ஹார்ட்டின் – விமர்சனம்!

இன்றைய நவீன யுகத்தில் காதல் படங்கள் பல்வேறு பரிமாணங்களை எடுத்திருந்தாலும், உணர்வுப்பூர்வமான காதல் கதைகளுக்கு என்றுமே ரசிகர்களிடத்தில் வரவேற்பு உண்டு. அந்த வகையில் ஊட்டி, ஜெய்ப்பூர், சென்னை போன்ற லொகேஷன்கள் மூலம் காலத்தால் அழியாத “காதல் கோட்டை” படத்தை நினைவுபடுத்தும் வகையில் உருவாகியுள்ள காதல் திரைப்படம் தான் “ஹார்ட்டின்”. சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா ஆகியோர் நடிப்பில் அறிமுக இயக்குனர் கிஷோர் குமார் இயக்கியிருக்கும் இந்த படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, ஜெய்ப்பூரில் நண்பன் வாட்ஸாப் மணி வைத்திருக்கும் ஹோட்டலில் செஃபாகவும், பார்ட்னராகவும் இருக்கும் நாயகன் சனந்த், நாயகி இமயாவை யதேச்சையாக சந்திக்கிறார். அந்த சந்திப்பு தொடர் சந்திப்புகளாக மாறி நாயகி இமயாவின் மனதில் காதலாக மாறுகிறது. ஆனால் சனந்த் காதலிக்க மறுக்க, அதற்கான காரணமாக கல்லூரி காலத்தில் மடோனாவுடனான காதல் இருந்தது, அது பிரேக் அப் ஆனதும் தெரிகிறது. அதன் பின்னர் சனந்தும் இமயாவின் காதலை ஏற்கிறார். திடீரென ஒரு நாள் ஒரு விபத்தில் தலையில் அடிபட்ட சனந்துக்கு கல்லூரி காதல் வரை மட்டுமே நினைவில் இருக்கிறது. இமயாவை யார் என்றே தெரியாமல் போகிறது. இந்த சூழலில் இமயாவின் காதல் என்ன ஆனது? மடோனாவின் பழைய காதல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டதா? இருவரில் யாருடைய காதல் கைகூடுகிறது? என்பதே மீதிக்கதை.

சனந்த் பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தவர், இந்த படத்தில் காதல் நாயகனாக வலம் வருகிறார். காதல் காட்சிகளில் அவரை பார்ப்பது ஒரு புது அனுபவம். ஒரே படத்தில் இரு நாயகிகளுன் ரொமான்ஸ், அதிலும் ஸ்கோர் செய்கிறார். மடோனா செபாஸ்டியன் கதாபாத்திரம் உன்னாலே உன்னாலே சதா போல, கொஞ்சம் பிடிவாதமான கதாபாத்திரம், ஆனாலும் கொஞ்சம் இளகிய மனம் இருக்கத் தான் செய்கிறது. அவருக்கு ஒரு வித்தியாசமான கதாபாத்திரம்.

அறிமுக நாயகி இமயா முதல் படம் போலவே இல்லாமல் நல்ல ஒரு முதிர்ச்சியான நடிப்பை வழங்கியிருக்கிறார். அவரே கதை, திரைக்கதையிலும் பங்கு பெற்றிருக்கிறார் என்பதால் அவருக்கே ஸ்பெஷலாகவும் எழுதிக் கொண்டார் போல. பல காட்சிகளில் நம் மனதில் நிற்கிறார். வாட்ஸாப் மணி சின்ன சின்ன கேரக்டர்களில் தலையை காட்டியவர் இந்த படத்தில் முழுப்படமும் வரும் நாயகனின் நண்பனாக காமெடி, எமோஷன் என எல்லாவிதமான உணர்வுகளையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அஜித் கோஷி, மேத்யூ வர்கீஸ், உமா பத்மநாபன், பிரகதி மஹாவதி என மற்ற நடிகர்களும் துணை கதாபாத்திரங்களில் சிறப்பு சேர்க்கிறார்கள்.

முகேஷ் ஒளிப்பதிவில் ஜெய்ப்பூரின் அழகு நம்மை ஈர்த்துக் கொள்கிறது. ஊட்டியிலும் இதுவரை நாம் பார்க்காத இடங்களை எல்லாம் காட்டியிருக்கிறது அவரது கேமரா. ‘பிரேமம்’ ராஜேஷ் முருகேசன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையும் உனர்வுப்பூர்வமாக அமைந்திருக்கிறது. பரத் விக்ரமன் 2 மணி நேரத்துக்கு கச்சிதமாக படத்தை தொகுத்து தந்திருக்கிறார்.

இயக்குனர் கிஷோர் குமார், இன்றைய ஜென் ஸீ யுகத்தில் மாடர்ன் லவ் கதைகள் வந்து கொண்டிருக்கும் சூழலிலும் உன்னதமாக, ஆத்மார்த்தமான காதல் படத்தை கொடுக்க முயற்சி எடுத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். காதல் படங்கள் என்றாலே அழகியலுக்கு முக்கியத்துவம் இருக்கும், இந்த படத்தில் அதற்கேற்ப கதை நடக்கும் இடங்களை தேர்வு செய்ததும் சிறப்பு. கொஞ்சம் பழைய கதை என தோன்ற வைத்தாலும் உணர்வுப்பூர்வமாக கதையை சொல்லி நம்மை ஒன்ற வைத்து நல்ல ஒரு இதமான தென்றல் போன்ற ஒரு காதல் படத்தை தந்து ரசிகர்களை வெளியே அனுப்புகிறார். நிச்சயம் காதலர்கள் மட்டுமின்றி குடும்பத்தினர் கூட சென்று பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *