போர் தொழில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் விக்னேஷ் ராஜா. தற்போது நடிப்பின் அசுரனாய் திகழும் தனுஷை வைத்து இயக்கியிருக்கும் பிரம்மாண்டமாக படம் கர. மாபெரும் நடிகர் தனுஷ், துடிப்பான இளம் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இந்த படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, 16 வயதிலேயே அப்பா சேர்த்து வைத்த பணத்தை தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு ஓடும் தனுஷ் திருட்டு தொழில் செய்து வாழ்ந்து வருகிறார். மமிதா பைஜூவை காதலித்து திருமணம் செய்த பின்னர் அந்த தொழிலை விட்டு விலக முடிவெடுத்து கடைசியாக ஒரு முறை திருடப் போக, போன இடத்தில் மாட்டிக் கொள்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் உயர் அதிகாரியாக இருக்கும் சுராஜ், பணி ஓய்வுக்கு முன்பு கடைசியாக நல்ல ஒரு கேஸூடன் ஓய்வு பெற விரும்பி தனுஷ் மீது இன்னும் சில கேஸ்களை எழுத, அந்த நேரத்தில் தப்பிக்கும் தனுஷ், மனைவி மமிதாவுடன் ஓட்டலில் வேலை செய்து பிழைப்பு ஓட்டுகிறார்.
ஒரு கட்டத்தில் அழுத்துப் போன தனுஷ், சொந்தமாக ஒரு ஓட்டல் ஆரம்பிக்க வங்கிக்கு கடன் கேட்டு செல்கிறார். பிணை இருந்தால் தான் லோன் தர முடியும் என மேனேஜர் சொல்கிறார். தன் சொந்த ஊரில் இருக்கும் நிலத்தை விற்று பணம் வாங்கலாம் என நினைத்து அவரது அப்பா கே.எஸ்.ரவிக்குமாரை பார்க்க ஊருக்கு கிளம்புகிறார். அங்கு வேறு சில பிரச்சினைகள் கிளம்ப, மீண்டும் திருட்டு தொழிலை கையில் எடுக்க வேண்டிய சூழல் உருவாகிறது. அந்த பிரச்சினைகளுக்கு மத்தியில் தனுஷ் நினைத்ததை சாதித்தாரா? திருட வேண்டிய அவசியம் ஏன் வந்தது? குடும்பத்துடன் நினைத்த வாழ்க்கையை வாழ முடிந்ததா? என்பதே மீதிக்கதை.
தனுஷ். வழக்கம் போலவே நடிப்பில் அவர் மொத்த உழைப்பையும் கொட்டி நடித்திருக்கிறார். சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடிப்போய், வாழ்க்கையில் தோற்று, தவறான வழியில் திருடி பிழைப்பை நடத்துவது, தந்தையின் நிலை தெரிந்தும் தனக்கு வேண்டியதை கோருவது, அப்பாவை இழந்த பின் தன் தலையில் விழும் பொறுப்பை ஏற்று நடத்துவது என கரசாமியாகவே வாழ்ந்திருக்கிறார். ஒரு சில மாஸ் காட்சிகளிலும் Goosebumps வரும் அளவுக்கான திரை ஆளுமையால் ரசிக்க வைக்கிறார்.
கே.எஸ்.ரவிகுமார் தனுஷின் தந்தையாக மிக அற்புதமான ஒரு நடிப்பை தந்திருக்கிறார். இதுவரை பார்க்காத ஒரு தோற்றத்தில் எளிய மனிதராக நடை உடை பாவனை என அனைத்திலும் கிராமத்து மனிதராகவே வாழ்ந்திருக்கிறார். தனுஷ், கே.எஸ்.ரவிக்குமார் சந்தித்து கொள்ளும் அந்த முதல் காட்சியிலேயே நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறார். சுராஜ் வெஞ்சரமூடு போலீஸ் அதிகாரியாக அந்த கேஸ் மீது பைத்தியமாக சுற்றும் அளவுக்கான கதாபாத்திரம். அவர் வரும் ஒவ்வொரு காட்சியுமே ரசிக்க வைக்கிறார்.
மமிதா பைஜூ, இதுவரை இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவராக வலம் வந்தவர், இந்த முறை கிராமத்து பெண்ணாக எளிமையான பெண்ணாக மாறி நிற்கிறார். அத்தனை யதார்த்தம். ஜெயராம் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் தேர்ந்தெடுத்த நடிப்பை தந்திருக்கிறார். தனுஷின் தாய் மாமாவாக வரும் கருணாஸ் படம் முழுக்க அந்த கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கும் நடிப்பை வழங்கியிருக்கிறார். ப்ரித்வி பாண்டியராஜன் கதாபாத்திரமும் மனதில் நிற்கும் சில காட்சிகள், அத்தனையிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். ஸ்ரீஜா ரவி தனுஷின் அம்மாவாக இயல்பான நடிப்பில் மனதில் பதிகிறார்.
தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு ராமநாதபுரத்தின் வறண்ட நிலப்பகுதிகளை மிக தத்ரூபமாக படம் பிடித்து காட்டியிருக்கிறது. பதட்டமான காட்சிகளை மிக அழகாக உணர வைக்கிறது ஒளிப்பதிவும் எடிட்டிங்கும். 1990களை மிக அழகாக நம் முன் கொண்டு வந்ததில் கலை இயக்குனரின் பங்கு அலாதியானது. ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் படத்தை தாங்கிப் பிடிக்கிறது. பெரும்பாலான பாடல்கள் பின்னணியில் ஒலித்து கதையை நகர்த்தும் கருவியாகவும் உதவியிருக்கிறது. பின்னணி இசையும் மாஸ் காட்சிகளை தூக்கி நிறுத்துகிறது. எமோஷனல் காட்சிகளில் நம் ஆன்மாவுக்குள் ஊடுருவுகிறது.
ஆல்ஃப்ரெட் பிரகாஷ் மற்றும் விக்னேஷ் ராஜாவின் திரைக்கதை, வசனம் படத்தின் மிகப்பெரிய பலம். இந்த கதைக்குள் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு, வங்கிக் கடன் மற்றும் அதன் விளைவுகள் என பல விஷயங்களை மிக அழகாக கொண்டு வந்திருக்கிறார்கள். முதல் பாதியில் கொஞ்சம் ஸ்லோ & ஸ்டெடியாக நகர்கிறது. முதல் காட்சியிலேயே கதைக்குள் சென்று விடுகிறது. இண்டர்வல் காட்சி ரசிகர்களுக்கு தெறிக்க விடும் அனுபவத்தை தருகிறது. யதார்த்தமான ஒரு கதைக்களத்தில் ஒரு வங்கிக் கொள்ளை படம் என்பது ரொம்பவே புதிய அனுபவத்தை தருகிறது.
இரண்டாம் பாதி முழுக்க ஒவ்வொரு முக்கிய கதாபாத்திரத்துக்கும் முக்கிய நோக்கம் ஒன்று இருக்க, அதை நோக்கி செல்வது படத்தை மேலும் சுவாரஸ்யமாக்குகிறது. அதே போல தனுஷ் கதாபாத்திரத்தின் கேரக்டர் ஆர்க் படத்தின் மிகச்சிறப்பான அம்சம். தேவர் மகன் படத்தை கனெக்ட் செய்த விதமும் அருமை. மொத்தத்தில் நல்ல ஒரு திரில்லர் படத்தை தந்திருக்கிறார்கள் தனுஷூம், இயக்குனர் விக்னேஷ் ராஜாவும்.
கர – 4.25 / 5

