தெலுங்கில் Care of Kancherapalem என்ற படத்தை இயக்கிய வெங்கடேஷ் மஹா இயக்கத்தில் சத்யதேவ் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு திரைப்படம் தான் “ராவ் பகதூர்”. சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இந்த படத்தை வெளியிட்டிருப்பது இந்த படத்துக்கான எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவுக்கு ஏற்றியிருக்கிறது. ஒரு அரச குடும்ப பின்னணியில் உருவாகியுள்ள பீரியட் படமான இந்த படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, புவனம் ராமப்பா ராவ் பகதூர் ஒரு ராயல் ஃபேமிலியை சார்ந்தவர். 1991 காலத்தில் மரணப் படுக்கையில் இருந்தும் நடமாடும் அவர், கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடந்து கொள்கிறார். ஒரு முக்கியமான காரணத்துக்காக அவர் இன்னும் உயிரை கையில பிடித்துக் கொண்டிருக்கிறார். அவர் மனதில் இருக்கும் ஒரு சந்தேகம் ஒரு நோய் போல அவரை வாட்டி வதைக்கிறது. இவர் நிலைமை இப்படி என்றால் இவர் மனைவி பூட்டிய அறையில் இருந்து வெளியில் வராமல் தனிமையில் யாருடனும் பேசாமல் இருக்கிறார். ராவ் பஹதூரின் சின்ன வயதில் இருந்தே உடன் இருக்கும் டாக்டர் நண்பன் ஆச்சாரி தான் எல்லா நல்லது கெட்டதையும் உடன் இருந்து பார்த்துக் கொள்கிறார். ராவ் பகதூர் மனதை அரிக்கும் அந்த சந்தேகம் என்ன? அவருக்கும், மனைவிக்கும் என்ன ஆனது? அவர்களது இந்த நிலைக்கு காரணம் என்ன? என்பதே மீதிக்கதை.
நாயகன் சத்ய தேவ். மிகச் சிறந்த ஒரு நடிகராக மாறி ஒரு லைஃப் டைம் பெர்ஃபார்மன்ஸை கொடுத்திருக்கிறார். ஆரம்பத்தில் அவர் முகம் பெரிதாக தெரியவில்லை என்றாலும், ப்ராஸ்தெடிக் மேக்கப்பை தாண்டி அவருடைய நடிப்பு சிறப்பு. முதல் பாதியில் ஒரு மாதிரியும் இரண்டாம் பாதியில் ஒரு மாதிரியுமான நடிப்பை தந்து அசத்தியிருக்கிறார். நாயகி தீபா தாமஸ். நர்ஸ் ரேணுகாவாக அவர் அறிமுக காட்சியிலேயே நம்மை ஈர்க்கிறார். அவரின் கதாபாத்திரத்தின் தன்மையை சொல்ல அந்த ஒரு காட்சியே போதுமானது. ஃபிளாஸ்பேக்கில் நர்ஸாக வரும் காட்சிகளில் இளம் பெண்ணாக நம்மையே காதலில் விழ வைக்கிறார். பின் சிறுவனுக்கு அம்மாவாக வரும்போது நம் மனதில் உயர்ந்து நிற்கிறார்.
டாக்டர் ஆச்சாரியாக வரும் விகாஸ் அளவான தேர்ந்தெடுத்த நடிப்பால் ஸ்கோர் செய்கிறார். நாயகனுக்கு இணையாக படம் முழுக்க வரும் அவர் ரொம்பவே முதிர்ச்சியான ஒரு நடிப்பை தந்து நல்ல நடிகர் என தன்னை நிரூபித்திருக்கிறார். அச்சம்மாவா வரும் பாலா பராசர் ஒவ்வொரு காட்சியிலும் கலக்குகிறார். இன்ஸ்பெக்டர் ஜகந்தாதனாக வரும் ஆனந்த், ப்ரணய் வகா, குணால் கௌஷிக், சிறுவனாக வந்து கவனம் ஈர்க்கும் கிரண் என மற்ற நடிகர்கள் எல்லாருமே சிறந்த தேர்வு.
கார்த்திக் பர்மர் ஒளிப்பதிவு அபாரம். குறைந்த அளவு லொகேஷன்களில் படமாக்கப்பட்டிருந்தாலும் கொஞ்சமும் சலிப்பு தட்டாத வண்ணம் மிக அற்புதமான ஒளிப்பதிவை தந்திருக்கிறார். ஃபிளாஷ்பேக்கில் நாயகன், நாயகி வரும் காட்சிகளை விஷூவல் கவிதை போல வடித்திருக்கிறார். ஸ்மரன் சாய் இசையில் வரும் பாடல்கள் விஷூவலோடு பார்க்க அவ்வளவு அழகாக இருக்கிறது. பின்னணி இசையிலும் அற்புதமான இசையை தந்திருக்கிறார். இயக்குனர் வெங்கடேஷ் மஹாவே படத்தொகுப்பையும் செய்திருக்கிறார். அவர் என்ன நினைத்தாரோ அதை கொடுத்திருக்கிறார்.
இயக்குனர் வெங்கடேஷ் மஹா. தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு தனி ரூட் எடுத்து தனித்துவமான படங்களை கொடுத்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டரை சாதாரணமாக பார்க்கும் எந்த ஒரு ரசிகரும் இந்தி படம் போல என்று நினைப்பார்கள். அந்த வகையில் ஒரு கலர் டோன், பீரியட் என எல்லாமே அப்படி சிரத்தை எடுத்து பிரமாண்டமாகவும் கொடுத்திருக்கிறார். ஆரம்பத்தில் கதைக்குள் செல்லம் கொஞ்ச நேரம் எடுத்து கொள்கிறார். ஆரம்ப காட்சிகள் கொஞ்சம் நெளிய வைத்தாலும் கதை ஃபிளாஷ்பேக்குக்குள் சென்று வந்த பின் நம்மை உட்கார வைக்கிறார்.
நாயனுடன் அவருடைய முன்னோர்கள் பேசுவது போல வரும் காட்சிகள் எல்லாமே ரொம்பவே புதுசு, சிறப்பு. படத்தில் வரும் நிறைய குட்டி குட்டி ஐடியாக்கள், வசனங்கள், காட்சிகள், காமெடி என எல்லாமே தனித்துவமான அனுபவத்தை கொடுத்திருக்கிறது. ராவ் பகதூர் கதாபாத்திரத்தை புரிந்து கொள்வதே மிகப்பெரிய சவால் தான். இப்படிப்பட்ட ஒரு கதையிலும் எமோஷனை அழகாக சொல்லியிருக்கிறார். மொத்தத்தில் தெலுங்கு சினிமாவில் இருந்து வந்திருக்கும் இன்னொரு அற்புதமான திரைப்படம் தான் இந்த “ராவ் பகதூர்”. நிச்சயம் சினிமா விரும்பிகள் பார்த்து ரசிக்கலாம்.

