இன்றைய சூழலில் காவல்துறையில் பணி புரியும் காவலர்களுக்கு எவ்வளவு மன அழுத்தம் இருக்கும், அவர்கள் குடும்ப வாழ்க்கை எப்படி எல்லாம் இருக்கிறது என செய்திகளிலும், விவாதங்களிலும் பார்த்து வருகிறோம். பல குற்றவாளிகளை தினம் கையாளும் அவர்கள் வாழ்க்கை பின்னணியை மையமாக கொண்டு உருவாகியுள்ள படமே “போலீஸ் ஃபேமிலி”. டூரிஸ்ட் ஃபேமிலி போல இந்த படமும் பெரும் வெற்றி பெறுமா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, கஞ்சா வைத்திருந்ததாக கூறி ஒரு இளைஞரை காவல் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்குகிறார்கள் 4 போலீஸ் அதிகாரிகள். அவர் மயக்க நிலைக்கு செல்ல, அந்த இளைஞரின் தந்தை அரசியல் செல்வாக்கு மிக்க சரவணன் என்று தெரிந்து யாருக்கும் தெரியாத ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அந்த இளைஞரை போட்டு விட்டு சொல்கிறார்கள். மறுநாள் அந்த இளைஞர் இறந்து போனதாக தகவல் வர, காவலர்கள் பதறி போகிறார்கள். தன் மகனை கொலை செய்த காவலர்களை பழிவாங்க துடிக்கிறார் சரவணன். உயர் அதிகாஅரி கொலையாளியை கண்டுபிடிக்கும் வரை நீங்கள் பத்திரமாக இருங்கள் என சொல்லி அனுப்புகிறார். மயக்க நிலையில் இருந்த அந்த இளைஞனை கொன்றது யார்? கொலைக்கான காரணம் என்ன? சரவணன் காவலர்களை பழி வாங்கினாரா? என்பதே மீதிக்கதை.
படத்தில் தெரிந்த முகங்கள் என்று பார்த்தால் சரவணன் மற்றும் காதல் சுகுமார் தான். குறிப்பாக சரவணன் தன் மகனுக்காக ரவுடி தொழிலை விட்டு திருந்தி வாழ்பவர், அந்த மகனே கொல்லப்பட்ட பின் எந்த எல்லைக்கு போவார் என்பதை நடிப்பின் மூலம் அழுத்தமாக காட்டியிருக்கிறார். காதல் சுகுமார் அந்த நான்கு காவலர்களில் ஒருவராக, திருமணம் செய்து கொள்ளாமல் தன் தந்தையை கவனித்துக் கொண்டு பணியாற்றும் நபராக நல்ல நடிப்பை வழங்கியுள்ளார்.
மற்ற மூன்று காவலர்களில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக வரும் ராஜா மலைசாமி, இரண்டு வயது வந்த மகள்களின் தந்தையாக, நடுத்தர வயது அதிகாரியாக நன்றாகவே நடித்துள்ளார். அதிகாரியின் மகளாக வரும் நாயகி நிஷா தூபே அவருக்கு கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். சுரேகா. ரோஜன் லியோன், தாஸ் சாந்தகுமார், செல்வா, ரத்தினம் என மற்ற நடிகர்களும் அவரவர் பங்கை செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஜெயகுமார் தங்கவேல் குறைந்த பட்ஜெட் படம் போள தெரியாத அளவுக்கு சிறப்பாக காட்சிகளை அமைத்திருக்கிறார். கதைக்கு ஏற்ற ஒளிப்பதிவு. ஜெயா கே.தாஸின் இசையில் பாடல்கள், பின்னணி இசை இரண்டும் ஓகே ரகம்.
இன்றைய சமூகத்தில் நடைபெறும் பல சம்பவங்களை மனதில் வைத்து இப்படி நடந்தால் என்னவாகும் என கதை, திரைக்கதை எழுதியிருப்பார் போல இயக்குனர் பாலு. காவல் நிலைய மரணங்கள் எளிய மனிதர்களுக்கு மட்டும் நடந்து வருவதை கொஞ்சம் மாற்றி ஒரு சுவாரஸ்ய திரில்லர் படமாக தந்திருக்கிறார். பட்ஜெட் படம் என்றாலும் சொல்ல வந்த கதையை தெளிவாக சொல்லி ஜெயித்திருக்கிறார். நிச்சயம் பார்க்கக் கூடிய படம் தான் இந்த போலீஸ் ஃபேமிலி.

