29 – விமர்சனம்!

லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்பராஜ் இணைந்து தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் “29”. ரத்னகுமார் இயக்க, விது, பிரீத்தி அஸ்ரானி ஜோடியாக நடிக்க, ஷான் ரோல்டான் இசையமைத்திருக்கிறார். இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, சொந்த ஊர் சேலத்தில் இருந்து சென்னைக்கு வந்து வேலை செய்து வரும் விது, 29 வயதிலும் காதல் அனுபவம் இன்றி கிடைத்த வேலையில் சேர்ந்து, தனக்காக அடையாளம் என்ன என்ற கேள்வியோடு ஓடிக் கொண்டிருக்கிறார். விது வேலை செய்யும் கம்பெனியில் நாயகி பிரீத்தி அஸ்ரானி நட்பாக பழகுகிறார். பின் அதுவே காதலாக மாறுகிறது. தந்தை இன்றி தாய் அரவணைப்பில் வளரும் பிரீத்திக்கு படித்து கலெக்டர் ஆக வேண்டும் என்பது லட்சியம். ஆனால் விதுவுக்கு எதிர்கால நோக்கம் எதுவும் இல்லை. இந்த விஷயத்தில் விவாதமாகி பிரீத்தியை பிரிகிறார். நாயகி கலெக்டர் ஆனாரா? நாயகன் புதிதாக லட்சியத்தை அமைத்துக் கொண்டாரா? தான் யார் என்ற அடையாளத்தை கண்டுபிடித்தாரா? காதல் கை கூடியதா? என்பதே மீதிக்கதை.

நாயகன் விது. முகமே தெரியாத ஒரு நடிகராக ஜிகர்தண்டா 2 படத்திலும், ரெட்ரோ படத்தில் மிரட்டலான வில்லனாகவும் நடித்தவர், முதன்முறையாக ஹீரோவாக நடித்திருக்கிறார். திருமண வயதை தாண்டியும் தான் யார் என்ற அடையாளத்தை தேடி அலையும் இளைஞராக அப்படியே பிரதிபலிக்கிறார். ஹீரோவாக முதல் படத்திலேயே ஸ்கோர் செய்திருக்கிறார். நாயகி ப்ரீத்தி அஸ்ராணி, இயற்கையான அழகுடன் இயல்பான நடிப்பால் அவரது கதாபாத்திரத்தை மிக அழகாக செய்திருக்கிறார்.

மாஸ்டர் மகேந்திரன் சர்ப்ரைஸான ஒரு கதாபாத்திரத்தில் வந்து வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். அவினாஷ், லியோனா, பிரேம்குமார், சேனாஷ் ஃபாத்திமா மற்றும் மற்ற நடிகர்கள் ஒவ்வொருவரும் அவரவர் கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு படத்துக்கு கூடுதல் பலம். பெயிண்டிங் போல ஒவ்வொரு காட்சியிலும் மிக அழகாக படம் பிடித்திருக்கிறார். ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் படத்துக்கு பேருதவி புரிந்துள்ளது. பின்னணி இசையும் நம்மை படத்துடன் உணர்வுப்பூர்வமாக இணைக்கிறது.

இயக்குனர் ரத்னகுமார். மேயாத மான் படத்துக்குப் பின் ஒரு காதல் படத்தை தந்திருக்கிறார். இணைய தலைமுறையின் ஆரம்ப கால கட்டத்தில் நடக்கும் ஒரு கதையை, அழகாக கண்முன் நிறுத்தியிருக்கிறார். பேச்சிலர் இளைஞர்களின் வாழ்க்கையையும் தத்ரூபமாக காட்டியிருக்கிறார். முதல் பாதி முழுக்க காதலையும், இரண்டாம் பாதியில் காதலோடு லட்சியம், சமூக விஷயங்களையும் திரைக்கதையில் சொல்லியிருக்கிறார். பல காட்சிகள் தனியாக பார்த்தாலும் ரசிக்க வைக்கும் விதத்தில் இருக்கிறது. வெறும் காதல் படமாக இல்லாமல் அதனூடே தனி மனித அடையாளம், சமூக விஷயங்களையும் சேர்த்தே பேசி நல்ல ஒரு படமாகவும் தந்திருக்கிறார் இயக்குனர். நிச்சயம் அனைத்து தரப்பும் பார்க்கும் ஒரு படம் தான் இந்த “29”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *