நூறு சாமி – விமர்சனம்!

சொல்லாமலே படம் துவங்கி ஒவ்வொரு படத்திலும் அழுத்தமான, இதுவரை அதிகம் பேசப்படாத புதுப்புது கதைக்களங்களில் படங்களை தந்து முத்திரை பதிக்கும் சசி, விஜய் ஆண்டனியுடன் பிச்சைக்காரன் பெருவெற்றிக்குப் பிறகு இணைந்துள்ள படம் நூறு சாமி. ஸ்வாசிகா, அஜய் திஷான், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் நடித்திருக்கும் இந்த படம் எப்படி இருக்கு? இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி,25 வயதில் கணவரை இழக்கும் நாயகி ஸ்வாசிகா இரு மகன்களை வைத்துக் கொண்டு அவர்களை மிகவும் சிரமப்பட்டு பல வேலைகளை செய்து படிக்க வைக்கிறார். அவரது குடும்பத்தினர் கூட உறுதுணையாக இல்லாத நிலையிலும் தனி ஒரு மனுஷியாக மகன்களை வளர்த்து கல்லூரி படிக்க வைக்கிறார். இந்நிலையில் மறுமணம் குறித்து ஸ்வாசிகாவுக்கு ஒரு எண்ணம் வர, மூத்த மகன் அஜய் திஷான் அதை அருவருப்பாக நினைத்து அந்த நொடியில் இருந்து அம்மாவிடம் பேசாமல் தவிர்க்கிறார். நாட்கல் ஓட, 5 ஆண்டுகள் கழித்து கல்லூரி படிப்பு முடிந்து சொந்தமாக பயிற்சி நிறுவனம் நடத்துகிறார் அஜய் திஷான். முதலில் எதிர்த்த அஜய் திஷான் பின் மனம் மாறி அம்மாவுக்கு மறுமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார். அந்த எண்ணத்தை அறவே கைவிட்ட ஸ்வாசிகா இந்த முடிவுக்கு என்ன பதில் சொல்கிறார்? அந்த திருமணத்தை அவர்கள் குடும்பம் எப்படி எடுத்துக் கொண்டது? மறுமணம் நடந்ததா? அதற்கு வந்த தடைகள், சமூக தடைகள் எல்லாம் நீங்கியதா? என்பதே மீதிக்கதை.

கதையின் மையக் கதாபாத்திரத்தில் ஸ்வாசிகா, அவருக்காகவே எழுதப்பட்ட கதாபாத்திரம் போல அத்தனை பொருத்தமாக மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கணவனை இழந்து இரு மகன்களுக்காகவே வாழும் ஒரு அம்மாவாக நம் நாட்டின் பல கோடி அம்மாக்களை அப்படியே திரையில் பிரதிபலித்திருக்கிறார். கணவனை இழந்த பெண்கள் வாழ்க்கையே ஒரு சிறை போல என அவர் சொல்லும் காட்சிகள் எல்லாம் ரொம்பவே மனதை தைக்கிறது. விஜய் ஆண்டனியுடனான காட்சிகளிலும் கவித்துவமான அழகு.

விஜய் ஆண்டனி. உண்மையில் இப்படி ஒரு கதையில் ஒரு சப்போர்டிங் கதாபாத்திரமாக வர ஒப்புக் கொண்டதற்கே அவருக்கு பாராட்டுக்கள். இந்த படத்தை தயாரித்து ஸ்வாசிகாவுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் படத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல விஜய் ஆண்டனியின் எண்ட்ரி பேருதவி புரிந்திருக்கிறது. மூத்த மகனாக அஜய் திஷான் மேம்பட்ட நடிப்பை தந்திருக்கிறார். இளைய மகன் சக்தி நல்ல தேர்வு. ஒரு கேவலமான மனிதனாக பாலாஜி சக்திவேல் வழக்கம் போல நல்ல நடிப்பு. லிஜோமோல் ஜோஸ் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் வந்து அவர் பங்கை சிறப்பாக செட்து விட்டு போகிறார். ஸ்வாசிகாவின் சகோதரராக கருணாஸ் கதாபாத்திரம் கொஞ்சம் அதிர்ச்சியையும் விட்டு விட்டு சென்றிருக்கிறது. காவ்யா அணில், பாடினி குமார், பகவதி பெருமாள், வினோதினி வைத்யநாதன், ஜென்சன் திவாகர் என எல்லா நடிகர்களும் அவரவர் பங்கை அழகாக செய்திருக்கிறார்கள்.

தர்ஷன் கிர்லோஷ் ஒளிப்பதிவு படத்துக்கு தேவையான காட்சியமைப்பில் ஈர்க்கிறார். பாலாஜி ஸ்ரீராம் இசையில் அம்மா பாடலும், மாய கனவோ பாடலும் மனதில் தங்குகிறது. பின்னணி இசையிலும் பாலாஜி ஸ்ரீராம் அவர் திறமையை நிரூபித்திருக்கிறார்.

மனதுக்கு நெருக்கமான, நம் அன்றாட வாழ்வில் அனுபவிக்கும் பிரச்சினைகளை சூழல்களை மிக வித்தியாசமான கோணங்களில் மிக அழுத்தமாக தந்து அதை மிகச் சிறந்த படமாக கொடுக்கும் வல்லமை பெற்றவர் இயக்குநர் சசி. சமீப காலங்களிலும் பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை என சிறந்த படங்களை கொடுத்த சசி, மறுமணம் குறித்த ஒரு படத்தை தந்து சமூகத்தை சிந்திக்க வைத்திருக்கிறார். தைரியத்தோடு சமூகத்தை எதிர்த்து செய்யும்போது தான் அது புரட்சியாக மாறுகிறது என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். மறுமணத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எப்படி வரும் என்பதையும் திரைக்கதையில் மெல்ல புரிய வைக்கிறார். அம்மாவை தெய்வமாக பார்க்க வேணாம், அம்மாவை ஒரு மனுஷியாகவும் பாருங்கள் என்ற ஒரு கருத்தோடு படத்தை முடித்திருக்கிறார். நிச்சயம் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய ஒரு சிறந்த படம் இந்த நூறு சாமி என தாராளமாக சொல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *