என்பது கச்சிதமான ரன் டைம். லக்ஷ்மி காந்தன் கொலை வழக்கு என்ற தலைப்பு கொஞ்சம் ஏமாற்றத்தையும், தவறான வழிநடத்தலையும் தந்தாலும் படத்திற்குள் போன கொஞ்ச நேரத்திலேயே அட இந்த கதையும் நல்லா தானே இருக்கு என எண்ண வைக்கிறார் இயக்குனர். மொத்தத்தில் குறைந்த நாட்களில் நல்ல கதைகளையும் படமாக தர முடியும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் இயக்குனர் தயாள் பதம்நாபன்.

