கெணத்த காணோம் – விமர்சனம்!

ஒரு கிடாயின் கருணை மனு என்ற மிக வித்தியாசமான, உலகத்தரமான சினிமாவை தமிழில் தந்தவர் இயக்குனர் சுரேஷ் சங்கையா. அதன் பின் பிரேம்ஜி நடித்த சத்திய சோதனை என்ற படத்தை தந்தவர் அடுத்ததாக இயக்கியிருக்கும் படம் கெணத்த காணோம். யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த படம் ரிலீஸூக்கு முன்பே இயக்குனர் மறைந்தது துரதிருஷ்டம். அவர் இயக்கிய கடைசி படமான இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, தண்ணீர் இல்லாத ஒரு ஊர், மழை பெய்ய வேண்டி நிற்கிறது அந்த கிராமம். அந்த ஊரில் பூசாரியாக இருக்கும் யோகிபாபுவுக்கு திருமண வயதை கடந்தும் திருமணம் ஆகவில்லை. இந்த சூழலில் நாயகி லவ்லினை காதலிக்கிறார் யோகி பாபு. காதலுக்கு எதிரியாக அவர் தந்தை வந்து நிற்கிறார். தண்ணீர் இருக்கும் ஊரில் தான் மகளை திருமணம் செய்து கொடுப்பேன் என சொல்லி தடை போடுகிறார். நீர் வளம் பார்க்கும் பார்ப்பவர் யோகி பாபு வீட்டில் நீரோட்டம் இருப்பதாக சொல்கிறார். ஊருக்கு தண்ணீர் கிடைக்க  வேண்டும் என்பதால் அவர் வீட்டு நிலத்தில் கிணறு வெட்ட அனுமதிக்கிறார் யோகி பாபு. அதன் பின் கிணறு வெட்ட தண்ணீர் கிடைத்ததா? ஊர் மக்கள் தண்ணீர் பஞ்சம் தீர்ந்ததா? கிணற்றில் என்ன கிடைத்தது? என்பதே மீதிக்கதை.

கதையின் நாயகனாக யோகிபாபு. எத்தனையோ படங்களில் நடித்தாலும் அவரை கொண்டாட வைக்கும் படங்கள் ஒரு சில மட்டுமே. மண்டேலா போன்ற படங்கள் அவரை எல்லா விதத்திலும் பெருமைப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் இந்த படத்தில் கொஞ்சம் தனித்துவமாகவே தெரிகிறார். வழக்கமான நக்கல், நையாண்டியில் ரசிக்க வைக்கிறார். முக்கியமான எமோஷனல் காட்சிகளிலும் உணர்வுப் பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

நாயகி லவ்லின். கொஞ்சம் மாஸாக என்ட்ரி கொடுக்கும் இவர் திருமணம் செய்தால் யோகி பாபுவை தான் செய்து கொள்வேன் என்று சொல்வதில் ஆரம்பித்து படித்த, புரட்சி பெண்ணாக மனதில் பதிகிறார். சமீப காலங்களில் அதிகமான கவனிக்கப்படும் நடிகையாக மாறியிருக்கும் ரேச்சல் ரெபேக்கா வழக்கம் போல யதார்த்தமான நடிப்பை தந்திருக்கிறார். ஜார்ஜ் மரியான், மொட்டை ராஜேந்திரன், கவிதா பாரதி என மற்ற நடிகர்களும் நல்ல நடிப்பை தந்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் தியாகராஜனின் ஒளிப்பதிவு படத்தை மண் மணம் மாறாமல் அதே நேட்டிவிட்டியோடு அழகாக படம் பிடித்திருக்கிறார். நிவாஸ் கே பிரசன்னா இசை படத்தின் ஆன்மாவாக அமைந்திருக்கிறது. பல நேரங்களில் படத்தை அடுத்த தளத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது.

இயக்குனர் சுரேஷ் சங்கையா. எடுத்துக் கொக்கூம் ஒவ்வொரு கதைக்களமுமே தனித்துவமானது. அதை மிக யதார்த்தமாக அதே நேட்டிவிட்டியோடு கொடுப்பதில் வல்லவர். மையக் கதையை சுற்றி கதாபாத்திரங்களை பின்னிய விதமும், அதற்கான நடிகர்கள் தேர்வும், யதார்த்தமான நடிப்பும் என அதிலேயே பாதி வெற்றியை பெறுகிறார். தண்ணீருக்கு அவதிப்படும் மக்கள் வாழ்க்கையை அரசு எப்படு பார்க்கிறது என்பதையும் நையாண்டி படத்தில் சொல்லி ரசிக்கவும், சிந்திக்கவும் வைத்திருக்கிறார் சுரேஷ் சங்கையா. மொத்தத்தில் ஒரு நல்ல சினிமாவாக அனைவரும் நிச்சயம் பார்க்கக் கூடிய படம் தான் இந்த “கெணத்த காணோம்”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *